பள்ளி நாட்களில் விடுமுறையின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருப்போம். விடுமுறைக்காக ஆசிரியர்களிடம் நாம் கூறிய பொய்கள் சில சமயம், நமக்கு சந்தோஷத்தையும், சிலசமயங்களில் தண்டனையையும் பெற்றுக் கொடுத்திருக்கும்.
அந்தவகையில், ஒரு நாள் விடுப்புக்காக பாகிஸ்தான் பள்ளி மாணவன் ஒருவனின் வித்தியாசமான விண்ணப்பம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன வித்தியாசமாக அந்த மாணவன் செய்தான் என்று கேட்கிறீர்களா?.
கோர்வாலா பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன், தலைமையாசிரியருக்கு எழுதியுள்ள விடுமுறை விண்ணப்பத்தைப் பாடலாகப் பாடியுள்ளார். அந்த பாடலில் விடுமுறை விண்ணப்பத்தில் உள்ள புள்ளி, கமா உள்ளிட்ட நிறுத்தற்குறிகளையும் சேர்த்து அந்த மாணவன் பாடியுள்ள சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகரும், மனித உரிமை ஆர்வலருமான ஷெஷாத் ராய் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். ’’தயவுசெய்து அவருக்கு விடுமுறை கொடுங்கள்’’ என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவை ராய் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவைப் பகிர்ந்துவரும் நெட்டிசன்களும், அந்த சிறுவனுக்கு விடுமுறை அளிக்கும்படி தலைமையாசிரியரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Please is ko chutti day dain. pic.twitter.com/tlGKvcW4FX
— Shehzad Roy (@ShehzadRoy) 21 January 2018