காலால் எட்டி உதைத்த மகிந்த!

முன்னாள் ஜனாதிபதியான எனது நண்பர் மகிந்த ராஜபக்ச அவருடன் இணைந்திருந்த ஜாம்பவான்களை காலால் எட்டி உதைத்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

images (1)அத்துடன், தமது அரசாங்கமாக இருந்தாலும் தவறு இடம்பெறுமாயின் அதனைத் திருத்துவதற்கு தாம் பின்வாங்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பக்கமூன பகுதியில் இன்று நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஆட்சிக்கு வரும் அரசியல் வாதிகள் திருடி தமது சட்டைப் பைகளை நிரப்பிக்கொள்கின்றனர். அவ்வாறானவர்களே இந்த நாட்டிற்கு பாரிய அழிவையும் ஏற்படுத்தியுள்ளனர்.

தன்னை பொறுத்தமட்டில் துறைமுக நகரம் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான். அது நாட்டுக்கு பாரிய முதலீடு. ஆனாலும் சொந்தமாக எழுதிக்கொடுப்பதற்கு கையெழுத்திட முடியாது என கூறினேன்.

இலங்கை வரலாற்றில் இந்த நாட்டு மண்ணை வேறு ஒருவருக்கு எழுதிக்கொடுத்த வரலாறு இல்லவே இல்லை. அவ்வாறு நாட்டை தாரைவார்த்த ஒருவரே இன்று நாங்கள் நாட்டை விற்றுவிட்டோம் என கூறிவருகின்றார்.

நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி வீரனை போன்று காட்டிக்கொண்டார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் வெற்றிக்கொள்ளப்பட்டது. தனி ஒரு ஆளாகவா மகிந்த ராஜபக்ச யுத்தத்தை வெற்றிக்கொண்டார்.

துட்டகெமுனு மன்னரும் 10 ஜாம்பவான்களின் துணையுடனேயே யுத்தத்தை வெற்றிக்கொண்டார் என்பதை மறக்க வேண்டாம். மகிந்த யுத்தத்தை வெற்றிகொண்ட போது இருந்த ஜாம்பவான்களே நாங்களே.

அப்போது அமைச்சரவையில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் அமைச்சர்கள் தற்போது என்னுடனேயே இருக்கின்றனர். 2010ஆம் ஆண்டு வெற்றியின் பின்னர் எனது நண்பர் மகிந்த ராஜபக்ச வியத்தகு மாற்றங்களை கண்டார்.

எங்களை மறந்தார். பத்து ஜாம்பவான்களையும் காலால் எட்டி உதைத்தார். எம் அனைவரையும் ஒதுக்கிவிட்டு, குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் அரசாங்கத்தை நடத்திச்செல்ல ஆரம்பித்தார்.

அந்த நிலைமையை மாற்றியமக்கவே நான் நாட்டை பொறுப்பேற்றேன். நான் இந்த கதிரையில் இருக்காவிட்டால் இந்த நாடும், நாட்டு மக்களும் இருக்கும் இடம் எனக்கு நன்கு தெரியும்.

மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஜனாதிபதியாக்கியுள்ளனர். யார் செய்தாலும், எந்த கட்சி செய்தாலும் தவறு தவறுதான். அதற்கு இடமளிக்க முடியாது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் எமது போராட்டம் ஆரம்பமாகும்.

சிறந்த உள்ளூராட்சி சபைகள், திருடாத ஜனாதிபதி இதுவே நாட்டின் தேவையாக இருக்கின்றது. ஒழுக்கமற்ற ஊழல் அரசியல் காரணமாகவே இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாதுள்ளதாக” ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.