3 வது திருமணத்துக்கு சம்மதிக்காத பெற்றோர்! மகன் வெறிச்செயல்!

3-வது திருமணத்துக்கு சம்மதிக்காத பெற்றோரை, பெற்ற மகனே கொலைசெய்துள்ள அதிர்ச்சி சம்பவம், செங்குன்றத்தில் நடந்துள்ளது.

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள நாரவரிக்குப்பத்தைச் சேர்ந்தவர், வேணு. இவருடைய மனைவி லட்சுமி. இந்தத் தம்பதிக்கு குமார், முருகன் என்ற இரு மகன்கள். குமாருக்குத் திருமணமாகி, அதே பகுதியில் உள்ள மற்றொரு தெருவில் வசிக்கிறார். முருகனுக்கு இருமுறை திருமணமாகியும் மனைவிகள் பிரிந்து சென்றுவிட்டனர். கஞ்சாவுக்கு அடிமையான முருகன், இரு மனைவிகளையும் கொடுமைப்படுத்தியதால், அவர்கள் பிரிந்து சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், தனக்கு மூன்றாவதாகத் திருமணம் செய்துவைக்குமாறு தந்தை வேணுவுக்கு முருகன் தொல்லைகொடுக்க, அவர் மறுத்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் வேணு திடீரென்று இறந்துபோனார். இயற்கையான மரணம் என்று வேணுவின் உடல் அடக்கம்செய்யப்பட்டது.

தொடர்ந்து, தாய் லட்சுமியிடம் தனக்கு மற்றொரு திருமணம் செய்துவைக்குமாறு, தினமும் முருகன் சண்டையிட்டுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி வரை தாய்க்கும் மகனுக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. காலையில், தாயைப் பார்க்க மூத்த மகன் குமார் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டுக்குள் லட்சுமி கழுத்து அறுக்கப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். போலீஸ் விசாரணையில், முருகன் கொலை செய்திருப்பது தெரியவந்தது. நேற்று மதியம் செங்குன்றம் போலீஸில் சரணடைந்த முருகன், தாயைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதோடு, தந்தை வேணுவையும் கம்பியால் அடித்துக் கொலைசெய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இரக்கமே இல்லாமல் வயதான பெற்றோரை மகன் கொலைசெய்த சம்பவத்தால், செங்குன்றம் மக்கள் அதிர்ந்துள்ளனர்.

இதேபோல, கோவையில் நடந்த இன்னொரு சம்பவம்…

இறந்தாலும்கூட நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. கவுண்டம்பாளையம் அசோக் நகரில் உள்ள இடுகாட்டில்,  சில நாள்களுக்கு முன் ஒரே இடத்தில் இரண்டு உடல்கள் புதைக்கப்பட்டிருக்க, அதே இடத்தில்  நேற்று ஓர் சடலத்தை அடக்கம் செய்ய வந்த சிலர் குழி தோண்டியிருக்கின்றனர். உள்ளே வேறு சடலங்கள் இருந்துள்ளன. குழிக்குள் இருந்த சடலங்களை வெளியே எடுத்துப்போட்டுவிட்டு, தாங்கள் கொண்டுவந்த சடலத்தைப் புதைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தும் பலனில்லை. மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பின்னரே, வெளியே எடுத்து வீசப்பட்ட சடலங்களை மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் புதைத்துள்ளனர்.