ஒரு போட்டி. உங்களுடைய மொபைல் எண்ணைத் தவிர்த்து வேறொருவரின் மொபைல் எண்ணைக் கூறச் சொன்னால் எத்தனை பேருடைய மொபைல் எண்ணைக் கூற முடியும்? அதிகபட்சமாக இரண்டு முதல் ஐந்து எண்கள் வரை பலருக்கு ஞாபகம் வரக்கூடும். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு மொபைல்கள் பரவலாகப் புழக்கத்திற்கு வராத காலகட்டத்தில் எத்தனையோ தொலைபேசி எண்களை ஞாபகம் வைத்திருந்தோம். இன்றைக்கோ நிலைமை வேறு. பலருக்கு அவர்களின் மொபைல் எண் கூட ஞாபகத்தில் இருப்பதில்லை. அருகில் இருக்கும் கடைக்குச் செல்கிறீர்கள். பத்து பொருள்களை வாங்கிய பின்பு அதன் மொத்த விலையை உங்களால் கணக்கிட முடிகிறதா? இல்லை அப்பொழுதும் கை மொபைலில் இருக்கும் கால்குலேட்டரை நோக்கித்தான் செல்கிறதா? இந்தப் பரிசோதனைகளையெல்லாம் விட்டுவிட்டு நம் அன்றாட வாழ்கையையே கொஞ்சம் அலசுவோம்.
காலையில் எழுந்தவுடன் முதலில் நீங்கள் பார்ப்பது எது? இரவில் இயல்பாக தூக்கம் வருகிறதா? தூரத்தில் இருக்கும் பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடிகிறதா? பார்வைத்திறன் குறைவாக இருப்பதாக எப்பொழுதாவது தோன்றியிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கும் நீங்கள் சொல்லப்போகும் பதிலுக்கும் ஸ்மார்ட்போனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 70% பேர் கழிப்பறை உட்பட எல்லா இடத்திற்கும் எடுத்துச்செல்கிறார்கள். 18 வயது முதல் 24 வயது வரையுடையவர்களில் 80% பேர் தூங்கும் பொழுதும் மொபைலை அருகில் இருக்குமாறு வைத்துக்கொள்கிறார்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு நபர் நடு இரவில் எழுந்தால் காரணமேயில்லாமல் மொபைலைப் பார்க்கிறார்களாம்.
ஒரு உடலை சார்ந்து வாழும் ஒட்டுண்ணிகள் போலத்தான் ஸ்மார்ட்போன்கள் நம்மோடு இருக்கின்றன. காலையில் எழுந்ததும் கையோடு ஒட்டிக்கொள்ளும் மொபைல்கள் இரவில் தூங்கும் பொழுது நம்மை அறியாமலேயே கையிலிருந்து பிரியும் வகையில்தான் இன்றைக்குப் பெரும்பாலானோரின் ஸ்மார்ட்போன் பயன்பாடு இருக்கிறது. இப்படி அதீதமான ஸ்மார்ட்போன் பயன்பாடு உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பதிப்புகளை உருவாக்குகிறது. ஆனால் அன்றாட வாழ்வில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதால் நம்மில் பலரும் அதை உணர்வதில்லை.
ஸ்மார்ட்போனைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள்:
ஸ்மார்ட்போன்களைத் தொடர்சியாகப் பயன்படுத்துவதால் உடலில் முதலில் பாதிப்படைய வாய்ப்புள்ள உறுப்பு கண்கள்தாம். மனிதனின் கண்கள் வெகுதொலைவில் இருப்பவற்றைக் கூட காணும் திறன் கொண்டவை. தொடக்க காலங்களில் வேட்டையாடும் பொழுது தொலைதூரத்தில் இருக்கும் விலங்குகளைக் கூட எளிதில் பார்க்க முடிந்தது. ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு நாளின் பெரும்பாலான நேரம் மொபைலின் திரையைப் பார்ப்பதிலேயே கழிகிறது. வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் இப்பொழுது போல எந்தக் காலகட்டத்திலும் கிட்டப்பார்வையை மட்டும் மனிதன் பயன்படுத்தியிருப்பதற்கு வாய்ப்பில்லை.
