யாழ். பல்கலைக்கழக தொழிநுட்ப பீட முதலாம் வருட மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்பு போட்டி மற்றும் கண்காட்சியில் பங்குபற்றுவதற்கு தெரிவாகியுள்ளார்.
இப்போட்டியும் கண்காட்சியும் பெப்ரவரி 1ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை பேங்கொக் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில் 97 நாடுகளை சேர்ந்த 1000க்கு மேற்பட்ட பல்கலைக்கழக கண்டுபிடிப்பாளர்கள் பங்குபெற்றவுள்ளனர்.
வினோஜ்குமார் கண்டுபிடித்த கணித உதவியாளன் (Maths Helper) எனும் கணித கருவி மூலம், கணித பாடத்தில் வரும் நிருவல்கள் மற்றும் திசை கொண்ட எண்கள் போன்ற பல விடயங்களை இலகுவாக கற்பிக்கக்கூடிய உபகரணமாகும்.
இதன் மூலம் அனைத்து மாணர்களும் பிறரின் உதவியின்றி இலகுவான முறையில் கற்கக்கூடியதாகவும் செலவு மிக மிகக்குறைந்த கண்டுபிடிப்பாகும்.
மேலும் இதில் பயன் படுத்தப்பட்டுள்ள ஒளித்தொழிநுட்ப மூலம் மாணவர்கள் இரவு நேரங்களில் வீட்டு மின்சாரத்தை பயன்படுத்தப்படாமல் இதன் மூலம் தோன்றும் ஒளியினால் கற்கக்கூடியதாக இருக்கின்றது.
இக்கண்டுபிடிப்பு 2017ஆம் ஆண்டு இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி நடத்திய ஆயிரம் படைப்புக்கள் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.
இவர், இதுவரை 81 கண்டுபிடிப்புக்களை செய்து 31 தேசிய விருதுகளும் ஒரு சர்வதேச விருதையும் பெற்றுள்ளார்.
கிழக்கிலங்கையின் சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தைச் சேர்ந்த வினோஜ்குமார் கருத்து தெரிவிக்கையில்,
“நான் தரம் 6 இல் கல்வி கற்கும் போதே இவ்வாறான கணிதம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தேன்.
தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புதுப்புது தொழிநுட்பங்களை ஒருங்கிணைத்து தற்போது இதனை உருவாக்கியுள்ளேன்.
புத்தாக்க சிந்தனைகள் பாடசாலை மாணவர் பருவத்திலேயே ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதற்காக மாணவர்கள் தங்கள் ஓய்வுநேரங்களில் கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் வரலாறு பற்றி ஆர்வத்துடன் தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும் அன்றாட சூழலில் காணப்படும் பிரச்சினைகளை குறிப்பெடுத்து அவற்றுக்கான தீர்வுகளை இனங்கண்டு கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் பொறுமையும் செயலில் விடாமுயற்சியும் இருந்தால் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியுமென குறிப்பிட்டிருந்தார்.