இந்த 4 நம்பர்ல இருந்து கால் வந்தா எடுக்காதீங்க மக்களே!

aid20535-v4-728px-Fake-a-Cell-Phone-Call-Step-12-Version-2சொந்தமாகத் தொழில் செய்பவர் திரு. சண்முக ரத்தினம். பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஒரு பெண் தன்னை சென்னையைச் சேர்ந்த எலைட் பைனான்ஸியல் சர்வீசஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தங்கள் நிறுவனம் தொழில் முனைவோருக்குக் குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறுகிறார். இவரும் கடன் பெற விருப்பமிருப்பதாகக் கூற, கடன் அளிப்பதற்கு வேண்டிய அடிப்படை விவரங்களை அந்தப் பெண் கேட்கிறார். எல்லாவற்றையும் கேட்டபின், பின்னர் அழைப்பதாகக் கூறிவிடுகிறார். அடுத்த நாள், வேறொரு நம்பரில் இருந்து போன் வருகிறது. அதே நிறுவனத்தில் இருந்து அதே பெண். அவருக்கு நிச்சயம் தொழில் கடன் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அதற்காக ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை வாட்ஸ் ஆப்பில் பகிருமாறு கேட்க, இவரும் அதையே செய்கிறார்.

ஆன்லைன் மோசடி

அதற்கடுத்த நாள். வேறொரு நம்பர். அதே நிறுவனம். ஆனால், பேசியது மட்டும் வேறு ஒரு நபர்.

தன்னை மேலதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். நம்மவர் கடன் பெறவேண்டி அவர்கள் பதிவு செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதாகவும், ஐந்து லட்சம் கடன் அளிக்கப்படும் என்றும் கூறுகிறார். அதற்கு 4.5% வட்டி என்றும், ஐந்து வருடத்திற்குத் தவணையாக மாதம் ரூ. 9,322/- வீதம் கட்ட வேண்டும் என்றும் விளக்குகிறார். எல்லாம் சரிதான். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் அவர்கள் தரப்பிலிருந்து வைக்கப்படுகிறது. இவரின் வங்கிக்கணக்கில் 15,000 ரூபாய் இருக்க வேண்டும் என்பதுதான் அது. காரணம் கேட்டதற்கு, மெடிக்கல் இன்சூரன்ஸ் பணம் என்றும், சரியாக வட்டி கட்டாவிட்டால், மாதத் தவணை தவறினால் அதிலிருந்து பணம் எடுக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இங்கேதான் உஷாராகியிருக்கிறார் சண்முக ரத்தினம். அவர்கள் நிறுவனத்தின் முகவரி கேட்க, நுங்கம்பாக்கத்தில் ஏதோ ஒரு தெருவின் பெயர் சொல்கிறார். அடுத்த நாள், மீண்டும் அதே நிறுவனத்திலிருந்து வந்த தொலைபேசி உரையாடல் இப்படி நடக்கிறது.

(பெண் குரல்) (பரஸ்பர அறிமுகங்கள்)

“சார். இது ஒரு 3D secured call. ரெகார்ட் செய்யப்படுகிறது. நான் எதுவும் ராங்கா கமிட் பண்ணிக்கமாட்டேன், நீங்களும் பண்ண வேண்டாம். இந்தக் கால கட் பண்ணாம பேசணும்.”

“சரி, சொல்லுங்க. என்ன விவரம் வேணும்?”

“நான் சொன்னது எல்லாம் எடுத்துட்டீங்களா? பேங்க் அக்கவுண்ட் டீடெயில்ஸ். ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு.”

“பணம் 15,000 அக்கவுண்ட்ல கட்டிட்டீங்களா?”

“செய்து விட்டேன்” (இவர் செய்யவில்லை)

“எந்த பேங்க் சார்?”

“அலகாபாத் பேங்க்!”

அதன் பிறகு, சண்முகரத்தினம் அவர்கள் டயர்டு ஆக வேண்டுமென்றே தேவையில்லாத விவரங்கள் கேட்கப்படுகிறது. அவரின் உயரம், எடை உட்பட. இதில் காமெடியான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண்ணிற்கு இவரின் பெயரே சரியாகத் தெரியவில்லை. ரத்தின சாமி என்று அழைக்கிறார். நினைத்துப் பாருங்கள். ஒரு பைனான்ஸ் நிறுவனம். இவர் தன்னுடைய விவரங்கள் அனைத்தையும் பகிர்ந்திருக்கிறார். இருந்தும் பெயரை கூடச் சரியாக அவர்களால் சொல்ல முடியவில்லை. பின்பு, ஒவ்வொரு கார்டின் நம்பர்கள் அனைத்தையும் கேட்டு கொள்கிறார். இடையிடையில் இவர் “இருங்க, பாத்துட்டு திரும்ப கூப்பிடறேன்” எனும் போதெல்லாம், “சார்! நான் லைன்லயே வெயிட் பண்றே. இது 3D செக்யூர்ட் கால். நீங்க எடுத்துட்டு வாங்க” என்று அடம்பிடிக்கும் பதில் வேறு. அதன் பின்னர்,

“சார். உங்க ஏடிஎம் கார்டு நம்பர் சொல்லுங்க”

(சொல்கிறார்)

“எக்ஸ்பைரி தேதி, வருடம்?”

(சொல்கிறார்)

“கார்டுல உங்க பேர் இருக்கா சார்?”

…. (தயக்கம்)

“சொல்லுங்க சார்!”

“இல்லை!”

“ஓகே பின்னாடி திருப்புங்க. பின்னாடி இருக்கிற CVV நம்பர் சொல்லுங்க!”

