பதுங்கு குழியினுள் மறைந்திருந்த கொள்ளைக் கும்பல் ஒன்றைத் தாம் இனம் கண்டு கைது செய்திருக்கிறார்கள் என்று சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூவர் தப்பியோடிவிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையிலிருந்து 3 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டரைப் பவுண் நகை என்பன மீட்கப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தென்மராட்சி தெற்கு மறவன்புலவில் இடம்பெற்றது. கேரதீவு முதன்மை வீதியிலிருந்து பல உணவுப் பொதிகளுடன் ஒருவர் சென்றதனை சிவில் உடையில் நின்ற பொலிஸ் அலுவலர் ஒருவர் கண்டுள்ளார்.
அவரைப் பொலிஸ் அலுவலர் பின் தொடர்ந்து சென்றபோது பதுங்கு குழி ஒன்றில் மேலும் பலர் இருந்ததைக் கண்டார்.
அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாகப் பொலிஸ் நிலையத்துக்கும் தகவல் வழங்கினார். அங்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸாரைக் கண்டதும் குழியிலிருந்த 5 பேரும் தப்பியோடத் தொடங்கினர். பொலிஸார் துரத்திச் சென்றனர்.
கடல் தண்ணீருக்குள் இறங்கி அவர்கள் தப்பியோடினர். பொலிஸாரும் கடல் தண்ணீருக்குள் இறங்கித் துரத்தினர். இருவர் பிடிபட ஏனைய மூவரும் தப்பியோடிவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாவற்குளி மற்றும் அளவெட்டியைச் சேர்ந்தவர்கள். இதுவரையான விசாரணைகளிலிருந்து நாவற்குழி கேரதீவு வீதியிலுள்ள வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் நாவற்குழியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன என்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட அவர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாற நீதிமன்று உத்தரவிட்டது என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தென்மராட்சி தெற்குப் பகுதியில் நாவற்குழி தொடக்கம் தனன்களப்பு வரையான பகுதிகளில் மூன்ற மாதங்களாக அடுத்தடுத்து பல வீடுகளில் திருட்டு இடம்பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை தச்சன்தோப்பு பகுதியிலும் மறுநாள் கைதடியிலும் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டன.
வீட்டின் கதவுகளை கோடரியால் தாக்கிச் சேதப்படுத்தி உள்நுழைந்து அங்கிருந்த குடும்பங்களை மோசமாகத் தாக்கி கொள்ளை இடம்பெற்றிருந்தது. சம்பவங்கள் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டன. திருடர், கொள்ளையர்களைப் பிடிப்பதில் பொலிஸார் அதிக ஈடுபாடு காட்டவேண்டும் என்று பிரதேச மக்கள் கோரியிருந்தனர்.