தனிக்கட்சி விவகாரம்… குழப்பத்தில் தினகரன்..!

“அமைப்பும், பெயரும் இல்லாமல் எப்படி அரசியல் செய்யமுடியும்?” என்ற குழப்பத்தில் இருந்துவருகிறார் தினகரன். தனிக்கட்சி என்ற அறிவிப்பை முதலில் வெளியிட்டு, அதன்பிறகு அந்தக் கருத்துக்கு  மாற்றாக அவரே சில கருத்துகளை வெளியிட்டதன் பின்னணியில் பல்வேறு நெருக்கடிகளை தினகரன் சந்தி்த்துள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றி தினகரன் அணியினருக்கு ஏற்படுத்திய உற்சாகம், இப்போது இல்லை என்கிறார்கள். அதற்குக் காரணம் தினகரன் அணியின் பெயரே இன்னும் முடிவாகாமல்  சுயேட்வை  எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்களாக மட்டுமே அவருடன் இருப்பவர்கள் அறியப்படுகிறார்கள்.
dinakaran64-12-1505197740
தினகரனின் நெருக்கமானவர்களிடம் நாம் பேசியபோது, “அ.தி.மு.க என்ற இயக்கத்தைக் கைப்பற்றுவதுதான் தினகரனின் திட்டம். ஆனால், தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் இப்போது எதிரணிக்கு சாதகமாக இருப்பதால், தனது திட்டத்தைக் கொஞ்சமாக நிறைவேற்றவே தினகரன் விரும்புகிறார். ஆனால், அதுவரை தனது ஆதரவாளர்களைத் தக்கவைக்கவேண்டிய நெருக்கடியும் அவருக்கு இருந்தது. அதனால்தான் தற்போதைக்கு தனிக்கட்சி என்ற திட்டத்துக்கு அவர் வந்தார். ஆனால், தனிகட்சி அறிவிப்பு வந்துமே, அவர் அணியிலே அதற்கு சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இதை தினகரனும் எதிர்பார்க்கவில்லை. தனிக்கட்சி என்று அறிவித்தால், கூட இருப்பவர்கள் சந்தோஷம் அடைவார்கள் என்று தினகரன் போட்ட கணக்கு தவறாகியது. தினகரனுக்கு பக்கபலமான இருந்துவரும் தங்கதமிழ்செல்வனே, “தனிக்கட்சி என்று ஆரம்பித்தால் எங்கள் பதினெட்டுபேரின் நிலை என்னவென்று யோசித்தீர்களா?   நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை உங்கள் கட்சியிலும் இணையமுடியாது. அ.தி.மு.க பக்கமும் கால் வைக்க முடியாது” என்று புலம்பியுள்ளார். அதன்பிறகுதான் தினகரன் தனிகட்சி முடிவைக் கொஞ்சம் தள்ளிப்போட்டுள்ளார்.  ஒரு வாரத்தில் கட்சியைத் தொடங்குவேன் என்று அவசர கோலத்தில் அறிவித்துவிட்டு, ஒருவாரம் கழித்தும் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார் தினகரன்.

தினகரன், ஆரம்பத்தில் 19-ம் தேதி அன்றே கட்சி துவங்கும் முடிவில் இருந்துள்ளார். ஆனால், 22-ம் தேதி அன்று 18 எம்.எல்.ஏ-க்கள்குறித்த வழக்கு நீதிமன்றத்தில் வர இருந்ததால், அதன்பிறகு கட்சி துவங்குவதுகுறித்து முறையாக அறிவிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்போது அவரது அணியிலே பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுவருவதால், அந்த முடிவை கிடப்பில் போடும் நிலைக்கு தினகரன் வந்துவிட்டார்” என்கிறார்கள்.
அ.தி.மு.க. அம்மா அணி என்ற பெயரிலேயே  கட்சி துவங்கலாம் என்ற எண்ணமும் தினகரனிடம் இருந்துள்ளது. அதற்காக  தேர்தல் கமி‌ஷனிடம் அனுமதியைக் கேட்பதற்கு அவர் முயற்சித்துவந்துள்ளார். ஆனால் தேர்தல் ஆணையம், கட்சியைப்பதிவுசெய்வதற்கு நாள்களை இழுக்கும் என்று அவருக்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளளது. அதேநேரம், அ.தி.மு.க-வில் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் வரிசையாக நீக்கபட்டுவருவதால், அவர்களை கரைசேர்க்கவேண்டிய நிலையும் தினகரன் தரப்புக்கு உள்ளது. அதனால்தான், அவர் தனிக்கட்சி துவங்கும் முடிவுக்கு வந்தார் என்கிறார்கள். காரணம், அவர்களுக்குப் பதவி கொடுக்காவிட்டால், அது தனக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்ற அச்சமும் தினகரனிடம் உள்ளது.

தினகரன் கட்சி துவங்குவதற்கு இப்போது தடையாக  இருப்பது 18 -எம்.எல்.ஏக்களின் வழக்குதான் என்கிறார்கள். தினகரன் கட்சி துவங்கினால், தங்களால் அந்தக் கட்சியில் இணையமுடியாமல் போய்விடும் என்ற அச்சத்தில்தான் அந்த 18 எம்.எல்.ஏ-க்களும் தினகரனிடம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்கிறார்கள். அந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்தால், தினகரன் கட்சி துவங்குவதில் எந்த சிக்கலும் வந்துவிடாது என்கிறார்கள்.

TTV