சாலையில் குறுக்கே பாய்ந்த ஆடு…! பறிபோன உயிர்!

ராமநாதபுரத்திலிருந்து தேவிப்பட்டினம் செல்லும் சாலையில் வெவ்வேறு இடங்களில் நடந்த இரு சாலை விபத்துகளில் பட்டதாரி ஆசிரியர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

ஆசிரியர்

ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியாற்றி வருபவர்கள் சரவணக்குமார் (41), வீரதினேஷ்(26). இவர்களிருவரும் ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரம் திரும்பிக்கொண்டிருந்தனர். சரவணக்குமார் வாகனத்தை ஓட்ட வீரதினேஷ் பின்னால் அமர்ந்திருந்தார். ராமநாதபுரத்திலிருந்து தேவிப்பட்டினம் செல்லும் சாலையில் நாரல் கிராமப் பகுதியில் ஆடு ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் வந்த இவர்கள் திடீரென நிலைகுலைந்து கவிழ்ந்தனர். இந்த விபத்தில் ராமநாதபுரம் அரண்மனை மேற்குத் தெருவைச் சேர்ந்த ஆசிரியர் சரவணக்குமார் தலைமையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்புறம் அமர்ந்து வந்த ஆசிரியர் வீரதினேஷ் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதேபோல் சிவகங்கை மாவட்டம் ஆண்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பியின் மனைவி பஞ்சவர்ணம் (55) என்பவர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் தனது பேத்தியைப் பார்ப்பதற்காக உறவினர் கார்த்திக் என்பவரது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இருசக்கர வாகனம் தேவிப்பட்டினம் சாலையில் சிங்கனேந்தலில் உள்ள குறுகிய பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது அவர்களைத் தொடர்ந்து வந்த கார்  முந்த முயன்றபோது காரின் ஒரு பகுதி இவர்கள்மீது உரசியதில் தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் பஞ்சவர்ணம் தலையில் பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். கார்த்திக் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்துக்குக் காரணமான கார் டிரைவரான ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த சைதன்யா (30) என்பவரை தேவிப்பட்டினம் போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.