புலனாய்வுப் பிரிவு தகவல்களின் அடிப்படையில் ஜனாதிபதி விசர் பிடித்தது போன்று பேசுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மலர்மொட்டுக்கு 51 வீத வாக்குகள் கிடைக்கும் என புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் ஜனாதிபதி விசர் பிடித்தது போன்று பேசுகின்றார்.
இந்த தேர்தலில் கட்சி, நபர்கள் என்ற அடிப்படையில் வாக்களிப்பதனை விடவும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களிக்க கிராம மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
அரசாங்கத் தரப்பாக ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரி தரப்பு, ரணில் தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்மைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் என்பன காணப்படுகின்றன.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஒரே தரப்பு கூட்டு எதிர்க்கட்சி மட்டுமேயாகும்.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி மட்டுமே அரசாங்கத்திற்கு எதிரான சக்தியாக அமைந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டு மக்களினால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
நாட்டின் தேசியப் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
சில காலங்களுக்கு முன்னதாக வடக்கில் புலிகளின் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதியே கூறியிருந்தார்.
சர்வதேசத்தின் ஆதரவுடைய ஜனாதிபதி என கூறிக் கொள்ளும் மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருக்கும் நிலையில் வெளிநாடுகளில் பிரபாகரனின் புகைப்படத்தைக் காண்பித்து பணம் திரட்டுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது செல்லிடப்பேசிகளில் பிரபாகரனின் புகைப்படம் காணப்படுகின்றது.
அரச சேவை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.