கடன் தொல்லையால் கடல் கடந்து வந்த இலங்கை வாலிபர் கைது!

4-9-190x122கடன் தொல்லையால் கடல் கடந்து தப்பி வந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞரை இந்தியக் கடலோரக் காவல் படையினர் நேற்று (25.1.2018) கைது செய்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஆவணங்கள் இன்றி கடல் கடந்து வந்த இலங்கை வாலிபர் இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ ஷ்யாமளன் (38). சொந்த ஊரில் சிறு கடை வைத்து வியாபாரம் செய்ததில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் சிறிது சிறிதாக கடன் வாங்கியுள்ளார்.

ஆனாலும் தொழிலில் முன்னேற்றம் இல்லாத நிலையில், கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் நடராஜ ஷ்யாமளனை நெருக்கத் தொடங்கினர்.

இதனால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நடராஜ ஷ்யாமளன், பிளாஸ்டிக் படகின் மூலம் இந்தியக் கடல் பகுதியான 2-ம் தீடை பகுதிக்கு வந்திறங்கியுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து சென்ற இந்தியக் கடலோரக் காவல் படையினர் நடராஜ ஷ்யாமளனை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

கடலோரக் காவல் படையினரின் விசாரணைக்குப் பின் தமிழகக் கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர்.

கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸார், நடராஜ ஷயாமளன் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.