ரசிகர்களின் சூழ்ச்சி! ரஜினி அதிர்ச்சி

சிஸ்டம் சரியில்லை… போர் வரும்போது பார்த்துக்கலாம்… வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி…’ என்று ரசிகர்கள் சந்திப்பில் பரபரப்பாகப் பேசிவிட்டு கட்சி தொடங்கும் பணியில் பரபரப்பாகிவிட்டார் ரஜினி. அவரின் மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ரசிகர்கள் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 19-ம்தேதி வேலூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அகில இந்திய ரஜினி மக்கள் மன்றப் பொறுப்பாளர் சுதாகர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மன்ற நிர்வாகிகள் 300 பேர் கலந்து கொண்டனர்.

மன்ற ஆலோசனைக் கூட்டத்துக்காக வந்த ரசிகர்கள் ஒரு செலவையும் செய்யக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லப்பட்டது. வேலூர் நட்சத்திர ஹோட்டல் மற்றும் விருந்து அனைத்துக்குமான மொத்த செலவையும் ரஜினியே ஏற்றுக்கொண்டார். பின்பு வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளராக சோளிங்கர் ரவியையும் மாவட்ட மகளிர் அணியின் செயலாளராக வழக்கறிஞர் சங்கீதாவையும் பிறகு ஏழு மாவட்ட  நிர்வாகிகளையும் அதிகாரபூர்வமாக நியமித்து அறிவித்தார், சுதாகர். தற்போது அறிவித்துள்ள நிர்வாகிகளின் செயல்பாடுகளை மேலிடம் கண்காணிக்கும் அவர்கள் கடமை தவறிச் செயல்பட்டால் உடனடியாகப் பதவி பறிக்கப்படும் என்று மன்ற சட்டவிதிகளில் கறாராக அறிவித்திருக்கின்றனர். அடுத்து வருகின்ற 27-ம்தேதி தூத்துக்குடியில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கப்போகிறார், சுதாகர்.

மன்ற வேலைகள் எப்படி நடந்து வருகின்றன, குழறுபடிகள் ஏதேனும் நிகழ்கிறதா என்பது குறித்து மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “எங்கள் தலைவர், ‘1996-ல் முதல்வர் நாற்காலி என்னைத்தேடி வந்தது, நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். முதல்வர் பதவிக்கு 45 வயதில் ஆசைப்படாத நான் இப்போது 68-வயதிலா ஆசைப்படுவேன்’ என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம்தேதி பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் ரசிகர்கள் பலர் 1996-ல் தலைவர் கண்டிப்பாக அரசியல் இறங்குவார் என்கிற நம்பிகையில் அப்போது நடந்த சட்டமன்றதேர்தலில் தி.மு.க-வுக்கும், தமிழ் மாநில காங்கிரஸுக்கும் ஆதரவாக கொடி, தோரணம் கட்டி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ரஜினி

இப்போது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பலபேர் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் உள்பட பல கட்சிகளில் மாவட்டப் பொறுப்புக்கான பதவிகளில் உள்ளனர். தலைவர் எப்போது தனிக்கட்சி தொடங்கினாலும் அவர்கள் அத்தனைபேரும் தாங்கள் வகிக்கும் கட்சிப் பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு அவர் ஆரம்பிக்கும் அரசியல் கட்சியில் இணைந்து விடுவார்கள் என்றுதான் எங்கள் தரப்பில் நம்பிக்கையோடு இருந்து வருகிறோம்.

மக்கள் மன்றம் எதிர்பார்த்ததைப் போல ஒருசிலபேர் தலைவர் மேல் கொண்ட உண்மையான பற்றோடு மீண்டும் மன்றத்தில் சேருவதை விரும்புகின்றனர். ஆனால் மாற்றுக் கட்சிகளில் பதவிகளில் உள்ள பலர் அந்தக் கட்சிப் பதவிகளை இழக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது. மேலும் அந்தக் கட்சிகளில் உள்ள தலைவரின் ரசிகர்களை அந்தத் தலைமை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, எங்கள் மக்கள் மன்ற அமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். இப்போது புதிதாக ரஜினி மக்கள் மன்றத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் ‘சீனியர் ரசிகர்கள்’ என்கிற மரியாதையில் அவர்களுக்கு மரியாதை கொடுத்து அன்போடு பேசி வருகின்றனர். மேலும் ரசிகர்களின் பல்ஸ் பார்த்து தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் மேலிடப் புள்ளிகளுக்குத் தகவல் கொடுத்து வருவதாகவும் செய்தி உலா வருகிறது.

‘சக்குபாய்’ படத்தின், ‘இறைவா, எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன், நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று…’ என்று எழுதப்பட்டிருந்த விளம்பர வாசகம் அப்போது பிரபலம். இப்போது அந்த வாசத்துக்கும், ரஜினிக்கும் அச்சு அசலாகப் பொருந்திவருகிறது. ‘இறைவா, எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன், நண்பர்களிடமிருந்தும், வேறுகட்சியில் பதவி வகிக்கும் பழைய ரசிகளிடமிருந்தும் என்னைக் காப்பாற்று” என்று கூடுதலாக சேர்த்துக்கொள்ளும் சூழ்நிலையில் ரஜினி இருக்கிறார். ஏற்கெனவே அவரே குறிப்பிட்டது போல ‘போர்க்களத்தில் இறங்க வீரம் மட்டும் போதாது, வியூகம் வகுக்க வேண்டும்’ என்று சொன்னார். அதுபோல ரஜினி மக்கள் மன்றத்தைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சி வலைகளை எப்படி அறுத்தெறியப் போகிறார், தனது அரசியல் எதிரிகளை ஏந்த வியூகம் அமைத்து வெல்லப் போகிறார் ரஜினி என்று தமிழக அரசியல் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது.