இரண்டு குழந்தைகளைக் கொன்ற இன்ஜினீயர் மனைவியின் உருக்கமான கடிதம்!

குடும்பத் தகராறில், இரண்டு பெண் குழந்தைகளைத் தலையணையை வைத்து தாயே கொலைசெய்த சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளைக் கொன்ற அவர், தூக்குப்போட்டு தற்கொலைசெய்துகொண்டார்.

child_murder_chennai_12007சென்னையை அடுத்த பெரும்பாக்கம், நுக்கம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்பவர், சிக்ஹன்ஷா. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணியாற்றிவந்தார். இவரது மனைவி ஜியனாஷா. இவர்களுக்கு இரண்டரை வயதில் பரி, 5 மாத கைக்குழந்தை ரேயா என இரண்டு பெண் குழந்தைகள். பொங்கல் பண்டிகையையொட்டி குடும்பத்துடன் சிக்ஹன்ஷா சொந்த ஊருக்குச் சென்றார். கடந்த வாரத்தில் சென்னைக்குத் திரும்பினர். கடந்த 22-ம் தேதி, சிக்ஹன்ஷா வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் ஜியனாஷா மற்றும் குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில், ஜியான்ஷாவின் செல்போனுக்கு அவரது உறவினர்கள் தொடர்புகொண்டனர். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை.  அதனால் வீட்டுக்கு வந்த அவர்கள், கதவைத் தட்டினர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. இதையடுத்து, பள்ளிக்கரணை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். படுக்கையறையில் இரண்டு குழந்தைகளும் பிணமாகக்கிடந்தனர். ஜியான்ஷா, மின்விசிறியில் பிணமாகத் தொங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுக்கையறை முழுவதும் போலீஸார் சோதனை நடத்தியபோது, 4 வரிகள் கொண்ட கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அதில், ‘குடும்பத்தகராறு காரணமாக நான் இந்த முடிவை எடுக்கிறேன். நான் இறந்த பிறகு, என்னுடைய குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை. எனவே, அவர்களையும் என்னோடு அழைத்துச்செல்கிறேன். ‘நீங்கள் என்னோடு வந்துவிடுங்கள் செல்லங்களே’ என்று ஜியான்ஷா ஆங்கிலத்தில் உருக்கமாக எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

விசாரணையில், இரண்டு குழந்தைகளையும், ஜியான்ஷா தலையணையால் அமுக்கிக் கொலைசெய்துள்ளார். அதன்பிறகு, அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகள் இறந்த தகவலைத் தெரிவிக்க, சிக்ஹன்ஷாவின் செல்போனுக்கு உறவினர்களும் போலீஸாரும் தொடர்புகொண்டனர். ஆனால், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வேலைப்பார்த்த ஐ.டி நிறுவனத்தில் விசாரிக்கச்  சென்றனர். குடும்பப் பிரச்னைக்காக இரண்டு குழந்தைகளையும் கொன்ற தாய்குறித்த தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு செல்போன்கள்

ஜியான்ஷா வீட்டிலிருந்து இரண்டு செல்போன்களை போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர். ஆனால், அந்த செல்போன்கள் லாக் செய்யப்பட்டுள்ளன. ஜியான்ஷா, கடைசியாக யாருடன் பேசினார் என்று விசாரிக்க, அந்த செல்போன்களின் லாக்குகளைத் திறக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் சிக்ஹன்ஷாவிடம் விசாரித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.