யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆனைக்கோட்டை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் மர்ம நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.தனிமையில், உறவினர் ஒருவரின் உதவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா என்ற மூதாட்டியே தலையில் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவரது பெறாமகன் கிளிநொச்சியில் வசித்து வருகின்றார். வழமையாக பெறாமகன் வந்து பார்வையிட்டு செல்வதுடன், இவருக்கான உணவுகளை வேறு நபர்களிடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.அதேநேரம், இந்த மூதாட்டிக்கு பாதுகாப்பாக அவரது மைத்துனர் ஒருவர் வழமையாக இரவில் தங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வயோதிபப் பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதேவேளை, மூதாட்டியின் நகைகள் காணாமல் போயுள்ளமையினால் திருட்டிற்காக இந்த கொலை சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.