கணினி போன்ற திரைகளைப் பார்ப்பதாலும் பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் மொபைல் திரை சற்று அதிகமாக பாதிப்பைத் தரக்கூடும். எடுத்துக்காட்டாக கணினியில் எழுத்துகளை அதிகமாகப் பயன்படுத்தும் MS Word, MS Excel போன்றவற்றில் எழுத்துகளின் அளவு 11 அல்லது 12 ஆக இருக்கும். ஆனால் மொபைலில் அதை விட பல மடங்கு குறைவான அளவுள்ள எழுத்துகளைப் பார்ப்பதற்கு கண்களைப் பயன்படுத்துகிறோம். இதே நிலை தொடர்ச்சியாக நீடித்தால் கண்களில் இருக்கும் தசைகள் தளர்வடையக்கூடும். ஒரு சில நேரங்களில் அருகில் தொடர்ச்சியாக பார்த்துவிட்டு தொலைதூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும் பொழுது மங்கலாகத் தெரிவது இதன் காரணமாகத்தான். இதனால் தூரப்பார்வையில் குறைபாடு ஏற்படலாம். அதிக நேரம் கண்ணிமைக்காமல் திரையைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் கண்களின் ஈரப்பதம் வறண்டுபோகக்கூடும். ஸ்மார்ட்போனின் திரையிலிருந்து வெளியாகும் நீலம் மற்றும் ஊதா நிற ஒளிகள் மற்றும் அதிகப்படியான வெளிச்சத்தால் கண் விழித்திரையில் பாதிப்பு ஏற்படலாம்.
கண்களைத் தவிர்த்துப் பார்த்தால் கைகளில் வைத்திருக்கும் பொழுது பெருவிரலை அதிகமாகப் பயன்படுத்துவதால் விரல்களின் இணைப்புகளில் வலி ஏற்படக்கூடும். தொடர்ச்சியாக கீழே குனிந்து கொண்டே இருப்பதால் கழுத்துப் பகுதிகளிலும் வலி ஏற்பட வாய்ப்புண்டு.
உடல் ரீதியாக மட்டுமன்றி உளவியல் ரீதியாகவும் பாதிப்புகள் உருவாகின்றன. ஸ்மார்ட்போனை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதால் மூளையின் அடிப்படை சிந்திக்கும் திறன் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். எண்களை சுலபமாக ஞாபகத்தில் வைக்க முடியாமல் போவதற்கும், ஒரு சிறிய கணக்கைக் கூட போட முடியாமல் கால்குலேட்டரை தேடுவதற்கும் காரணம் இதுதான். மற்றொரு சிக்கலான உளவியல் பிரச்னை அதீத சிந்தனை. சாதாரணமாக ஒரு தகவலைப் கேள்விப்பட்டால் கூட அதைப் பற்றி அதிகமாகக் கேள்வி எழுப்புவது, அதன் ஆதரங்களையோ பின்புலங்களை ஆராய்ந்து கொண்டே இருப்பது போன்றவை அதீதச் சிந்தனையின் வெளிப்பாடுகள். ஒரு விஷயத்தை கேள்வி கேட்பது சகஜம்தான் என்றாலும் இயல்பிற்கு மாறாக அதைப்பற்றியே தீவிரமாகச் சிந்திப்பது என்பது நிச்சயம் பிரச்னைதான்.
அதிக நேரம் திரையில் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் கண்ணிலிருந்து மூளைக்குத் தகவல்களைக் கடத்தும் நரம்புகள் சோர்வடையும். அதன் காரணமாக கண்களை மூடினாலும் அது தவறுதலாக தகவல்களை அனுப்புவதால் மாயபிம்பங்கள் தோன்றலாம். இதனால் தூக்கம் பாதிக்கப்படலாம். இரவு அதிக நேரம் விழித்திருப்பதால் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படுவதாலும் உளவியல் தொடர்பான பிரச்னைகள் தோன்றலாம்.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைப்பது எப்படி?
அதிக நேரம் மொபைலின் திரையையே பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்து சுற்றியிருக்கும் விஷயங்களிலும் பார்வையைச் செலுத்தலாம். தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் மொபைல் பயன்பாட்டை தவிர்க்கலாம்.
இரவு நேரத்தில் மொபைல் திரையின் வெளிச்சத்தை குறைத்துப் பயன்படுத்தலாம். ஸ்மார்ட்போனில் ஏதாவது படிக்க வேண்டுமெனில் மொபைலில் அதற்கென தனியாக வசதிகள் இருக்கும் அதைப் பயன்படுத்தலாம்.
மறந்துவிடும் என்பதற்காக மொபைலிலேயே அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்வதைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்கள் தருவதை தவிர்க்கலாம்.
தேவையில்லாத நேரங்களில் மொபைலை கையில் எடுப்பதை தவிர்க்கலாம்.