ஒரு வைரல் யூடியூப் வீடியோ இப்படி விரிகிறது.
பாகிஸ்தான் பாடல் நிகழ்ச்சி ஒன்றுக்காகப் போடப்பட்ட செட் அது. விதவிதமான இசைக் கருவிகள், பாடல் பதிவு செய்யப் பயன்படும் மைக்குகள், வண்ண விளக்குகள் என அந்த இடம் கண்ணைப்பறிக்கிறது. அந்தத் தேர்ந்த இசையமைப்பாளர், பாடகர் உள்ளத்தை உருக்கும் பாடல் ஒன்றை பாடத் தொடங்குகிறார். ஒரு பெண்ணின் பேரழகை வர்ணித்துவிட்டு, அவளைப் படைத்தக் கடவுளை பாராட்டும் பாடல். அவருடன் இணைந்து அந்தப் பாடலைப் பாடுவதற்காக ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். பாடல் தொடங்கி அதன் மெய்சிலிர்க்க வைக்கும் இசை மற்றும் வசீகரிக்கும் வரிகளில் நீங்கள் உங்களை மறக்கும் தருவாயில் அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணின் முகம் அடிக்கடி, ஆனால் சில வினாடிகள் மட்டுமே காட்டப்படுகிறது. உங்கள் மனதில் எதுவும் பதியவில்லை. சரியாக 2:40 நிமிடத்தில் அந்தப் பெண் பாடத் தொடங்குகிறாள். காந்தக் குரல். நிச்சயம் பேரழகிதான். அதுவரை, பாடலின் அழகானப் பொருளை, கொடுக்கப்பட்ட சப்டைட்டில்கள் (Subtitles) வாயிலாகப் புரிந்துகொண்டிருந்த நீங்கள், இப்போது அதைப் பார்க்கக்கூட மறந்துவிட்டீர்கள். பாடிக்கொண்டிருக்கும்போதே, தற்செயல் போல, அந்தப் பெண் கேமராவைப் பார்க்க, அவளிடம் ஒரு சிறிய புன்முறுவல். அந்த நொடியிலோ, அல்லது அதற்கு முன்பாகவோ, அல்லது அந்தப் பாடலின் இறுதியிலோ நீங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டீர்கள். அது, அந்த வீடியோவை ஷேர் செய்வதென்று! அந்தப் பெண்ணின் பெயர் மொமினா மஸ்தேசான் (Momina Mustehsan). அந்தப் பாடல்… சரி, அந்த வரலாறு இப்போது தேவையில்லை.
Screenshot From YouTube
கேள்வி இதுதான்: எதற்காக அந்தப் பாடலை நீங்கள் ஷேர் செய்தீர்கள்?
அது ஒரு சிறந்த பாடல். அந்தப் பெண்ணுக்கு காந்தக் குரல். அந்த ஆணின் குரலில் மாபெரும் ஆளுமை. ஆகச்சிறந்த வரிகள். அந்தப் பெண் பேரழகி. இன்னும்… இன்னும்… பல நூறு காரணங்கள் அடுக்கி விடலாம். ஆனால், இவை அனைத்தும் மேலோட்டமான காரணங்கள் மட்டுமே. உங்கள் ஆழ்மனதினுள்ளே இறங்கி சுயபரிசோதனை செய்தால், நீங்கள் சொல்ல மறுத்த, உள்ளறையில் பூட்டிவைத்த காரணங்கள் பல கிடைக்கும். இதை ஷேர் செய்வதால், என் நண்பர்கள் இந்தப் பாடலை பார்ப்பார்கள். எனக்கு நல்ல இசை ரசனையிருக்கிறது என்று அவர்கள் உணர்வார்கள். அதில் எனக்கு ஒரு பெருமிதம். பாடலைப் பகிரும்போது அந்தப் பெண்ணின் அழகை வர்ணித்து இரண்டு வரிகள் சேர்த்தால், நண்பர்கள் கலாய்ப்பார்கள். ஃபேஸ்புக்கில் ரியாக்ஷன்கள் அதிகம் வரும். இன்னும் ஆழ்மனதுக்குள் சென்றால், இன்னமும் நீங்கள் சொல்ல மறுத்துக்கொண்டிருக்கும் காரணங்கள் கிடைக்கலாம். அது இப்போது தேவையில்லை. இந்த வீடியோவை பகிர்வதால் யாருக்கும் எந்த நஷ்டமுமில்லை. சொல்லப்போனால் ஒரு நல்ல பாடலை நண்பர்களைக் கேட்கவைத்த திருப்தி கிடைக்கும். இது சரி. ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால், தவறான வீடியோக்கள் பல வைரல் ஆகிறதே? அதற்கு என்ன காரணம்?
