ஒரு திரைப்படத்தின் கதை போல் இருக்கிறது. முதலாவதாக, அந்த இரண்டு குழந்தைகளும் ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தன. பின், மருத்துவமனையில் இந்த குழந்தைகள் இடம் மாறிவிட்டன.
இரண்டாவதாக, மாறிய இரண்டு குழந்தைகளின் பெற்றோர்களும் வெவ்வேறு மதப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். ஒரு குழந்தையின் பெற்றோர் இந்து பழங்குடி பிரிவை சேர்ந்தவர்கள். இன்னொரு பெற்றோர் இஸ்லாமியர்.
இரண்டு ஆண்டு ஒன்பது மாதங்கள் இக்குழந்தைகள் வெவ்வேறு தாய் தந்தையிடம்தான் வளர்கிறார்கள்.
ஆனால், ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பின், மரபணு பரிசோதனை மேற்கொண்ட பிறகு அந்தந்தக் குழந்தைகளின் உண்மையான பெற்றோர் யார் என்பது தெரிய வருகிறது. இதில் திருப்பம் என்னவென்றால், அந்தக் குழந்தைகள் தங்களை வளர்த்த பெற்றோரை பிரிய மறுத்து, உண்மையான பெற்றோரிடம் செல்ல மறுக்கின்றன.
இது வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நிகழ்ந்த சம்பவம்.
என்ன நடந்தது?
ஷகாபுதீன் அஹமத் சொல்கிறார், “நான் என் மனைவி சல்மா பர்வீனை, மங்கல்தாய் மருத்துவமனைக்கு, 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி, காலை 6 மணிக்கு அழைத்து சென்றேன்.
சரியாக ஒரு மணி நேரத்திற்குப் பின், என் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அது சுகப்பிரசவமாக இருந்ததால், அடுத்த நாளே நாங்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டோம்”
மேலும் அவர், “ஒரு வாரத்திற்கு பின், என் மனைவி என்னிடம் இது நம் குழந்தை இல்லை என்றார், நான் , ` என்ன சொல்கிறாய்? இது போலவெல்லாம் நீ பேசக்கூடாது ` என்றேன்.
ஆனால், என் மனைவி நான் குழந்தை பெற்ற அதே பிரசவ அறையில் ஒரு போடோ பழங்குடி பெண்ணும் குழந்தையை பெற்றெடுத்தார். இரண்டு குழந்தைகளும் மாறிவிட்டது என்று நினைக்கிறேன் என்றார்.
நான் அதை நம்பவில்லை. ஆனால், என் மனைவி இதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்.”
எனக்கு தொடக்கத்திலிருந்தே ஜொனைத் என் உண்மையான மகன் இல்லை என்ற சந்தேகம் இருந்தது என்கிறார் சல்மா பர்பீன்.
சல்மா பர்பீன்,”எனக்கு ஜொனைத்தின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சந்தேகமாக இருக்கும். அவன் முகம், பிரசவ அறையில் இருந்த அந்த இன்னொரு பெண்ணின் சாயலில் இருந்தது.
அவனுக்கு சிறிய கண்கள் இருந்தது. என் குடும்பத்தில் யாருக்கு அத்தகைய கண்கள் இல்லை.”
அஹமத் இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளரிடம் சொன்ன போது, அவர், `உங்கள் மனைவிக்கு ஏதேனும் மனநல பாதிப்பு இருக்கலாம், அவருக்கு மனநல ஆலோசனை தேவைப்படுகிறது` என்று சொல்லி இருக்கிறார்.
பின், அஹமத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், அன்று அந்த மருத்துவமனையில் 7 மணி வாக்கில் பிறந்த அனைத்து குழந்தைகள் குறித்த தகவல்களையும் கோரி இருக்கிறார்.
மனப் போராட்டம்
ஒரு மாதத்திற்குப் பின், அஹமதின் குழந்தை பிறந்த அதே நாளில் அந்த மருத்துவமனையில் குழந்தைப் பெற்றெடுத்த ஏழு பெண்கள் குறித்த தகவல்கள் வந்திருக்கிறது.
அவர்கள் அளித்த தகவலில் இருந்த ஒரு பழங்குடி பெண் குறித்து இவருக்கு சந்தேகம் எழுந்து இருக்கிறது. ஏனெனில், அந்தப் பெண்ணும் ஓர் ஆண் குழந்தையைதான் பெற்றெடுத்து இருக்கிறார்.
