சிவகங்கை நகர் (தினகரன்) அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (23.1.2018) காலை சிவகங்கையில் மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் முன்னாள் நகராட்சித் தலைவர் எம்.அர்ச்சுனன் தலைமையில், சிவகங்கை நகர் கழகச் செயலாளர் எம்.அன்புமணி முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிவகங்கை நகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, கடைகள் வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் வரிகளைப் பல மடங்கு உயர்த்த முடிவு செய்து நகராட்சி அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அரசு ஆணை எதுவும் இல்லாமல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை அரசு முதன்மை செயலாளர் அவர்கள் கூட்டத்தில் தெரிவித்த வாய்மொழி உத்தரவுபடி இந்த வரி உயர்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தற்போது உள்ள வரிகள் சதுரஅடி அடிப்படையில் நான்கு அல்லது ஐந்து மடங்கு உயர்த்தப்படும். அத்துடன் உயர்த்தப்படும் வரியை 13 அரை ஆண்டுகளுக்கு கணக்கிட்டு பாக்கித்தொகையாக அதையும் சேர்த்து வசூலிக்க முடிவு செய்து, அவரவர் வரிவிதிப்பு பெயரில் கணினியில் கணக்கில் ஏற்றி வருகின்றனர். இத்தகைய மோசமான வரி உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் வர்த்தகர்களையும் மிகவும் கடுமையாகப் பாதிக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட நகர்மன்ற நிர்வாகம் இல்லாத நிலையில் தனி அலுவலர்கள் பொறுப்பில் இருக்கும்போது தமிழக அரசு, அரசு ஆணை (GO) பிறப்பிக்காமல் அரசு முதன்மைச் செயலாளர் வாய் மொழி உத்தரவின் பேரில் மறைமுகமாக அநியாய வரி உயர்வுகள் செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, முறையற்ற இந்த வரி உயர்வைக் கைவிடுமாறு நகராட்சி நிர்வாகத்தை அ.இ.அ.தி.மு.க அம்மா அணி சிவகங்கை நகர் கழகம் கேட்டுக்கொள்கிறது. அநியாய வரி உயர்வை நகராட்சி நிர்வாகம் கைவிடவில்லை என்றால், அ.இ.அ.தி.மு.க அம்மா அணி சிவகங்கை நகர் கழகம் சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் மக்கள் விரோதத் துரோக ஆட்சியாளர்கள் இரவோடு இரவாக 3,600 கோடி ரூபாய்க்கு பேருந்துக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளனர். முன்னாள் முதல்வர் அம்மா எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வாரி வழங்கினார்கள். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் அம்மா அவர்களது கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகின்றனர் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.