“ஆச்சர்யப்படாதீங்க, நானும் முதல்வர் ஆவேன்!” – பார்த்திபன்

‘எல்லாப் படத்தையும் உருவாக்க பணம் வேண்டும். ஆனால், சில படங்கள் பண்றதுக்குப் பணத்தைத் தவிர சில விஷயங்கள் இருந்தாப் போதும். இன்னும் சில படங்களை, பணம்கூட வேண்டாமென்று நினைத்துப் பண்ணுவோம். ஏன்னா, அந்தப் படத்தை மிஸ் பண்ணிடவேகூடாது என்ற காரணம் அதுல இருக்கும். அப்படி ஒரு படம்தான், ‘கேணி’!” என்கிறார், நடிகர் பார்த்திபன்.

பார்த்திபன்

”மலையாளத்தில் இதுவரைக்கும் மூன்று படங்கள் நடிச்சிருக்கேன். அந்த மூன்று படமும், அறுபது படங்கள் பண்ணதுக்குச் சமம். மலையாளத்தில் நான் நடித்த ஒரு படத்தில் முல்லைப் பெரியாறு பிரச்னையைப் பேசியிருப்போம். அந்தப் படத்தில்தான் முதல் முறையாக நடிகை அசின் அறிமுகம் ஆனாங்க.  மலையாள நடிகர் இன்னோசன்ட் இந்தப் படத்தில் நடித்திருப்பார். மலையாளத்தில் இவர் ஒரு பெரிய ஸ்டார்.

இந்தப் படத்தில் நான் ஒரு தமிழனாக நடித்திருப்பேன். ‘முல்லை பெரியாரை தமிழனுக்கு இல்லைனு சொல்வியா’னு இன்னோசன்ட்டை நான் தோப்புக்கரணம் போடவைக்கிற ஒரு காட்சி அந்தப் படத்தில் இருக்கும். அதாவது, தமிழன் ஒருவனின் உரிமையைப் பேசக்கூடிய படமாக இந்த மலையாளப் படம் இருந்தது. இந்தப் படத்தை எடுத்ததும் ஒரு மலையாள இயக்குநர். என்னை அந்தப் படத்தில் கூப்பிட்டதற்குக் காரணம், தமிழனை வைத்து இப்படியொரு அரசியல் பேசினால் நன்றாக இருக்கும் என்றுதான். பல வருடங்களுக்கு முன்பு வெளியான படம் இது. ஆனால், இன்றுவரை அந்தத் தண்ணீர் பிரச்னை அப்படியேதான் இருக்கு. இந்த மாதிரியான படங்களை மட்டும் இன்னும் பண்ணிக்கொண்டே இருக்கிறோம்.

தற்போது என் நடிப்பில் வெளிவரப்போகும் ‘கேணி’ படம், முல்லை பெரியாறு பிரச்னையின் சிறிய வடிவம் என்று சொல்லலாம். பிரச்னையைக் ‘கேணி’யாக மாற்றி எடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டையும், கேரளாவையும் தனியாகப் பிரிக்கும்போது தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய ஒரு கேணி கேரளாவுக்குப் போயிருக்கும். அதனால் தண்ணீர் எடுக்கமுடியாமல் மக்கள் ரொம்ப காலமாக  கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பாங்க. இதற்காக ஒரு பெண் போராடிக்கொண்டிருப்பார். அவர்தான் ஜெயப்பிரதா. அவர்களுக்குத் தமிழ்நாட்டுப் பக்கம் சப்போர்ட் செய்ய யாரும் இருக்கமாட்டாங்க. அப்போது, ஜெயப்பிரதாவுக்கு ஆதரவாகப் பேசுற ரோல்தான் இந்தப் படத்தில் நான் செய்திருக்கிறேன்.

நான் ஒருமுறை கேரளாவில் இருந்த ஒருவரின் மனிதாபிமான செயலைப் பாராட்டி தமிழ்நாட்டுக்குக்  கூப்பிட்டுவந்து,  ஒரு இலட்சம் பரிசும், விருதும் கொடுத்தேன். அந்த நேரத்தில் நம் நாட்டில் முல்லை பெரியாறு பிரச்னை போயிட்டிருந்தது. அப்போது எல்லோரும் ‘மலையாளாத்தான் நமக்கு தண்ணிகூட கொடுக்கமாட்டேங்குறான். நீ அவனுக்கு விருது கொடுக்கிறீயா’னு என்னைக் கிழிகிழினு நம்ம ஆளுங்க கிழிச்சாங்க. அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு சொன்னார், ‘இதுதான் பாஸிட்டிவான அரசியல். ஒரு கலைஞன் செய்யவேண்டிய கடமை இது’னு சொன்னார். எல்லோரும் அரசியலை இறங்கித்தான் செய்யவேண்டுமா என்பது வேறு விஷயம். ஆனால், ஒவ்வொரு சினிமாவிலும் ஒரு அரசியல் பண்ணலாம். ‘கேணி’ படத்தில் தனியாக அரசியல் கட்சி ஆரம்பிக்கமால் அரசியல் செய்து இருக்கிறேன்.

