சென்னை, கே.கே.நகர் 1-வது செக்டார் 7-வது தெருவை சேர்ந்தவர் சார்லஸ் பிரதீப். மெக்கானிக்கல் என்ஜினீயர். இவர் தனது வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து சில மூலிகை செடிகளை வளர்த்து வந்தார்.
இந்த செடிகளுடன் கஞ்சா செடியும் வளர்க்கப்படுவதாக கே.கே.நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது மூலிகை செடிகளுடன் 4½ அடி உயரம் கொண்ட 7 கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து சார்லஸ் பிரதீப்பை போலீசார் கைது செய்தனர். கஞ்சா செடிகளையும் மேலும் அங்கிருந்த 1 கிலோ 750 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சார்லஸ் பிரதீப் போலீசாரிடம் கூறும் போது, ‘கஞ்சா பயன்படுத்தி அதற்கு அடிமையானேன். எனவே வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து அதனை உபயோகிக்க முடிவு செய்தேன்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக ஆராய்ச்சிக்காக மூலிகை செடிகள் வளர்ப்பதாக கூறி அதன் இடையே கஞ்சா செடியை வளர்த்தேன். கஞ்சாவை ஆம்லேட் மற்றும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டேன்’ என்றார்.
சார்லஸ் பிரதீப்புக்கு கஞ்சா செடி கிடைத்தது எப்படி? அவருக்கு கஞ்சா கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.