`இப்பிரச்னை முடிவுற்றதாகக் கருதுவோம்!’ – ஹெச்.ராஜா ட்விட்டர்மூலம் கருத்து

ஆண்டாள் பற்றிய சர்ச்சைக் கட்டுரையை வெளியிட்ட தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், இன்று காலை ஸ்ரீவில்லிப்புத்தூர் வருகைதந்து, ஜீயரை சந்தித்து மன்னிப்புக் கோரினார். இதுகுறித்து ஹெச்.ராஜா தன் ட்விட்டர்மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

hraja45-05-1512453773

தினமணி நாளிதழ் ராஜபாளையத்தில்  நடத்திய இலக்கிய நிகழ்ச்சியில், ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கட்டுரை வாசித்தார். அது, தினமணி நாளிதழிலும் வெளியானது. அதில், ஆண்டாள் பற்றி வெளிநாட்டவர் எழுதியதை மேற்கோள்காட்டிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைணவர்கள், இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், வைத்தியநாதன், வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். பல காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர். இதற்காக வைரமுத்து வருத்தம் தெரிவித்தபோதிலும், தொடர்ச்சியான விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்றன. இந்த விஷயத்தில்,  பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, வைரமுத்து குடும்பத்தை கொச்சையாக விமர்சித்தார். நைனார் நாகேந்திரன், `நாக்கை அறுப்பேன்’ என்றார். இந்த நிலையில், `வைரமுத்து, ஆண்டாள் கோயிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், ஆண்டாள் கோயிலில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால், இரண்டாவது நாளில் முடித்துக்கொண்டாலும், பிப்ரவரி 3-ம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில்தான் வைத்தியநாதன், ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்து ஜீயரை சந்தித்து மன்னிப்புக் கோரினார்.

இதையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, `இன்று தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாள் நாச்சியாரைத் தரிசித்து மன்னிப்புக் கோரினார். தவறிழைப்பது மனித இயல்பு. ஆனால் அவரது இச்செயலை வரவேற்று அவரைப் பொறுத்தவரை இப்பிரச்னை முடிவுற்றாதாகக் கருதுவோம். இந்து ஒற்றுமை மற்றும் விழிப்பு உணர்வு தொடர்க’ என்று பதிவிட்டுள்ளார்.