(மௌனம்)

“சார், சொல்லுங்க. வெரிஃபிகேஷன்காகதான் கேட்கிறோம்”

“அதெப்படிங்க சொல்ல முடியும்? பேங்க்ல இருந்து அதை யாருகிட்டயும் சொல்லக்கூடாதுனு சொல்லிற்காங்க!”

“சார், இல்ல ஏடிஎம் PIN நம்பர்தான் குடுக்க கூடாது. இது சொல்லலாம்!” (பொய்)

“இல்லங்க, இத சொல்ல முடியாது! உங்க ஆபீஸ்க்கு நான் நேர்ல வரேன். அங்க தரேன்! அட்ரஸ் சொல்லுங்க.”

(அதே நுங்கம்பாக்கம் அட்ரஸ்) “சார் அது இருக்கட்டும். இந்த செக்யூர்ட் கால்லயே எல்லாம் பேசியாகணும். விவரத்தை சொல்லுங்க! அப்பத்தான் பணம் உங்க அக்கவுண்ட்டிற்கு வரும்”

“முடியாது. சும்மா அஞ்சு நாளா இதையேதான் சொல்றிங்க. எந்த பணமும் வரல.”

தொலைபேசி அழைப்பு ஹோல்டிற்கு செல்கிறது. வேறொரு பெண் இப்போது தொடர்புக்கு வருகிறார்.

“சார், அதான் முன்னாடியே கார்டு டு கார்டு பெமென்ட்னு விவரமா சொன்னோமே? அதுக்கு இந்த விவரமெல்லாம் கண்டிப்பா வேணும்.”

“எங்க! நான் உங்க நிறுவனத்துல லோன்க்கு அப்ளை பண்ணிருக்கேன். என் பேர் கூட உங்களுக்கு தெரில. இதுல எப்படி உங்கள நம்பறது?”

“சார், அப்படிலாம் இல்லை. உங்க பேர் எல்லாமே இங்கே விவரமா இருக்கு. இங்க அக்கவுண்ட் ஹோல்டர் நேம் காட்டுது. எங்க சர்வர்ல!”

“என்னோட பேர் காட்டுதா?”

“ஆமா சார்.”

“அது எப்படிங்க? இது என்னோட கம்பெனி அக்கவுண்ட். அதுல கம்பெனி பேர்தான் வரும். என் பேர் எப்படி?”

(மறுமுனையில் நிசப்தம். பின்பு காத்திருக்க சொல்கிறார்கள்)

சிறிது நேரம் இவர் காத்திருந்துவிட்டு சண்முக ரத்தினம் இணைப்பை துண்டித்து விடுகிறார். உடனே நடந்த அனைத்தையும் இ-மெயிலில் விளக்கமாக சைபர் கிரைம் செல்லுக்கு அனுப்பியிருக்கிறார். அதை முகநூலிலும் பதிவு செய்திருக்கிறார். அவரை தொடர்பு கொண்டு பேசினோம்.

லோன்

“என் நம்பர் அவர்களிடம் எப்படிச் சிக்கியது என்றெல்லாம் தெரியவில்லை. எனக்கு பஜாஜ் பைனான்ஸ் கால்கள் அடிக்கடி வரும். என்னுடைய அடையாள அட்டைகளை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்தவுடன், என்னுடைய CIBIL ஸ்கோர் சற்றே குறைவாக இருப்பதாகவும், இவர்கள் சற்று அட்ஜஸ்ட் செய்ததாகவும் கூறினார்கள். அதெப்படி சாத்தியம் எனப் புரியவில்லை. அவர்கள் என் லோன் பாஸ் ஆகி விட்டதாக அளித்த ID எண் “ELI00886SS”. இதை வைத்து ஆன்லைனில் செக் செய்யலாம் என்றார்கள். ஆனால், எந்த முகவரியும் அளிக்கவில்லை. நான் பேசி கொண்டிருக்கும் போதே, பின்னால் வேறொரு பெண், இதே போல வேறொருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். இது ஏதோ ஒரு பெரிய கேங் என்றுதான் தோன்றுகிறது. தினமும் 4 அல்லது 5 முறை பேசி தொல்லை செய்தனர். நான் கொஞ்சம் உஷார் ஆனதால் தப்பித்து விட்டேன். எத்தனை பேரை இவர்கள் ஏமாற்றினார்கள் என்று தெரியவில்லை” என்று ஆதங்கப்பட்டார்.

அவர்கள் உபயோகித்த மொபைல் நம்பர்கள்:  97107 11951, 89394 34166, 74015 65836, 74015 65621.

டிஜிட்டல் இந்தியாவில் எல்லோருக்கும் எல்லாத் தொழில்நுட்பங்களும் தெரியும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சாதாரண ஆப், அதன் செயல்முறையே இன்று இருப்பது போல நாளை இருப்பது இல்லை. புது அப்டேட் என்று சொல்லி மிகவும் அடிப்படையான செயல்முறைகளை கூட மாற்றி விடுவார்கள். ஆதார் கார்டை, பான் கார்டுடன் இணையுங்கள்; ஆதார் கார்டை சிம் கார்டுடன் இணையுங்கள் என்று உத்தரவுகள் வந்த வண்ணம் உள்ளன. ஆதாரை, ஆதாருடன் இணையுங்கள் என்று மட்டும்தான் இன்னமும் சொல்லவில்லை. இந்த நிலையில் இப்படிப்பட்ட மோசடி கும்பல்கள் உருவாகியிருப்பதை எவ்வித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கத் துடிக்கும் இவர்கள் விரைவில் பிடிபட்டால் நலம்.