இரண்டு குழந்தைகளும் 3 கிலோ இடையில் இருந்து இருக்கின்றன. அதுமட்டுமல்ல, இரண்டு குழந்தைகளும் ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்து இருக்கின்றன.
நான் அவர்களின் கிராமத்திற்கு இரண்டு முறை சென்றேன். ஆனால், அவர்கள் வீட்டிற்கு செல்லும் அளவுக்கு தைரியம் வரவில்லை.
பின், அஹமத் அந்த பழங்குடி போரா குடும்பத்திற்கு இது தொடர்பாக ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
“நாங்கள் நம் இரண்டு குழந்தைகளும் மருத்துவமனையில் மாறி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். உங்களுக்கும் அதுகுறித்து சந்தேகம் இருக்கிறதா? என்று எழுதி, என் கைப்பேசி எண்னை அந்தக் கடிதத்தின் கடைசி வரியில் குறிப்பிட்டு அழைக்க கூறி இருந்தேன். ” என்கிறார் அஹமத்.
அஹமத் இல்லத்திலிருந்து சரியாக 30 கிலோமீட்டர் தொலைவில்தான், அந்த பழங்குடி தம்பதிகளான அனில், ஷிவாலி மற்றும் தவழும் வயதில் இருந்த அந்தக் குழந்தை ரியான் சந்திரா வசித்து வந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு தங்கள் குழந்தை குறித்து எந்த சந்தேகமும் எழவில்லை. அவர்கள் அந்த குழந்தையுடன் ஒரு மகிழ்ச்சியான வாழ்வையே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
போராவுக்கும், அவர் மனைவிக்கும் இப்படியெல்லாம்கூட நிகழும் என்ற சந்தேகம் கிஞ்சித்தும் இல்லை. அவர்கள் குடும்பத்தினர் ஒருவருக்கும் இது குறித்த சந்தேகம் இல்லை. ஆனால், அந்த இரண்டு குடும்பங்களும் சந்தித்தப் பின் அனைத்தும் மாறியது.
“அஹமத் குடும்பத்திடம் வளர்ந்த அந்த குழந்தையை பார்த்தபோது, அந்த குழந்தை என் கணவரின் சாயலில் இருப்பதை முதலில் உணர்ந்தேன்.
நான் கவலை அடைந்தேன். அழுதேன். நாங்கள் மற்ற அஸ்ஸாம் மக்களை போலவோ அல்லது முஸ்லிம்களை போலவோ அல்ல.
நாங்கள் போடோ பழங்குடிகள் . எங்கள் கண், கன்னம் மற்றும் கை ஆகியவை அந்த மக்களைப் போல இருக்காது. நாங்கள் வேறுபட்டவர்கள். மங்கோலிய இனத்தவர்களின் தன்மைகள் எங்களிடம் இருக்கும்.”என்கிறார் ஷிவாலி போரோ.
ஷிவாலி குடும்பத்திடம் வளர்ந்த அந்தக் குழந்தை ரியானை பார்த்த உடன், அவன் தங்கள் குழந்தை என்பது இவர்களுக்கு தெரிந்துவிட்டது.
குழந்தையை மாற்றிக் கொள்ளலாம் என்று விரும்பி இருக்கிறார். ஆனால், போரோவின் குடும்பம் அதற்கு மறுத்துவிட்டது.
அஹமத் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து விசாரித்து இருக்கிறது. ஆனால், அன்று அந்த மருத்துவமனையில் பிரசவ அறையில் இருந்த செவிலியரிடம் விசாரித்தப் பின், குழந்தைகள் எதுவும் மாறவில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறது.
அஹமத் சமாதானம் அடையவில்லை. அவர் தன் மனைவியின் ரத்த மாதிரியையும், அவர்களிடம் வளர்ந்த குழந்தையின் ரத்த மாதிரியையும் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி இருக்கிறார்.
2015 ஆம் அண்டு ஆகஸ்ட் மாதம், மரபணு பரிசோதனை அறிக்கை வந்திருக்கிறது. அந்த அறிக்கைதான் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வாக இருந்து இருக்கிறது. சல்மா பர்பீனுக்கும் அவர்களிடம் வளர்ந்த ஜொனைத் என்ற குழந்தைக்கும் எந்த மரபணு ஒற்றுமையும் இல்லை.
