“சசிகலா எடுத்த மௌனவிரத அஸ்திரம்!” – நடப்பது என்ன?

`மௌன விரதம்’ சசிகலாவின் சார்பில் இப்போது தொடர்ந்து சொல்லபட்டு வரும் வார்த்தையாக உள்ளது. ஜெயலலிதா மரணம்குறித்து அமைக்கபட்ட விசாரணை கமிஷன் முதல், வருமானவரித்துறையின் விசாரணை வரை அனைத்துக்கு மௌன விரதம் ஒன்றையே காரணம் காட்டி ஒதுக்கிவருகிறார் சசிகலா. ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் அமோக வெற்றி பெற்றதும் அந்த வெற்றியை சசிகலாவிடம் தெரிவிக்க பெங்களூரு சென்றார் தினகரன். அவர் பெங்களுரு பயணத்தின்போது, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் பேசும் எண்ணத்துடனே பயணப்பட்டார். பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து வெளியே வந்த தினகரன் “சசிகலா மௌன விரதம் இருப்பதால், அவர் என்னிடம் பேசவில்லை. சிலவற்றை எழுதி மட்டும் காட்டினார்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “ஜெயலலிதாவின் நினைவுநாள் முதல் சசிகலா மௌன விரதம் இருந்துவருவதாக” அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தினகரன்.

8a39fd144f04a1b8aeb2e19760d61651சசிகலா மௌன விரதத்தில் இருக்கிறார் என்ற தகவல் அப்போது தான் வெளியுலகுக்கு தெரிந்தது. அதே நேரம் சசிகலாவுக்கு நெருக்கமான உறவுகள் முதல் அவர்களின் நண்பர்கள் உறவினர்களின் நிறுவனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை வரிந்துகட்டி சோதனை நடத்தியது. இதில் பல்வேறு ஆவணங்களும் கணக்கில் வராத பல நூறு கோடி பணமும் கைபற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்த  ஆய்வுகுறித்த விசாரணையையும் வருமான வரித்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும், போயஸ்கார்டனில் சசிகலாவின் அறையிலும் சோதனை நடத்திய வருமான வரித்துறை லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்றது. வருமான வரித்துறை எந்த நேரத்திலும் சசிகலாவிடம் விசாரணை நடத்தலாம் என்ற நிலை இருந்துவந்தது.

அதேபோல், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையம் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்திவருகிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் முக்கிய நபராக அறியப்படும் சசிகலாவும் விசாரணை கமிஷன் முன்பு ஆஜர் ஆகவேண்டும் என்று ஆறுமுகசாமி பெங்களூரு சிறைக்கு சம்மன் அனுப்பியிருந்தார். ஆனால், சசிகலா “தான் மௌன விரத்தில் இருப்பதால், இப்போது நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க முடியாது” என்று ஆறுமுகசாமிக்கு பதில் அனுப்பியுள்ளார். அதேபோல் போயஸ்கார்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்கள்குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை பெங்களூரு சிறை கண்காணிப்பாளருக்கு சம்மன் அனுப்பியபோதும், அதற்கு சசிகலா “தான் மௌன விரத்தில் இருப்பதால், இப்போது என்னால் ஆஜர் ஆகமுடியாது” என்ற பதில் அளித்திருக்கிறார்.
கடந்த மாதம் 5-ம் தேதி முதல் சசிகலா மௌன விரதம் இருந்து வருவதாக கூறப்பட்டாலும், அவரின் இந்த விரதமே விசாரணையை தள்ளிப்போடும் யுக்தியாக பார்க்கப்படுகிறது. இதுவரை விசாரணை என்றால் மருத்துவமனைக்குச் சென்று படுத்துக்கொள்ளும் நிலையை மாற்றி, மௌன விரதம் என்ற அஸ்திரத்தின் வழியாக விசாரணையை தள்ளிப்போடலாம் என்ற புதிய வழியை சசிகலா உருவாக்கியுள்ளார்.

சசி

ஒருமாதத்துக்கும் மேலாக சசிகலா இருந்து வரும் மௌன விரதம் இந்த மாதத்தோடு முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லப்பட்டாலும், அவர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி வரை இந்த மௌனவிரத்ததைத் தொடருவார் என்றும் சொல்கிறார்கள். உண்மையில் சசிகலா இத்தனை நாள்கள் யாருடனும் பேசாமல் மௌன விரதம் இருந்து வருகிறாரா? என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது “சின்னம்மா மௌனவிரதம் இருந்தது உண்மைதான். ஆனால், இத்தனை நாள்கள் அவர் இருப்பதாக சொல்லப்படும் தகவல் குறித்த சந்தேகம் அனைவருக்குமே இருக்கிறது. தினகரன் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தபோது ஏதும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் பரப்பப்பட்டது. ஆனால், உண்மையில் இருவரும் அரை மணிநேரம் பேசியுள்ளார்கள். அப்போது தனிக்கட்சி ஆரம்பிப்பது குறித்தும், குடும்ப உறவுகள் இடையே நடைபெற்று வரும் பனிப்போர் குறித்தும் தினகரன் பேசியுள்ளார்.
ஆனால், செய்தியாளர்களிடம் சசிகலா ஏதும் பேசவில்லை என்று சொல்லியுள்ளார் தினகரன். அதேபோல், சிறையில் சசிகலாவின் அறையில் இருக்கும் இளவரசியுடனும் சசிகலா பேசிவருவதாக கூறப்படுகிறது. குடும்ப உறவுகள் ஒவ்வொருவரின் நடவடிக்கை குறித்தும் சசிகலா தனது மனவருத்ததை, இளவரசியிடம் பகிர்ந்துள்ளார். குடும்ப உறவுகளுக்கு சசிகலா தனிப்பட்ட முறையில் கடிதம் கூட எழுதியுள்ளார்” என்கிறார்கள்.

பிறகு ஏன் சசிகலா மௌனவிரதம் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது? என்ற கேள்விக்கு அவருடைய ஆதரவாளர்களே பதில்  சொல்லமறுத்து வருகின்றனர். குறிப்பாக விசாரணை கமிஷனில் ஆஜர் ஆவதை சசிகலா முதலில் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அதைத் தள்ளிப்போடக்கூட மௌனவிரதம் என்ற ஆயுதத்தை சசிகலா கையாண்டிருக்கலாம் என்கிறார்கள்.
ஜெயலலிதாவின் மரணம்குறித்து திவாகரன் ஒரு கருத்தை தெரிவிக்க, அந்தக் கருத்தை மறுத்துச் சொல்லியுள்ளார் தினகரன். அதேபோல், அமைச்சசர் ராஜேந்திர பாலாஜியும் தனது பங்குக்கு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இதையெல்லாம் சிறையில் இருக்கும் சசிகலா அறியாமல் இல்லை. அவருடைய மௌனம் கலைந்தால் மட்டுமே மொத்த சர்ச்சைகளுக்கும் முடிவு கிட்டும் என்பது மட்டும் தெரிகிறது.