“சமீபத்தில் கமலை சந்தித்தற்குப்பின் இருக்கும் ரகசியம்?”

மரியாதை நிமித்தமாகத்தான் கமலைச் சந்தித்தேன். அவர் கட்சியில் சேருவதற்காக இல்லை. நான் ஏற்கெனவே சொன்னமாதிரி கட்சி ஆரம்பித்துதான் அரசியல் செய்யணும்னு அவசியமில்லை. நாடகமேடையில்கூட அரசியல் செய்யலாம்.

“கமல் அரசியல் கட்சி ஆரம்பித்தால், அவருக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா?”

கமல், ரஜினி என இருவரும் வருவதை நான் வரவேற்கிறேன். ஏனென்றால், அவர்கள் சம்பாதித்த பணம் முழுவதும் சினிமாவில் சம்பாதித்தது கிடையாது. இந்தச் சமூகத்தில் சம்பாதித்ததுதான். எல்லா சினிமா டிக்கெட்டுகளும், அதன்மூலம் பெற்ற ஒவ்வொரு பைசாவும் இந்தச் சமூகத்தின் பணம். அதுதான், சம்பளமாக அவர்கள் கைக்கு போய் சேர்ந்திருக்கு. குடித்த தாய்ப்பாலுக்கு நன்றி சொல்றமாதிரி, இந்த சமூகத்துக்கு அவங்க ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுறாங்க. இவர்களின் இந்த செயலை,  இரண்டு கைகள் ஏந்தி நாம வரவேற்கணுமே தவிர, அதில் குற்றம், குறைகள் சொல்லக் கூடாது. இது என் அபிப்ராயம்.

அதற்குப் பிறகு அவர்கள் தேர்தலில் நின்று ஜெயிக்கட்டும், இல்லை ஜெயிக்க முடியாமல் போகட்டும். இவ்வளவு நாள் அவர்களுக்கு இருந்த புகழை வைத்துக்கொண்டு ஏதாவது செய்யமுடியுமா என்று பார்க்கிறார்கள். அவர்கள் இருவரும் இதற்கு மேல் பணம், புகழ் சம்பாதிக்க வேண்டியதில்லை. தேவையான அளவு சம்பாதித்துவிட்டார்கள்.

நேற்றுகூட மிஷ்கின் சொன்னார், ‘இவ்வளவு வருடம் ஓடிக்கொண்டே இருந்தார்களே, இப்போதாவது ஓய்வு எடுக்கக்கூடாதா? இப்போதும் எதற்கு அரசியல்னு வந்தார்கள். அரசியலில் இறங்கிவிட்டால் ஓட வேண்டாமா’னு கேட்டார். அவர்கள் சுயநலமாக ஓய்வு எடுக்கவேண்டும் என்று நினைக்கமால், இந்த அரசியல்குள்ளே இறங்கி அதன்மூலம் நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பது நல்ல விஷயம்.

கமல் சாரைப் பார்த்தபோதுகூட சொன்ன விஷயம் இதுதான், ‘முன்னவிட இப்போது எப்படி சார் உங்களால் உடற்பயிற்சி செய்ய முடியும். சினிமாவில் காலையில் எத்தனை மணிக்குப் போனாலும்கூட ஷூட்டிங் முடிந்தவுடன் உடற்பயிற்சி செய்யலாம். அதனால், இத்தனை வேலைகளுக்கு இடையே உங்களைப் பார்த்துக்கொள்ளமுடியுமா’னு கேட்டேன். அதற்கு கமல்சார், ‘கொஞ்சம் தியாகம் பண்ணித்தான் ஆகணும்’னு சொன்னார். இப்போதே கமல் சார் ஆபீஸைப் பார்த்தால், அவரைப் பார்க்க பலபேர் வருகிறார்கள். அதனால், அரசியலுக்கு வருவதை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு வரவேற்கணும்.

