கடன் சுமை அதிகமானதால் தூத்துக்குடியில், தாயும் மகனும் சேர்ந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி, பாத்திமா நகரை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது தாய் சகாயமேரி. சகாயராஜ் தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில், தற்காலிக சமைல்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களுக்கு பணம் தேவைப்பட்டால் ஏற்பாடு செய்து கொடுப்பதும், நகைகளை அடமானம் வைத்து பணம் கொடுப்பதுமாக இருந்து வந்தார்.
இதற்காக, இவர் பல்வேறு நபர்களிடம் கடனுக்கு அதிக பணம் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடன் தொகை அதிகமான காரணத்தால் வட்டி மற்றும் அசல் தொகையை சகாயராஜால் சரிவர திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்நிலையில், கடன் கொடுத்தவர்களில் சதீஷ் மற்றும் பிரதீப் ஆகியோர் சகாயராஜ் வீட்டிற்கு வந்து கடன் தொகையைக் கேட்டு மிரட்டியதாகவும், கடனைத் திருப்பி தரச்சொல்லி சத்தம் போட்டதாகவும் தெரிகிறது. கடன் நெருக்கடியைப் பற்றி தாயும், மகனும் அக்கம் பக்கத்தினரிடம் கூறி வருத்தப்பட்டனராம்.
இந்நிலையில், நேற்று காலை சதீஷ் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் மீண்டும் சகாயராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். வீடு பூட்டியிருந்ததால் கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்தபோது வீட்டின் உரிமையாளர் மற்றும் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் கண்டித்ததால் திரும்பிச் சென்று விட்டனர்.
ஆனால், மதியம் வரை சகாயராஜ்வீடு திறக்கவில்லை. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ளவர்கள் போலீஸாக்கு தகவல் கூறியுள்ளனர். போலீஸார், வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, சகாயராஜும், அவரது தாய் சகாயமேரியும் வீட்டில் தூக்கில் தொங்கி நிலையில் பிணமாக காணப்பட்டனர். அவர்கள் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இறந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுபப்பட்டது. தென்பாகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடன் சுமையால் தாயும், மகனும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.