அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.
பெண்டன் நகரத்தில் உள்ள மார்ஷல் கவுண்டி உயர்நிலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 வயதான ஒரு பெண் சம்பவ இடத்திலே இறந்ததாகவும், மற்றோரு 15 வயதான ஆண் மருத்துவமனையில் இறந்ததாகவும் கூறுகிறார் கென்டக்கி ஆளுநர்.
தாக்குதல் நடத்திய 15 வயதான மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
செவ்வாய்க்கிழமையன்று உள்ளூர் நேரப்படி 8:00 மணிக்கு இத்தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய 15 நிமிடத்தில் அந்த மாணவரைக் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு முன்பு பள்ளியில் உள்ள பொதுப் பகுதியில், அந்த மாணவர் கைத்துப்பாக்கியால் சுட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
அவர் மீது கொலை மற்றும் கொலைக்கு முயற்சித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என அதிகாரிகள் கூறினர்.
இறந்துபோன இருவர் உட்பட 14 மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
கிட்டதட்ட 1,150 படிக்கும் இப்பள்ளியின் மாணவரான ஜேசன் ஹால்,”மாணவர்கள் கீழே விழுந்ததை நான் பார்த்தேன். எங்குப் பார்த்தாலும் ரத்தமாக இருந்தது. சூழ்நிலை மோசமாக இருந்தது” என்கிறார்.
4500 மக்கள் வசிக்கும் ஒரு சின்ன விவசாய நகரத்தில் நடந்த இச்சம்பவம், அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.