கமல்

“அப்போ, விஷால் அரசியலில் களம் இறங்குவதை எப்படிப் பாக்குறீங்க?”

விஷாலும் ஒரு நல்ல எண்ணத்தில்தான் வர ஆசைப்படுகிறார். இப்போது என்னை யாராவது அரசியல் கட்சி ஆரம்பிக்கச் சொல்லி கூப்பிட்டால், ‘நான் இன்னும் சினிமாவிலேயே சாதிக்கவில்லை. சினிமாவில் தொட வேண்டிய தூரம் நிறைய இருக்கு. தவிர, சம்பாதித்தால் சினிமாவில் மட்டுமே சம்பாதிப்பேன். அரசியலில் சம்பாதிக்க மாட்டேன்னு தீர்மானம் வைத்திருக்கிறேன்’னு சொல்வேன். என்னுடைய அரசியல் என்ட்ரி தள்ளிப்போகும்னு பதில் சொல்வேன். ‘அப்டீன்ன்னா, அரசியலுக்கு வருவீங்க, அப்படித்தானே?’ எனக் கேட்டால், ‘அது வரும் வந்தே தீரும். அதை என் கடமைனு நினைக்குறேன். ஒவ்வொருவரின் கடமையும் அதுதான். அரசியலுக்கு வந்து கட்சி தொடங்குவோமா என தீர்மானிக்கவில்லை. நம்ம வீட்டின் நாலு சுவரை உடைத்துவிட்டுக் கொஞ்சம் வெளியேவந்து இந்த ஊரும், சமூகமும் நம்ம வீடுனு நாம் நினைக்க வேண்டும். அது கலைஞர்களின் கடமை.

என் படங்களில் சமூகத்தின் மீது எனக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துவேன். 25 வருடத்துக்கு முன்னாடியே ‘பார்த்திபன் மனிதநேய மையம்’ என்ற அமைப்பைத் தொடங்கியவன் நான். இதை ஆரம்பிக்கும்போது நாளைக்கே கட்சி ஆரம்பித்து சி.எம் ஆகிடலாம் என்கிற எண்ணம் இல்லை. ஒருவேளை சி.எம் ஆனாலும் ஆகலாம்…. சொல்லமுடியாது. நிறைய சம்பாதித்தேன் வீடு, பங்களா கட்டினேன்னு மட்டுமே இருக்கிறது ஒருவிதமான ‘திருட்டு’ மாதிரிதான் எனக்கு ஃபீல் ஆகுது. அதனால், யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். விஷாலைப் பொறுத்தவரைக்கும் அவர் சினிமாவில் செய்யவேண்டிய விஷயங்களே நிறைய இருக்கு. சரி, ‘அவர் கட்சி ஆரம்பிக்கக் கூடாதா?’னு கேட்டால், அது அவரின் தனிப்பட்ட விஷயம். அவர் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பில் இருக்கிறார். அரசியலுக்கு வரும்போது வேலை பளு கூடுது. அனைத்திற்கும் விஷால் ரெடியாக  இருக்கிறார் என்றால், அவரும் வரட்டுமே!

நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலே, அரசியல்வாதிகள் கொஞ்சம் அலர்ட் ஆகுறாங்க. கமல் சார் சமீபத்தில் ஒரு நீர் நிலையைப் பார்வையிட்டார். மறுநாள் எல்லா பேப்பரிலும் அந்தச் செய்தி வந்தது. உடனே, அரசியல்வாதிகளுக்கு மற்றவர்கள் அவர்களைக் கவனிக்குற விஷயம் தெரிந்தது. எனக்குத் தெரிஞ்சு அரசியல்வாதிகள் யாருமே சமூகஅக்கறையோட அரசியலுக்குள் வரலை. அரசியலை ஒரு தொழிலாகத்தான் அவங்க பார்க்குறாங்க. என் அப்பா முப்பது வருடமாய் இந்தக் கட்சிக்குக் கொடிகட்டினார். அடுத்து, பையன், பேரன் என்று தலைமுறைகளாகத்தான் இருக்காங்க. இவங்க எல்லோருக்குமே சமூக அக்கறை இருப்பதாக  எனக்குத் தெரியவில்லை. நடிகர்களின் அரசியல் என்ட்ரி அரசியல்வாதிகளுக்குக் கொஞ்சமாவது பயத்தைக் கொடுத்திருக்கு. ஜாக்கிரதையா இருக்கணும்னு நினைக்குறாங்க… இதையே நான் லாபமாதான் எடுத்திருக்கிறேன்.