ஆனால், இது சட்டரீதியிலானது இல்லை என்று காரணம் சொல்லி அந்த மரபணு அறிக்கையை ஏற்றுக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. அதே ஆண்டு, அஹமத் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இரண்டு குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை மருத்துவமனையில் பெற்றதாகவும், இரண்டு குடும்பத்தையும் சந்தித்ததாகவும் கூறுகிறார் விசாரணைக் குறித்து பேசிய உதவி ஆய்வாளர் ஹேமண்டா.
ஜனவரி மாதம் 2016 ஆம் ஆண்டு, அந்த உதவி ஆய்வாளர் ரத்த மாதிரிகள் மற்றும் அந்த இரண்டு தம்பதிகள், குழந்தைகளுடன் கொல்கத்தா பயணமாகி இருக்கிறார். ஆனால், அங்கு உள்ள தடயவியல் ஆய்வகம், விண்ணப்பத்தில் சில பிழைகள் இருப்பதாக கூறி, சோதனை செய்ய மறுத்து இருக்கிறது.
“மீண்டும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்த மாதிரிகளை சேகரித்து, தலைநகர் கெளஹாத்தியில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி இருக்கிறது. நவம்பர் மாதம் வந்த ஆய்வு முடிவு, இரண்டு குழந்தைகளும் இடம் மாறி இருக்கின்றன என்பதை மீண்டும் உறுதி செய்தது.” என்கிறார் உதவி ஆய்வாளர் ஹேமண்டா.
உதவி ஆய்வாளர் நீதி மன்றத்திற்கு சென்று சட்டத்தின் உதவியை நாட சொல்லி இருக்கிறார்.
“வழக்கை விசாரித்த நீதித் துறை நடுவர், நீங்கள் குழந்தையை மாற்றிக் கொள்ள விரும்பினால், அதற்கு சட்டம் உதவும். ஆனால், நாங்கள் அப்படி செய்யவிரும்பவில்லை என்று சொன்னோம். ஏனென்றால், மூன்று ஆண்டுகள் நாங்கள் அந்தக் குழந்தையை வளர்த்து இருக்கிறோம். அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது.” என்கிறார் சல்மா.
சல்மா,”அதே நேரம், ஜொனைத்தும் என் கணவரின் தம்பியின் மடியில் அமர்ந்துக் கொண்டு, அவரை இறுகப் பற்றிக் கொண்டான்.” என்கிறார்.
ரியானும் அதுபோல, ஷிவாலி போராவின் கழுத்தை இறுகப் பற்றி அழ தொடங்கி இருக்கிறான்.
குழந்தைகளை மாற்றிக் கொள்வது அந்தக் குழந்தைகளை மனதளவில் பாதிக்கும் . அவர் குழந்தைகள், அவர்களுக்கு நடப்பதை புரிந்துக் கொள்ளும் வயதும் இல்லை என்கிறார் அனில் போரோ.
ஜொனைத்தும் அஹமத் குடும்பத்தை அதிகமாக நேசிக்கிறார்.
“நாங்கள் குழந்தையை மாற்றிக் கொள்ளலாம் என்று நீதிமன்றத்துக்கு சென்ற அந்த நாள், என் மூத்த மகள் என்னிடம், அம்மா… தம்பியை அனுப்பிவிடாதீர்கள், அவன் சென்றால் நான் இறந்துவிடுவேன் என்றாள்” என்கிறார் சல்மா பர்பீன்.
அஹமத் சொல்கிறார், “இத்தனை நாட்கள் பேசிய மொழி, வாழ்ந்த சூழல், உணவு பழக்கம், கலச்சாரம் அனைத்தையும் மாற்றிக் கொள்வது ஒரு குழந்தைக்கு சுலபமானதல்ல.”
ஒரு தாயாக குழந்தையை பிரிவது அவ்வளவு சுலபமானது இல்லை.
குழந்தை வளர்ந்தப் பின் அவர்களே யாருடன் வாழ்வது என்று முடிவு செய்துக் கொள்ளட்டும்.
இரு குடும்பங்களும், நண்பர்களாக ஆக, குழந்தைகளிடம் இணக்கமாக அடிக்கடி சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள்.