சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சீனித்துளசி டீ!

சீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம்! இந்த மூலிகைக்கு `மிட்டாய் இலை’ (Candy Leaf), `இனிப்பு இலை’ (Sweet Leaf), `சர்க்கரை இலை’ (Sugar Leaf) என வேறு பல பெயர்களும் உள்ளன. இதில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside), ரெபாடையோசைடு (Rebaudioside) போன்ற வேதிப்பொருள்கள்தான் இதன் இனிப்புக்கு முக்கியக் காரணங்கள்.

சீனித்துளசி

இதில், கரும்புச் சர்க்கரையைவிட 30 மடங்கு இனிப்புச்சுவை அதிகம். ஆனாலும், குறைந்த அளவு சர்க்கரை, மாவுச்சத்துகளைக் கொண்ட பொருள்களே இதில் உள்ளன. குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனிப்புச்சுவை கொண்டது; சர்க்கரை (சீனி), வெல்லத்தைவிட பலமடங்கு இனிப்புச்சுவை உடையது. ஆனாலும் இதைக்கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது; சர்க்கரைநோய் ஏற்படவும் வாய்ப்பிலை. இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது என்பதுதான் இதன் சிறப்பு.
`சர்க்கரை நோயாளிகள் இனிப்புப் பொருள்களைச் சாப்பிடக் கூடாது’ என்று மருத்துவர்கள் வலியுறுத்தும் சூழலில், சீனித்துளசி சர்க்கரைக்கு நல்லதொரு மாற்று. சீனித்துளசியின் இலைகளை உலரவைத்து, பொடியாக்கி தேயிலைத்தூளுடன் சேர்த்து `டிப் டீ பேக்’ வடிவில் இப்போது விற்கப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் சீனித்துளசி டீ பேக்கோடு, சர்க்கரையையும் தயாரித்து விற்கிறார். சுகர் ஃப்ரீயைப்போல சீனித்துளசியை சர்க்கரைக்கு மாற்றாக 100 கிராம் பேக்கில் தருகிறார். அவரிடம் சீனித்துளசி குறித்துப் பேசினோம்…

சீனித்துளசி சர்க்கரை
“நமது கலாசாரத்தில் அறுசுவை உணவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், இன்றைக்கு சர்க்கரை நோயாளிகள் அறுசுவையையும் சுவைக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எல்லோருக்கும் பிடித்த இனிப்புச் சுவையை சர்க்கரை நோயாளிகள் ருசிக்க முடியாது. பொதுவாகவே காலையில் நம் எல்லோருக்குமே காபி, டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், சர்க்கரை சேர்க்காத பானங்களை எப்படி அருந்த முடியும்? இதைக் கருத்தில்கொண்டுதான் சீனித்துளசி டீ தயாரிக்கிறேன். இது, வயிற்றுப் பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணி. உடல் எடையைக் குறைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிப்பதைப்போலத்தான் சீனித்துளசி செடியிலிருந்தும் சர்க்கரை எடுக்கப்படுகிறது. இதன் இலைகளை நன்றாக உலரவைத்து, அதன் மீது சூடான நீரைப் பாய்ச்சி, அதிலிருந்து ஸ்டீவியா என்ற பொருள் பிரித்தெடுக்கப்பட்டு, பொடியாக்கப்படுகிறது. பிறகு அதை அசாம் தேயிலையுடன் சேர்த்து ரெடிமேடு இன்ஸ்டன்ட் டீ பேக்காகக் கொடுக்கிறேன். வட மாநிலங்களில் சீனித்துளசியின் பயன்பாடு அதிகம். இப்போதுதான் இது நம்மிடையே புழக்கத்துக்கு வந்திருக்கிறது. உலக அளவில் Monk Fruit-க்கு அடுத்தபடியாக சீனித்துளசியில்தான் இயற்கையான சர்க்கரை இருக்கிறது. இவை இரண்டில் மட்டுமே ஜீரோ கலோரி, ஜீரோ கார்போஹைட்ரேட் உள்ளன.
ஊட்டச்சத்து விதியின் (Nutritional fact) அடிப்படையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் பிறகே விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறோம். இந்திய உணவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் `NABL (National Accreditation Board for Testing and Calibration Laboratories)’ என்ற ஆய்வுக்கூடம் சென்னை கிண்டியில் இருக்கிறது. அங்கே சீனித்துளசி சர்க்கரை கலந்த தேயிலை மற்றும் வெள்ளைச் சர்க்கரை கலந்த தேயிலை போன்றவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றின் ஆற்றல் மதிப்பு (Energy value), புரோட்டீன், மொத்த கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து போன்றவை எந்த அளவில் இருக்கின்றன என்று கணக்கிடப்பட்டது.

சீனித்துளசி டீ
அதன்படி சீனித்துளசியில் ஆற்றல் மதிப்பு 357.60 கிராம் (கலோரிகளில்), புரோட்டீன் 17.8 கிராம், கொழுப்பு BDL (DL01), கார்போஹைட்ரேட் 72.33 கிராம் (சீனித்துளசி சர்க்கரையில் உள்ள கார்போஹைட்ரேட்-0), நார்ச்சத்து 18.54 கிராம், சோடியம் 18 மில்லி கிராம் ஆக இருக்கும். அதேபோல் வெள்ளைச் சர்க்கரையில் ஆற்றல் மதிப்பு 366 கிராம் (கலோரிகளில்), புரோட்டீன் 16 கிராம், கொழுப்பு  BDL (DL0.1), கார்போஹைட்ரேட் 75.70 கிராம் (வெள்ளைச் சர்க்கரையில் உள்ள கார்போஹைட்ரேட் – 36.70), நார்ச்சத்து 16 கிராம், சோடியம் 123 மில்லி கிராம் ஆக இருந்தன.

ஆக, சீனித்துளசி சர்க்கரையில் கார்போஹைட்ரேட்டின் அளவு ஜீரோ அளவில் இருக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவில் எந்தப் பிரச்னையும் இருக்காது. மாறாக வெள்ளைச் சர்க்கரையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், உணவு எளிதில் செரிமானமாகாது. ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரைநோய் பாதிப்பு அதிகமாகும், கொழுப்பு உருவாகும். இதனால், உடல் பருமன், இதயநோய் பாதிப்புகள் ஏற்படும். இதேபோல், வெள்ளைச் சர்க்கரையில் சோடியத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இது சர்க்கரைநோயை மட்டுமல்லாமல் மற்ற நோய்கள் வருவதற்கும் காரணமாகிவிடும்” என்கிறார் முத்துக்கிருஷ்ணன்.
சீனித்துளசி சர்க்கரையை சுகர்ஃப்ரீயைப் (Sugarfree) போலவே 100 கிராம் பேக்கில் தருகிறார்; சீனித்துளசியில் பிஸ்கெட், இனிப்பு வகைகளைத் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் சொன்னார் முத்துக்கிருஷ்ணன்.