`என்னிடம் சொல்லாதீர்கள் குறைகளை’ – கண்டிஷன் போட்ட தினகரன்

தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் சிலர், மீண்டும் அணி மாறும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவர், சில நாள்களுக்கு முன்பு இரண்டு அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

1504962034ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் அணிகள் உதயமாகின. தேர்தல் ஆணையம் வரை சென்ற அணிகள் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. கட்சியும் ஆட்சியும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கைக்கு வந்துவிட்டது. இதனால், சசிகலா, தினகரன் தரப்பினர் அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். உற்சாகத்திலிருந்த அ.தி.மு.க.வினருக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற தினகரன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். சமீபத்தில் அதிருப்தியிலிருக்கும் மூத்த அமைச்சர் ஒருவருக்கு தினகரன் வலைவீசினார். மக்கள் பிரச்னைகளைக் கையில் எடுத்து ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார் தினகரன்.

இதற்கிடையில் தினகரனை ஆதரித்ததால் எம்.எல்.ஏ. பதவிகளை 18 பேர் இழந்துள்ளனர். தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று 18 எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக 18 எம்.எல்.ஏ-க்கள் காத்திருக்கின்றனர். தினகரனுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று கருதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கிடைக்கும் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். அ.தி.மு.க-வில் தினகரனின் செல்வாக்கை முற்றிலும் களையெடுக்க அவரது ஆதரவாளர்களைக் கூண்டோடு கட்சித் தலைமை நீக்கிவருகிறது. அந்தப் பதவிகளுக்கு தங்களின் ஆதரவாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தற்போது, கட்சியும் ஆட்சியும் இருக்கும் இடத்திலேயே நீடிக்க தினகரன் ஆதரவாளர்களில் பலர் விரும்புகின்றனர். அதில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களில் சிலரும் மனம் மாறி அணி மாறும் முடிவில் உள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு அமைச்சர்களை ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர்கள் ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்துள்ளனர். அணி மாற முடிவு செய்துள்ள எம்.எல்.ஏ. குறித்த தகவல் கட்சித் தலைமைக்கு தெரிவித்துள்ளனர் அமைச்சர்கள்.