தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதி தாமிரபரணி ஆற்றில் படகுக் குழாம் அமைப்பதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இப்பகுதி மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற இருப்பதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை, பொதிகை மலையில் உருவாகி தூத்துக்குடி மாவட்டம், காயல் கடற்கரையில் கலக்கும் பொருநை நதியாம் தாமிரபரணி பாயும் பகுதியில் உள்ள அணைகளில் கடைசி அணைதான், ஸ்ரீவைகுண்டம் அணை. கடந்த 2015-ம் ஆண்டு, ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, அணைப் பகுதியில் தேங்கியிருந்த அமலைச் செடிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன. தாமிரபரணி, வற்றாத ஜீவ நதியாக இருப்பதாலும் ஸ்ரீவைகுண்டத்தில் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிற்கும். தற்போது, தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி, வடகால், தென்கால் வழியாகப் பாசனக் குளங்களுக்குச் செல்கிறது.
தடுப்பணைக்கும் புதிய பாலத்துக்கும் இடையில் தாமிரபரணி ஆற்றில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இடத்தில் காணும் பொங்கலை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த அணைப்பகுதியில், படகுக் குழாம் அமைக்க வேண்டும் எனக் கடந்த 20 ஆண்டுகளாக, மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்துவந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இப்பகுதியில் அமலைச் செடிகள், முட்புதர்களை அகற்றியபோதும் ஆட்சியர் வெங்கடேஷிடம் மீண்டும் இதே கோரிக்கையை மக்கள் வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் இப்பகுதியில் படகுக் குழாம் அமைக்க ஸ்ரீ வைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. அணைப்பகுதியைப் பார்வையிட்ட பின், பேருந்துநிலையத்தின் பின்புறம், பிச்சனார்தோப்பு, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளிலுள்ள தாமிரபரணி ஆற்றுப்பகுதிகளில் படகுதளம் அமைப்பதற்காக ஆய்வுசெய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில், நவதிருப்பதிகள் என அழைக்கப்படும் 9 பெருமாள் கோயில்கள் ஸ்ரீவைகுண்டபம் பகுதியைச் சுற்றியே உள்ளது. இவற்றுள் முதல் தலமான கள்ளபிரான் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது. நவதிருப்பதி கோயில்களுக்கு தரிசனத்துக்காக வருகைதரும் பக்தர்கள், இப்பகுதியில் அமைக்கப்பட உள்ள படகுக் குழாமுக்குச் சென்று மகிழ்வார்கள். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வேறு பொழுதுபோக்கு இடம் ஏதும் இல்லாத நிலையில், இப்பகுதியில் படகுக் குழாம் அமைப்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, ஸ்ரீவைகுண்டம் சுற்றுலாத்தலமாகவும் அமையும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.