தமிழ் மக்கள் 2005ல் செய்த தவறை இந்த முறையும் செய்யக்கூடாது: அமைச்சர் விஜயகலா

‘2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்காமல்விட்ட தவறை, தமிழ் மக்கள் மீளவும் செய்யக்கூடாது. கடந்த 3 ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி பல நல்ல விடயங்களை வடக்கில் செய்து முடித்திருக்கிறது’.  இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

kalaநடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில் அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை யாழ்ப்பாணத்தில்  வெளியிட்டு வைக்கப்பட்டது. அதனை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் விஜயகலா மகேஸவரன் மேலும் தெரிவித்ததாவது:
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளை நினைவுகூர முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தைக் கடைப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

2009ஆம் ஆண்டு மே 18வரை முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் எமது உறவுகள் பலர் உயிரிழந்தனர். அப்போது 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு – கிழக்கில் இருந்தனர். எனினும் அந்த மக்களுக்காக அவர்கள் குரல் கொடுத்தார்களா? என மக்கள் சிந்திக்கவேண்டும்.அவர்களில் சிலர் இன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். சிலர் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தனர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்தே தற்போது உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் இன்று பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றனர். அன்று மக்களுக்காக குரல் கொடுக்க முடியாதவர்களை நாம் இன்று ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்கட்டபட்ட நிலையில்தான் அன்றும் இருந்தார்கள் இன்று இருக்கிறார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார் .