மர்ம நபர்கள் யாரோ சிலர், கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி நள்ளிரவு அன்று என் வீட்டின் மீது கற்களையும் கட்டைகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தி.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது எதிர்வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் போலீஸார் பார்வையிட்டனர். அதில், தீபாவே தனது ஆள்களைச் செட் செய்து அப்படியொரு சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரியவந்தது. இதனால், காவலர்கள் தீபாவைக் கடுமையாக எச்சரித்துவிட்டுச் சென்றனர். ஏன், தீபா இப்படிச் செய்யவேண்டும்? விவரமறிந்தவர்களிடம் பேசினோம்.
“ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அரசியலில் காலடி எடுத்துவைத்த தீபா, ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்கிற கட்சியை ஆரம்பித்து மக்களைத் தன் பக்கம் இழுத்தார். பிறகு, கொஞ்ச நாள்களில் பணம்தான் இவரின் குறிக்கோளாக இருக்க, தன்னைச் சந்திக்க வந்த தொண்டர்களிடம் நன்கொடை வசூலிப்பது, ‘பொறுப்பு தருகிறேன்’ என்று சொல்லி பணம் பறித்திருக்கிறார். இதில் பாதிக்கப்பட்ட ‘ஈ.சி.ஆர்.’ ராமச்சந்திரன், ‘தன்னிடம் 1.12 கோடி ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு தீபா என்னை ஏமாற்றிவிட்டார்’ எனக் கடந்த 11-01-2018 அன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இவருடைய புகாருக்குப் பிறகு, ‘தாங்களும் தீபாவால் ஏமாற்றப்பட்டோம்’ என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர்மீது எழத் தொடங்கியிருக்கிறது. கொஞ்ச நாள்களிலேயே பணத்தைச் சம்பாதித்துவிட வேண்டும் என்ற ஆசையில்தான் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதை அவருடைய முகம் இப்போது காட்டுகிறது” என்கின்றனர்.
ஈ.சி.ஆர். ராமச்சந்திரன்
இதுதொடர்பாக ‘ஈ.சி.ஆர்.’ ராமச்சந்திரனிடம் பேசினோம். “ ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’யில் மாவட்ட நிர்வாகி பொறுப்பு வேண்டும் என்றால் பல லட்ச ரூபாய் தர வேண்டும் என்பது கட்சியின் விதி. கட்சி சம்பந்தமான வேலை, தீபாவுடைய கார் டிரைவர் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரும், அந்த வேலையைச் சிறப்பாகச் செய்து பலகோடி ரூபாயைத் திரட்டியுள்ளார். இந்தத் தொகையை தீபாவும், ராஜாவும் கையாடல் செய்திருக்கிறார்கள். பதவிக்கு ஆசைப்பட்டு பலர், லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். அப்படிப் பணம் கொடுத்தவர்களில் நானும் ஒருவன். எனக்கு, கட்சியின் உயர்மட்ட பொறுப்பு தருவதாகச் சொல்லி இதுவரை என்னிடம் மட்டும் 1.12 கோடி ரூபாய் வாங்கியுள்ளனர். ஆனால், இன்றுவரை யாருக்கும் எந்தவித பதவியும் கொடுக்கப்படவில்லை. முதல்கட்டமாக 04-03-2017 அன்று, ‘கட்சியின் வளர்ச்சிப் பணிக்காக அவசரமாக 50 லட்சம் ரூபாய் வேண்டும்’ என்று கேட்டார்கள். நானும் அந்தப் பணத்தைக் கொடுத்தேன். அதன்பின்பு அவர்கள் வீட்டுக்கு ஏதேனும் பொருள்கள் தேவைப்பட்டாலும் என் தலையில் கட்டினார்கள்.
ஒருகட்டத்தில் தொண்டர்கள் விஷயத்தைப் புரிந்துகொண்டு, ‘பணம் பிடுங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி’ என்று அவர்களாகவே ஒதுங்கிக்கொண்டனர். அதனால் அவர்கள், கட்சிக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்க, அவர்களைக் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தீபா நீக்கியுள்ளார். அதுபோல நானும், ‘எனக்கு கட்சிப் பொறுப்புகள் எதுவும் வேண்டாம். என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுங்கள்’ என்று கேட்டேன். ஆனால், அவர்கள் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக என்னைக் கட்சியின் அடிப்படைப் பொறுப்புகளிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
பலமுறை அவர்களுக்குப் போன் செய்தேன். ஆனால், அவர்கள் என் போனை எடுக்கவே இல்லை. 26-12-2017 அன்று மாலை ‘எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை மரியாதையாகக் கொடுத்துவிடுங்கள்; இல்லையென்றால், கமிஷனரிடம் உங்கள்மீது புகார் கொடுத்துவிடுவேன்’ என்று வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். இதைப் பார்த்த தீபா, அன்று இரவே அவருடைய வீட்டை நானும், எனது ஆள்களும் தாக்கினோம் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதை விசாரித்த காவலர்கள், ‘தீபாவும், ராஜாவும் சேர்ந்து இப்படி ஒரு நாடகம் ஆடியுள்ளனர்’ என தீபாவைக் கடுமையாக எச்சரித்துவிட்டுச் சென்றனர். இந்த நாடகம் பற்றியும், தொண்டர்களிடம் பணம் கொள்ளையடித்தது பற்றியும் மக்களுக்குத் தெரியக் கூடாது என்றுதான் ராஜாவை தனது கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக தீபா அறிக்கை விடுத்துள்ளார். ஆனால், அதுவும் நாடகமே. தற்போதுவரை அவர்கள் எப்போதும்போலப் போனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால்தான் கமிஷனர் அலுவலகத்தில் தீபா மீது புகார் கொடுத்தேன்” என்றார்.
ஜானகிராமன்
‘ஈ.சி.ஆர்.’ ராமச்சந்திரனைப்போல் பல தொண்டர்களிடமும் தீபா பணம் பறித்துள்ளதாக அவர்மீது புகார் உள்ளது. குறிப்பாக, இதற்குமுன் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘தொண்டர்களிடமிருந்து 20 கோடி ரூபாய்வரை தீபா பணம் மோசடி செய்துள்ளார்’ என்று அவர் கட்சியைச் சேர்ந்த தென்மண்டலப் பொறுப்பாளராக இருந்த ஜானகிராமன் என்பவர் காவல் நிலையத்தில் முதன்முதலாகப் புகார் கொடுத்தார். இந்தப் புகாருக்குப் பதிலளித்த தீபா, ”ஜானகிராமன் தனக்கு யார் என்றே தெரியாது” என்று கூறினார். இதேபோல், தற்போது ‘ஈ.சி.ஆர்.’ ராமச்சந்திரனையும் தனக்குத் தெரியாது என்று கூறிவருகிறார்.
இதுபற்றி தீபாவிடம் பேச பலமுறை முயற்சி செய்தும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவரைச் சந்திக்க நேரில் பலமுறை வீட்டுக்குச் சென்றோம். ஆனால், அவர் ‘வீட்டில் இல்லை’ என்று பாதுகாவலர் கூறினார். இதனையடுத்து தீபாவின் கணவர் மாதவனிடம் பேசினோம். “என்ன பிரச்னை நடக்குதுனே எனக்குத் தெரியலை. நான் உண்டு; என் வேலை உண்டுனு ஓடிக்கிட்டு இருக்கேன். புகார் பற்றி நீங்க தீபாகிட்டதான் பேசணும். என்னை விட்ருங்க” என்றார்.
தீபாவின் டிரைவரான ராஜாவிடம் பேசினோம், “ ‘ஈ.சி.ஆர்.’ ராமச்சந்திரன் பொய் சொல்கிறார். அவரிடம் பணம் வாங்கவே இல்லை. கட்சியில் பொறுப்பு வேண்டும் என்று அவர்களே வந்து கட்சிக்குச் செலவு செய்வார்களாம். பின்பு, பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்வார்களாம். அவர் சொல்லும் குற்றச்சாட்டு பொய்” என்றவர் தொடர்ந்து “கட்சியின் முழுப் பொறுப்பும் தீபாவுக்கு உள்ளது. அவர், என்னை நீக்கியதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது” என்றார்.