கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, நிதிச்சுமை காரணமாக தமிழக அரசு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. கட்டண உயர்வு, சனிக்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு, ஏழை எளிய மக்களைப் பெரிதும் பாதிப்பதை அறிந்தும், கட்டண உயர்வைத் திரும்பப் பெற இயலாது என அரசு கடந்த திங்களன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவித்துவிட்டது. இந்நிலையில், பேருந்துக் கட்டண உயர்வுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், `அரசியலமைப்புச் சட்டப்படியே ஆளுநர் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற சதிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, மக்கள்நலத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்திவருகிறது. தினகரன் சிறைக்குச் செல்லும் காலம் வந்துவிட்டது. போக்குவரத்துத்துறையை சீர்செய்யவே பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.