`யார் கூட்டு தி.மு.க-வோடு?’ – ஆதாரத்தைக் காட்டிய செந்தில் பாலாஜி

“தி.மு.க-வோடு டி.டி.வி.தினகரன் கூட்டு வைக்கவில்லை. அமைச்சர் தங்கமணிதான் கூட்டுவைத்துள்ளார். அதை நீங்களே பாருங்கள்” என்று பத்திரிகையாளர்கள் முன்பு முன்னாள் அமைசர் செந்தில்பாலாஜியின் போட்டோ ஆதாரத்தைக் காட்டி, அதிரிபுதிரி கூட்டி இருக்கிறார்.

senthilbalaji_press_meet_2_11129வழக்கமாக, டி.டி.வி.தினகரன் அணியில் உள்ள தங்கத் தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராகப் பல்வேறு ‘ஆதாரங்களை’ வெளியிட்டு, தமிழக அரசியலை சூடு பண்ணிவருவார்கள். முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரன் பின்னால் அமைதியாக நின்று, இதுவரை ‘போஸ்’ மட்டும் கொடுத்துவந்தார். சொந்த மாவட்டமான கரூருக்கு வராமல், சென்னையிலேயே டேரா போட்டிருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் வந்த அவர், தொடர்ச்சியாக பிரஸ் மீட் வைத்து பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றிவருகிறார். சில தினங்களுக்கு முன்பு வைத்த பிரஸ் மீட்டில், “தமிழக அமைச்சர்கள் பலர் பேருந்துகள் வாங்கி, போக்குவரத்துத் தொழில் செய்கிறார்கள். அதனால், அவர்களுக்கு லாபம் தேடித் தரவே பேருந்துக் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தியிருக்கிறார்கள்” என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

இந்நிலையில், அமைச்சர் தங்கமணி ஒரு கூட்டத்தில், “ஸ்டாலினோடு கூட்டு வைத்துக்கொண்டு ஆட்சியைக் கலைக்க  டி.டி.வி.தினகரன் திட்டம் போடுறார்” என்று பேசியிருந்தார். அதற்குப் பதிலடிகொடுக்க, கரூரில் பிரஸ் மீட்டைக் கூட்டிய செந்தில்பாலாஜி, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினோடு அமைச்சர் தங்கமணி இருப்பதுபோல உள்ள ஒரு போட்டோவைக் காட்டி, “தி.மு.க-வோடு யார் கூட்டு வைத்துள்ளார்கள் என்று நீங்களே பாருங்கள். தி.மு.க-வோடு உண்மையில் யார் கூட்டு வைத்துள்ளார்கள் என்று இப்போது உங்களுக்கே புரியும்” என்று ஏவுகணையை வீசி, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். ‘எடப்பாடி அணிக்கு எதிராக இப்படி இன்னும் பல அதிரடி அஸ்திரங்களை அண்ணன் ஏவுவார்’ என்று கிசுகிசுக்கிறார்கள் செந்தில்பாலாஜி குழுவைச் சேர்ந்தவர்கள்.