இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் 6 நபர்களுக்குத் தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன், இன்று காலை உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.
கடந்த திங்கள்கிழமையன்று இரவு கடுமையான காய்ச்சல் மற்றும் சளித் தொந்தரவால் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி அலமேலு நடராஜன், பின்னர் உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடந்த சில நாள்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாகக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கைத் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக விசாரித்து, ஒட்டுமொத்த மாநிலமும் திரும்பிப் பார்க்கும் வகையில் தீர்ப்பு வழங்கியவர், நீதிபதி அலமேலு நடராஜன். வழக்குகளில் மனிதாபிமானத்துடனும், சட்டத்தின் படியும் தீர்ப்பு வழங்குவதில் வல்லவர் என்று பரவலாகப் பெயரெடுத்த அலமேலு நடராஜனின் சொந்த ஊர், கோவை மாவட்டத்திலுள்ள போத்தனூர். திருச்சி செயின்ட் ஜோசப்பில் பள்ளிப் படிப்பும், திருச்சி சட்டக் கல்லூரில் சட்டமும் பயின்ற இவர், 1991-ம் ஆண்டில் நீதித்துறை மாஜிஸ்திரேட்டாகப் பதவியேற்றார். பின்னர், கோவை மற்றும் வேலூர் மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியிருக்கிறார்.
பின்னர், கடந்த 2015-ம் ஆண்டு, திருப்பூரில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த சங்கர் படுகொலையின் வழக்கை, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேர்மையான முறையில் விசாரித்து, அனைவரும் பாராட்டும் வகையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜனின் திடீர் மரணம், நீதித்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.