திருப்பூர் மாநகரில், முறையான ஆவணங்கள் இன்றி சுற்றித்திரிந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 6 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
திருப்பூர் மாநகரில், பின்னலாடை வர்த்தகம் மேற்கொள்வதற்காகப் பல்வேறு வெளிமாநில மற்றும் வெளிநாட்டவர்கள் வந்துசெல்வது வழக்கம். குறிப்பாக, நைஜீரியாவைச் சேர்ந்த வர்த்தகர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதன் காரணமாகவே, திருப்பூரைச் சேர்ந்த உள்ளூர் வியாபாரிகளுக்கும், நைஜீரியர்களுக்குமான சச்சரவுகளும் அதிகரித்துக்கொண்டி ருக்கின்றன. முறையான விசா இல்லாமல் தங்கியிருப்பது, கல்வி மற்றும் சுற்றுலா விசாவில் வந்துவிட்டு, இங்கே வர்த்தகத்தில் ஈடுபடுவது போன்ற எண்ணற்ற குற்றச்சாட்டுகள் நைஜீரியர்கள்மீது முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், திருப்பூர் மாநகரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாகத் தங்கி, பின்னலாடை வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த 6 நைஜீரியர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஒகிதி மைக்கேல், சன்டேமேத்யூ, கெனட் ஒடிடிகா, பியாடி என்னெவ் அவே, பாலினே அபுஜி, ஒகமோ சின்னோ பாலினே ஆகிய நைஜீரியர்கள் 6 பேரையும் காதர்பேட்டை மற்றும் ராயபுரம் பகுதியில் வைத்துப் பிடித்த திருப்பூர் காவல்துறை, அவர்களிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாத குற்றத்துக்காக வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். மேலும், இதுபோன்று உரிய ஆவணங்கள் இல்லாத இன்னும் பல நைஜீரியர்களும் விரைவில் பிடிப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.