உங்கள் கம்ப்யூட்டரில் யூடியூப் தளம் சென்று இடதுபுறமுள்ள ‘Trending’ பட்டனை அழுத்துங்கள். வரும் லிஸ்டில் முதல் பத்து வீடியோக்களில், ஏழு வீடியோக்களாவது புறம் பேசுவது, தவறாகப் பேசுவது, சகித்துக்கொள்ள முடியாத தகாத செய்திகளைப் பரப்புவது, கள்ளத் தொடர்பு செய்திகள், நடிகைகள் குறித்த கிசுகிசு, முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளை முன்னிறுத்துவது என ஒவ்வொன்றும் ஒவ்வொரு தவறான கருத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும். அதைப் பொதுவாக ஒரு கூண்டுக்குள் அடைத்தால், ‘நெகட்டிவ் வீடியோக்கள்’ என அந்தக் கூண்டுக்குப் பெயர் வைக்கலாம். ஒரு நல்ல வீடியோ ஒரு வருடம் யூடியூபில் இருந்து வைரலாகி சம்பாதித்த வியூஸ்களை எல்லாம் அது வெறும் ஐந்தே நாள்களில்கூட முறியடித்து விடும். யூடியூப், ஃபேஸ்புக் போன்ற ஒரு தளத்தில் அன்று பகிரப்பட்ட இந்த வகை வீடியோக்கள், தூங்கியெழுந்து பார்த்தால், எல்லாச் சமூக வலைத்தளங்களிலும் ஆட்சி செய்துகொண்டிருக்கும். பாஸிட்டிவான விஷயங்களுக்குக் கிடைக்காத ஆகச்சிறந்த சிகப்புக் கம்பள வரவேற்பு, இத்தகைய வீடியோக்களுக்கு ஏன் கிடைக்கிறது?
சமீபத்திய வைரல் வீடியோ ஒன்றை எடுத்துக்கொள்வோம். யாரோ, யாரையோ, எதற்காகவோ திட்டுகிறார்கள். ஒரு கூட்டம் அதனிடம் எதிர்பார்க்கப்படாத, மிகவும் இழிவான ஒன்றைச் செய்கிறது. இப்படியெல்லாம் யோசிப்பதே தவறு, அருவருப்பானது என்று நினைக்கும் விஷயங்களை, பொதுவெளியில் தன் பேச்சில் வெளிப்படுத்துகிறது. இந்த வீடியோ பார்த்தவுடன் நாம் செய்த முதல் செயல் என்ன?
“மச்சான், இங்கே பாரேன், என்னா கிழி, கிழிக்கிறாங்க!” என்று அந்த வீடியோ பகிரப்பட்டிருக்கும். இப்படி அதனால் ஈர்க்கப்பட்டோ அல்லது கோபப்பட்டோ, ஒரு நொடி கூட சிந்திக்காமல் ஷேர் பட்டனை அழுத்திவிடுவோம். அவ்வகை வீடியோக்களை வெளியிட்டவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதும் அதைத்தான். உங்கள் ஷேர், அதை நீங்கள் திட்டிக்கொண்டே செய்தாலும் சரி, பாராட்டிக்கொண்டே செய்தாலும் சரி, அந்த வீடியோ வைரல்தானே ஆகிறது! உங்களுக்கு அது ஒரு தவறான வீடியோ என்று தோன்றுகிறது. எல்லோருக்கும் அப்படியே தோன்றுமா? பார்த்த ஆயிரம் பேர்களில் ஒருவரேனும், அந்த வீடியோ கூறுவது சரியான பதிலடிதான் என்று நினைக்க மாட்டார்களா? அப்படி ஒரு மனிதன் மாறினாலும், அதற்குக் காரணம், அதை ஒரு முறை ஷேர் செய்த அந்த ஆயிரம் பேரும்தானே? ஒரு கருத்தை பகிர்வது, பரப்புவது ஒருவரின் தனியுரிமை என்றாலும், ஒரு சில நேரங்களில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை நாம் கருத்தில் கொள்வதேயில்லை. தவறான கருத்துகளை பிரதிபலிக்கும் வீடியோக்கள் வெளியிடுபவர்கள் இந்த வித்தியாசத்தை நாம் உணராமல் இருப்பதால்தான் வெற்றியடைகிறார்கள்.
