கோவையில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், தி.மு.க முதன்மை செயலாளரும், எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பலபேருடைய தியாகத்தினால் வளர்ந்த கட்சி இது. அப்படிப்பட்ட பல தியாகிகள் பலர் நம்முடன் இல்லை. சிலர் இருந்தும், இந்த மேடைக்கு வரமுடியாத நிலையில் இருக்கின்றனர். இல்லாத தியாகிகளுக்கு வீரவணக்கம், இருக்கும் தியாகிகளுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும். அவர்களின் தியாகம் இல்லாவிடின் நாம் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது.
தி.மு.க என்பது தேர்தலுக்கான கட்சி இல்லை. இது ஒரு இயக்கம். அதனால்தான் தேர்தல்களில் தோற்றாலும், மீண்டு எழுந்து வருகிறோம். பூஜ்ஜியத்தை, ராஜ்ஜியம் ஆக்கும் திறமையுடையவர் கலைஞர். இந்தித் திணிப்பு விஷயத்தில் நாங்கள் சமரசமே செய்து கொண்டது இல்லை. கடைசி வரை எங்களுக்கு இந்தி வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தோம்.
ஆனால், இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் உறுதியில்லாமல் இருக்கிறார்கள். எதைப்பற்றியும் கவலை இல்லாமல், டெல்லியில் இருந்து வரும் உத்தரவுகளுக்க பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தவரை சத்தமில்லாமல் இருந்தனர். சட்டசபையில் அவர்கள், மூச்சுவிடுவது கூடத்தெரியாது. ஆனால், தற்போது தனித்தனியாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
ஒரு அமைச்சர் என்னவென்றால், சட்டசபையிலேயே உடைச்ச கடலை சாப்பிடுகிறார். இன்னொருவர் தெர்மாகோலை வைத்து சுற்றி வருகிறார். செல்லூர் ராஜூ எல்லாம் பெரிய அறிஞர் (நக்கலாக)… சட்டசபைல உக்கார முடியல சார். நாங்கள் எந்தக் கேள்வி கேட்டாலும், அதற்கு உரிய பதிலை யாரும் தருவதில்லை. விரைவில் சூழ்நிலைகள் மாறும். தி.மு.க-விற்கு தலைமை ஏற்க ஸ்டாலினால் மட்டுமே முடியும்” என்றார்.