“பெரியார் விருது பெற்ற அனுபவம்?”

‘மாவீரன் கிட்டு’ படத்துக்காக எனக்கு இந்த விருதைத் தருவதாக சொன்னார்கள். அந்தப் படத்தில் கறுப்புச் சட்டை அணிந்து நான் பேசிய விசயங்களுக்காகத்தான் இந்த விருது கிடைத்திருக்கிறது. என் முதல் படத்திலிருந்தே இதுமாதிரி கருத்துகளைப் பேசியிருக்கிறேன். இன்னும் நிறைய செய்யணும்னு இந்த விருது எனக்கு ஊக்கம் கொடுத்திருக்கு.

“ஏ.ஆர்.ரஹ்மானுடனான சந்திப்பு?”

18 வருடத்துக்கு முன்னாடி ‘ஏலேலோ’ங்கிற படத்துக்கு நான் டைரக்‌ஷன், ரஹ்மான் மியூசிக்னு கமிட் ஆகியிருந்தோம். இந்திய இசையும், ஐரிஸ் இசையும் சேர்ந்த படமா இது இருக்கும்னு, படத்தைப் பற்றி அவரும் நானும் நிறையப் பேசினோம். இந்த ஸ்டைலில் ரஹ்மான் இன்னும் படம் பண்ணலை. அவரைச் சந்திச்சப்போ, ‘எவ்வளவு காலம் ஆனாலும், இந்தப் படத்தை நாம் கண்டிப்பா பண்றோம்’னு அவரே சொன்னார்.

பார்த்திபன்

சில படங்கள் எத்தனை வருடம் கழிச்சு வந்தாலும், அதற்கான அடையாளம் சிதையாம அப்படியே இருக்கும் இல்லையா… அப்படி ஒரு படம் இது. ரஹ்மான் சார் போன்ற பெரிய கலைஞர் அந்தப் படத்துக்கு மியூசிக் பண்ணா, அதற்கான மரியாதை இன்னும் அதிகமா இருக்கும். என்னுடன் என் மகள் கீர்த்தனாவும் வந்தார். ‘விரிட்சுவல் ரியாலிட்டி’யை அடிப்படையா வெச்சு ரஹ்மான் சார் ஒரு படம் பண்ணிக்கிட்டு இருக்கார், அந்தப் படத்தைப் போட்டுக்காட்டினார்.

“ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி உங்கள் ட்வீட்?”

அரசியலில் ஆன்மிகம் – welCOME!

But…

ஆன்மிகத்தை அரசியlockக்கும் நோக்கம்?

NO COMMents… (விளங்காததால்)

இப்படி ஒரு ட்வீட் போட்டிருந்தேன். உண்மையாகவே என் ட்வீட்க்கான அர்த்தம், கேள்விதான். ரஜினி சார் எனக்கு நெருங்கிய நண்பர், முன்னுதாரணமான நபர். என் திருமணத்தைக்கூட முதலில் அவரிடம்தான் சொன்னேன். ஆனால், பொதுவெளிக்கு வந்து ஒருத்தர் கருத்து சொல்கிறார் என்றால், அதற்கு ஒரு குடிமகனாக நான் கேட்ட கேள்வி அது. அரசியலை ரவுடித்தனமான பலர் செய்துகொண்டிருக்க, அதற்குள் ஒருவர் ‘ஆன்மிக’ அரசியலைக் கொண்டுவருகிறார் என்றால், அதைப் பாராட்டணும்.

ஆன்மிகத்தை எப்படி அரசியல் ஆக்குவது என்பதுதான் கேள்வி. இந்தக் கருத்துக்குப் பலர், ரஜினி சாருக்கு எதிராகப் பேசிவிட்டதாக சொன்னார்கள். ‘நான் அரசியலுக்கு வருவேனா என்பதைக் கடவுள்தான் சொல்லணும்’னு ரஜினி சார் சொன்னார். கமல் சாராக இருந்தால் அவரிடமே நேராக ‘அரசியலுக்கு வருவீங்களா, இல்லையா’னு கேட்கலாம். ரஜினி சார், ‘கடவுளிடம் கேட்கணும்’னு சொல்றார். கடவுளிடம் எப்படிக் கேட்கமுடியும்னு எனக்குத் தெரியலை. இது நகைச்சுவை கலந்த பதிலே தவிர, இதில் காயப்படுத்துற வார்த்தை எதுவும் இல்லை.