அந்த வீடியோக்களுக்கு டிஸ்லைக்குகள் மற்றும் திட்டி வந்த கமெண்டுகள் அதிகம்தான். ஆனால், அது ஏதேனும் ஒரு வகையில் இன்னமும் உங்கள் நியூஸ்ஃபீடில் இருந்து கொண்டுதானே இருக்கிறது? ஆங்கிலத்தில் இதை ‘infamous videos’ என்கிறார்கள். அதாவது அதனுள்ளே இருக்கும் தகாத விஷயங்களுக்காகப் பிரபலமான வீடியோ. குறிப்பு: ‘பிரபலம்’!
ஒவ்வொரு வீடியோவும் ஒரு கருத்தை முன்வைக்கிறது. ஒரு கருத்து எப்படிப்பட்டதாக இருந்தால், அதை மற்றவர்களுக்குப் பரப்ப முற்படுவீர்கள்? கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் இந்தக் கேள்விக்குப் பதிலாக, பின்வரும் மூன்று காரணங்களில் எதோ ஒன்றுதான் இருக்க முடியும் என்று கூறுகிறார்.
- அது நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
- நல்லதோ, கெட்டதோ, ஏதோ ஓர் உணர்ச்சியை அது தூண்டவேண்டும். மகிழ்ச்சி, திகைப்பு, உத்வேகம், சிரிப்பு, அவமதிப்பு, வெறுப்பு, கோபம், சோகம், பெருமை, ஏக்கம், ஆச்சர்யம், அதிர்ச்சி, குழப்பம், பயம் என்று அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
- அது உங்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.
இந்த மூன்றில் ஒன்றை அந்தக் கருத்து செய்தால் கூட போதும், அது ஏதோ ஒரு வடிவத்தில் உங்கள் நண்பர்களைச் சென்றடையும். அந்தக் கருத்து ஒரு வீடியோ வாயிலாகப் பகிரப்பட்டால் இன்னமும் அதற்கு வீரியம் ஜாஸ்தி. வெறும் வார்த்தைகள், அசையாப் படங்களை விடவும், அது நம்மை அதிகமாக உலுக்கி விடும். இதைத் தவிர, வேறு சில காரணங்களையும் உளவியல் முன்வைக்கிறது.
“உணர்ச்சிவசப்படுதல்! அதுவும் எதிர்மறை உணர்வுகள்! இதுதான் ஒரு வீடியோவை பகிரவைக்கும் முக்கியமான காரணி!” என்கிறார் ‘Contagious: Why Things Catch On?’ (தொற்று: ஏன் ஒரு விஷயம் பரவுகிறது?) என்ற புத்தகத்தின் எழுத்தாளர். “ஆர்வம், கோபம், சர்ச்சை. இந்த மூன்றையும் போல வேறு எதுவும் நம் ‘ஷேரிங்’ செயலைத் தூண்டிவிடுவதில்லை” என்பது இவர் கருத்து.
இதற்கடுத்த காரணம் எது என்பதை 2011-ம் ஆண்டு ‘Psychological Science’ என்ற தளத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வுக்கட்டுரை விளக்குகிறது. உங்கள் உணர்வைத் தூண்டும் ஒரு வீடியோவை, நீங்கள் வேறு ஏதேனும் ஒரு செயலை செய்யும்போது பார்க்க நேர்ந்தால் அதை நீங்கள் நிச்சயம் ஷேர் செய்வீர்கள். அதாவது, உடல் உழைப்பு தேவைப்படும் ஒரு செயலை நீங்கள் செய்கிறீர்கள். அப்போது ஒரு வீடியோவை நீங்கள் காண நேர்கிறது. உங்கள் மூளை நீங்கள் செய்யும் உடல் உழைப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால், இந்த வீடியோவை ஷேர் செய்வது சரியா, தவறா என்ற தர்க்கத்துக்குள் அது ஆழமாகப் போகவே போகாது. அதைப் பொறுத்தவரையில், நீங்கள் உடல் உழைப்பை உறிஞ்சும் காரியம் ஒன்றைச் செய்கிறீர்கள். அதில் கவனம் தேவை. எனவே, இந்த வீடியோவைச் சுற்றி நீங்கள் எடுக்கும் முடிவை அது அவ்வளவாகச் சீண்டாது. நீங்களும் அந்த வீடியோ உங்களைத் தூண்டிய உணர்வுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அதை ஷேர் செய்துவிட்டு அமைதியாகி விடுகிறீர்கள். இதெல்லாம் நீங்கள் யோசித்துப் பார்ப்பதற்கு முன், அதாவது ஒரு சில நொடிகளில் நடந்து விடுகிறது.
