சாவிலும் இணைபிரியாத தம்பதி – மனைவி இறுதி சடங்கில் உயிரை விட்ட கணவர்..

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்கா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 75). இவரது மனைவி பார்வதி (74). இவர்களுக்கு இந்திராணி (45) என்ற மகளும், பன்னீர் (40) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து ஈரோட்டில் வசித்து வருகிறார். மகன் குன்னூர் மார்க்கெட் கடையில் வேலை செய்து வருகிறார்.
201801231226516726_wife-funeral-husband-dead-near-coonoor_SECVPF
முதியவர் பொன்னுசாமியும் அவரது மனைவி பார்வதியும் தோட்டக்கலை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

கடந்த சில நாட்களாக பார்வதிக்கு உடல்நலம் பாதிக் கப்பட்டது. சிகிச்சைக்காக மனைவியை பல ஆஸ்பத்திரிக்கு பொன்னுசாமி அழைத்துச்சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவரது வீட்டில் இறந்தார்.

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பொன்னுசாமி கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். இருந்தாலும் அவர் அதிர்ச்சியிலேயே இருந்தார்.

உடலை அடக்கம் செய்ய இறுதி சடங்கு நடந்தது. அப்போது பொன்னுசாமி மனைவியின் உடல் அருகே வந்து அமர்ந்தார். மனைவியின் உடலை பார்த்து மீண்டும் கதறி அழுதார். பின்னர் திடீரென நெஞ்சை பிடித்தவாறு மயங்கி விழுந்து அவரும் உயிரிழந்தார். மனைவியின் இறுதி சடங்கில் கணவர் இறந்த சம்பவம் உறவினர்கள், நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகத்தான் செல்வார்கள். சத்தம்போட்டு கூட பேசமாட்டார்கள். மிகவும் மென்மையாக பழகக்கூடியவர்கள். மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதில் இருந்தே பொன்னுசாமி சோகத்தில் இருந்தார்.

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இறுதி சடங்கின்போது கணவரும் இறந்து விட்டார். சாவிலும் இணைய பிரியாமல் சென்று விட்டனர் என்று கண்கலங்கியவாறு கூறினர். பின்னர் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.