`இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்’ – எச்சரித்த அமைச்சர்!

”நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அ.தி.மு.க-வுக்கு எதிராக வாக்களித்து எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதோடு, ஆட்சியையும் பிடிப்போம் என அ.தி.மு.க நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஏமாற்றுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்’ என திவாகரனுக்கு எச்சரிக்கை விடுப்பதுபோல பேசியிருக்கிறார் அமைச்சர் காமராஜ்.

kamaraj_meeting_11523மன்னார்குடி பந்தலடியில், அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நேற்று நடைபெற்றது. கடந்த 17-ம் தேதி, திவாகரன் தலைமையில் அதே இடத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது திவாகரன், அமைச்சர் காமராஜை கடுமையாக விமர்சனம்செய்து பேசினார். அப்போது காமராஜ், ‘நம்மால் நடத்தப்படும் கூட்டத்துக்கு பெரிய அளவில் ஆட்களைத் திரட்ட வேண்டும்’ என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதனால், இந்தக் கூட்டத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியது. கூட்டமும் ஆரம்பம் முதலே அலைமோதியது.

முதலில் பேசிய நிர்வாகிகள் எல்லாம் சசிகலா குடும்பத்தை விமர்சனம்செய்து பேச, அமைச்சர் காமராஜ் அதற்கும் மேலே பேசுவார் என கூட்டத்தில் திரண்ட தொண்டர்கள் எல்லாம் உற்சாகமாக இருந்தனர். பலத்த கரகோஷத்துக்கு இடையே பேச வந்த அமைச்சர் காமராஜ், ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை எப்படி திருவிழாவைப்போல கொண்டாடினோமோ, அதேபோல இப்போது பிறந்தநாள் விழாவை எல்லா மாவட்டங்களிலும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நான் யாரைப்பற்றியும் பேசப்போவதில்லை. சின்ன ஹாலில் 300 பேர் உட்காரக் கூடிய ஒரு இடத்தில் கூட்டத்தை திரட்டி,  அதில் என்னைப் பற்றி விமர்சனம் செய்துபேசுகிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க என்பது ஒரு கடல். இப்போது கூடியிருக்கிறதே ஒரு கூட்டம். இது மாதிரி நடத்திப் பேசினால், பதில் சொல்லலாம். என்னைப்பற்றி இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார் திவாகரன். சொந்தக் கட்சிக்குத் துரோகம் செய்தவன் என்று.

ஒரு தேர்தலில், மன்னார்குடியில் வேட்பளாராக நான் நிற்கிறேன். நமக்கு எதிராக  பெரிய கூட்டணியோடு எதிர்க்கட்சி வேட்பாளர் நிற்கிறார். அதில், நான் குறைந்த வாக்கில் தோற்றுவிடுகிறேன். அந்தக் கட்சியைச் சேர்ந்த நண்பர் ஒருவர், காமராஜ் நீங்க ஜெயித்து விடுவீர்கள் என்று நினைத்தோம். பின்னர் சில விஷயங்கள் உங்களுக்கு வேண்டியவர்களிடம் போன்செய்து பேசினோம். அதன் பிறகுதான் எங்கள் வெற்றி உறுதியானது எனச் சொன்னார். இதிலிருந்து, யார் கட்சிக்குத் துரோகம் இழைத்தார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். நான் கட்சிக்காகக் கடுமையாக உழைத்ததால்தான் அம்மா எனக்கு இத்தனையும் கொடுத்தார்கள். சும்மா படுத்துக்கொண்டு முன்னேறியவன் நான் இல்லை.

அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறிப் பேசிவருகிறார்கள். தினகரன் சொல்கிறார், வாக்கெடுப்பு வரும்போது அரசுக்கு எதிராக வாக்களித்து ஆட்சியைக் கவிழ்ப்பதோடு, ஆட்சியைப் பிடிப்போம் எனக் கூறி, அ.தி.மு.க நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஏமாற்றிப் பேசிவருகிறார். அது ஒரு காலத்திலும் நடக்காது. இதுபோல பேசுவதை  இத்தோடு நிறுத்துங்கள். இது அம்மாவின் ஆட்சி.  நீங்கள் நினைப்பது என்றும் நடக்காது” என ஆவேமாகப் பேசினார்.