அந்த ஆய்வுக் கட்டுரையில், 93 மாணவர்களைக்கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனை ஒன்றைக்குறித்து விளக்குகிறார்கள். அவர்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் தருவாயில் ஒரு செய்திக் கட்டுரையை படிக்கக் கொடுக்கிறார்கள். விருப்பப்பட்டால், அதை அவர்கள் நண்பர்களுக்கு இ-மெயில் அனுப்பிக்கொள்ளலாம். இத்தனைக்கும் அது பகிரப்படும் அளவுக்குப் பெரிய விஷயம் எல்லாம் இல்லை. ஆனால், உடற்பயிற்சியின்போது அதைப் படித்த 75 சதவிகிதம் பேர், அதை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளனர். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என அந்த ‘சமீபத்திய வைரல் வீடியோ’ பரவலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது பெரும்பாலானோர், ஏதேனும் தீவிரமான வேலைகளுக்கு நடுவிலோ, அல்லது நண்பர்களின் கட்டாயத்தின் பேரிலோ பார்த்து அதனால் ‘ஷேர்’ செய்யத் தூண்டப்பட்டு இருக்கலாம்.
“நண்பர்கள் அனைவரும் பகிர்ந்துவிட்டார்கள். நாம் பகிரவில்லை என்றால் நன்றாக இருக்காது”, “எனக்குக் கெட்டவார்த்தைகள் கேட்கப் பிடிக்காது. இதில் என்ன இருக்கிறது என்று கேட்டு சொல்லவும்”, “இந்த விஷயத்தை என் நட்பு வட்டத்திலிருப்பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதை அவர்களுக்குக் கொண்டு சேர்த்த முதல் நபர் நானாகத்தான் இருக்க வேண்டும்!”, “நான் உண்மையில் அவர்களைத் திட்டி பதிவுசெய்ய, அவர்களின் நிஜ முகத்தை உலகுக்குக் காட்டவே அதைப் பகிர்ந்தேன்!” என்று அந்த வைரல் வீடியோ பகிரப்பட்டதற்கு நாம் ஏகப்பட்ட காரணங்களை அடுக்கலாம். ஆனால், அது அடைந்த வெற்றி, அதேபோல் பல கூட்டங்களை அத்தகைய வீடியோக்களை உருவாக்கத் தூண்டியிருக்கிறது. நாமும் அந்தக் கூட்டம் போலப் பிரபலமாவோம், என அதே இடத்தைச் சேர்ந்த வேறு சிலரும் தற்போது முயன்ற வண்ணம் உள்ளனர்.
“Infamous” என்பது ஒரு போதை. அது நாம் தவறான விஷயத்துக்காகவே முன்னிறுத்தப்படுகிறோம், நாம் தவறுதான் செய்கிறோம் என்பதைக்கூட புரிந்துகொள்ள விடாது. ‘பிரபலமாகிறோம்’ என்பதே அதன் தர்க்கமாக இருக்கும். அவர்களிடம் இருந்து உங்களைக் காத்துக்கொள்ள, அவர்களின் “Infamous” போதைக்கு நீங்கள் உதவி செய்யாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அடுத்த முறை ‘ஷேர்’ பட்டன் அழுத்தும் முன், இரண்டு நிமிடம் யோசனை செய்யுங்கள். ஒரு தகாத வீடியோ மற்றவர்களுக்கு உங்கள் வாயிலாகச் செல்வதை தடுக்கலாம்.