வீட்டின் முன் வாகனம் நிறுத்துவது தொடர்பாக நடந்த மோதலில் உச்சிப்புளி பெண் ஒருவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் திருவாடானை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சப்புளி சேதுபதி நகரில் செல்வராஜ் (55) என்பவர் குடும்பத்துக்கும், கணேசன் (35) என்பவரின் குடும்பத்துக்குமிடையே வாகனம் நிறுத்துவதில் பிரச்னை நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி செல்வராஜின் ஆம்னி காரை எடுக்க முடியாமல் கணேசன் தனது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அதை எடுக்க சொன்னதில் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கணேசன் (33), இவரது மகன்கள் காளிதாஸ், கருணாசாமி, உறவினர் ராமமூர்த்தி, இவரது மகன்கள் களஞ்சியம், ராஜா, கணேசன் மனைவி சுகன்யா, ராமமூர்த்தி மனைவி மங்களேஸ்வரி ஆகியோர் கம்பு, கம்பி ஆகியவற்றால் செல்வராஜ் மனைவி நம்புலட்சுமி (50), இரவது மகன்கள் துரைராஜ் (24), செல்வகுமார் (31) ஆகியோர்களை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே நம்பு லட்சுமி உயிரிழந்தார்.
இது குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் உச்சப்புளி போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் வட்டான்வலசையைச் சேர்ந்த கணேசன் (33), உச்சப்புளியைச் சேர்ந்த ராமமூர்த்தி (60) ஆகிய இருவரும் இன்று திருவாடானை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனை தொடர்ந்து. இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி இன்ப கார்த்தி உத்தரவிட்டார்.