சென்னையில் நடைபெற்ற இந்து ஆன்மிகச் சேவை கண்காட்சியில் நடத்தப்பட்ட ‘கன்யா வந்தனம்’ நிகழ்ச்சி விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. வேளச்சேரி, குருநானக் கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ‘பெண்மையைப் போற்றுகிறோம்’ என்ற வகையில் 3,300 சிறுமிகளுக்குப் பாதபூஜை நடத்தப்பட்டது. 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறுமிகளின் பாதங்களைக் கழுவி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து மலர்தூவி அதே வயதுடைய சிறுவர்கள், ‘கன்யா வந்தனம்’ என்ற பாத பூஜையைச் செய்தனர். இதில், விவகாரம் என்னவென்றால், மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளி மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிக் குழந்தைகளை எப்படி இந்த நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்பதில் தொடங்கி, குழந்தைகளின் உளவியல் தீவிரமாகப் பாதிக்கப்படும் என்பதுவரை பல்வேறு விமர்சனங்கள் இந்தக் ‘கன்யா வந்தனம்’ நிகழ்ச்சிமீது வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகக் குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயனிடம் பேசினோம்,“மிகவும் மோசமான விஷயம் இது. கலாசாரம், பண்பாடு, மதம் எனக் கூறி மாணவர்களையும், குழந்தைகளையும் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. குழந்தைகளின் அடிப்படை மாண்புக்கு எதிரான விஷயம் இந்த நிகழ்ச்சி. இவர்கள் எந்தவிதமான கலாசாரத்தைப் போதிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய வயது அந்தக் குழந்தைகளுக்கு இல்லை. ‘நாம் ஏன் இவர்களின் கால்களைக் கழுவுகிறோம்.. இவர்கள் ஏன் நம் கால்களைக் கழுவுகிறார்கள்’ என்ற புரிதல் குழந்தைகளின் மனதில் இருக்குமா என்ன? அவர்களின் மாண்புகள் இந்த இளம் வயதிலேயே சிதைக்கப்படுவது அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒரு மதம் சார்ந்து குழந்தைகளைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இன்று இந்து மத நிகழ்வுக்குப் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்கள். நாளை, வேறொரு மத நிகழ்வுக்காக அந்த மதத்தினர் அரசுப் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்றால் பரவாயில்லையா? எந்த மதமும் தங்களது தேவைக்காகக் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. இந்த நிகழ்ச்சி மூலம் ஒழுக்கம் வளரும் என்றால், அதைவிட மூடநம்பிக்கை வேறு உண்டா? நாங்கள் மதங்களுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், மதம் சார்ந்த இந்த மூடநம்பிக்கைகளைக் கடுமையாக எதிர்ப்போம். அதுவும், பள்ளிக் குழந்தைகளை இவ்வாறு கூட்டிச்சென்று அவர்களின் மனதில் சிறுவயதிலேயே மதத் திணிப்பை மேற்கொள்வதைக் கடுமையாக எதிர்க்கிறோம்.