டெல்லி, ரோகிணி பகுதியில் பவானா தொழிற்பேட்டையில் சனிக்கிழமை பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பெண்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக பலியானார்கள். பட்டாசு கிடங்கின் மெயின் கேட்டைப் பூட்டி வைத்தது பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்துள்ளது. கிடங்கின் உரிமையாளர் மனோஜ் ஜெயின், கட்டடத்தின் காவலாளிக்கு மாலை 6 மணிக்கு மெயின் கேட்டை மூடிவிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். தினமும் மாலை 6 மணிக்கு கட்டடத்தின் காவலாளி பூட்டி விடுவது வழக்கமாக இருந்துள்ளது. தொழிலாளர்கள் தங்கள் பணி முடிந்த பின்னரும் கூடுதலாக, 6 மணி நேரம் ஓவர் டைம் வேலை பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது கட்டாயம்.
தீ விபத்து ஏற்பட்ட சனிக்கிழமை அன்றும் கட்டடம் வெளிப்புறமாக பூட்டப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். கட்டடத்தில் தீப்பிடித்த சமயத்தில் காவலாளி, மது அருந்தியிருந்துள்ளார். இதனால், அவரால் துரிதமாக செயல்பட முடியவில்லை. கட்டடத்தில் தீ பிடித்ததும், உள்ளேயிருந்த தொழிலாளர்கள் கதறியபடி மொட்டை மாடிக்கு ஓடியிருக்கின்றனர். அங்கிருந்து சிலர் கீழே குதித்துள்ளனர். 30 அடி உயரத்தில் இருந்து குதித்தவர்கள் கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளே ஏற்பட்ட நெரிசலில் தப்பிக்க முடியாதவர்கள் கரிக்கட்டையாகி சாய்ந்துள்ளனர்.
பிளாஸ்டிக் பொருள்கள் நிறுவனம் என்ற பெயரில் உரிமம் பெற்றுவிட்டு, பட்டாசுகளைத் தயார் செய்துவந்துள்ளனர். அங்கே பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு வெடிபொருள்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைப்பதுதான் முக்கிய பணி. பிளாஸ்டிக் துகள்களைத்தான் பாட்டில்களில் அடைப்பதாக அவர்கள் நினைத்துள்ளனர். உண்மையில் அவர்கள் வெடிபொருள்களைத்தான் பாட்டில்களில் அடைத்துள்ளனர். சில தொழிலாளர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலையை விட்டும் சென்றுள்ளனர்.
ஓவர் டைம் பார்த்தால் மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதல் சம்பளம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த கூடுதல் சம்பளத்துக்கு ஆசைப்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசுக் கிடங்கு உரிமையாளர் மனோஜ் ஜெயின் வெடிபொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.