விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளவேண்டாம் என்று போக்குவரத்து காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டன் தாம்பரத்தில் தங்கியிருந்து கால்டாக்சி ஓட்டுநராக பணியாற்றிவந்தார். அவர், நேற்று சென்னை, ஓ.எம்.ஆர் சாலையில் வரும்போது காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது, அவர் சீட் பெல்ட் அணியாததால், அவரைக் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தித் திட்டியுள்ளனர். அதனால், மனமுடைந்த மணிகண்டன், அந்தக் காவலர்கள் முன்னிலையிலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தனது மகனிடம் மோசமாக நடந்த போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் மணிகண்டனின் தாயார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். இந்தநிலையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு ஏ.கே.விஸ்வநாதன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டாம். பொதுமக்களிடம் அமைதியாகவும், சட்ட ரீதியாகவும் நடந்துகொள்ளவேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.