காதலனுடன் இருந்த போட்டோவை வாங்கச்சென்ற நிச்சயித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

சென்னையில் நள்ளிரவு நேரத்தில் காருக்குள் இளம்பெண்ணிடம் அத்துமீறிய கால்டாக்ஸி டிரைவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு சபரி துரிதமாகப் பிடித்துள்ளார். மீட்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ACCUSED_RAPE_CHENNAI_15191குன்றத்தூரிலிருந்து திருமுடிவாக்கம் செல்லும் சாலையில் குன்றத்தூர் காவல் நிலையத்தில் ஏட்டுவாகப் பணியாற்றும் சபரி, நள்ளிரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது, ஆள்நடமாட்டமில்லாத பகுதியிலிருந்து ‘காப்பாற்றுங்கள்’ என்று ஒரு பெண்ணின் அபயக்குரல் கேட்டது. அதைக்கவனித்த சபரி, அந்தப் பகுதிக்குச் சென்றார். அங்கு, காரின் விளக்குகள் அணைக்கப்பட்டு, காருக்குள் இரண்டு இளைஞர்களும் ஒரு பெண்ணும் அலங்கோலமான நிலையில் இருந்ததைக் கண்டு போலீஸ் ஏட்டு சபரி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இந்தத் தகவலை உதவி கமிஷனர் கண்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோருக்கு போனில் தெரிவித்தார். போலீஸ் டீம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது.

காருக்குள் அந்த இளம்பெண்ணிடம் இளைஞர்கள் இருவரும் அத்துமீறி நடந்ததைப் பார்த்த போலீஸ் டீம் அவர்களைப் பிடிக்க முயன்றனர். போலீஸிடமிருந்து தப்பி ஓட முயன்ற அந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காருக்குள் இருந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். போலீஸாரிடம் சிக்கிய இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் அசோக்குமார். கால்டாக்ஸி டிரைவர். இவரது நண்பர் அன்பரசு. அசோக்குமார், திருவள்ளூரைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அப்போது காதல் ஜோடி, பல இடங்களுக்குச் சென்று நெருக்கமாக போட்டோக்கள் எடுத்துள்ளனர். இந்தநிலையில் அந்தப் பெண்ணுக்கு வேறுஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார், காதலி ஏமாற்றிய தகவலை அன்பரசுவிடம் தெரிவித்துள்ளார். இருவரும் சேர்ந்து இளம்பெண்ணைப் பழிவாங்க திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, அசோக்குமார், தன்னுடைய காதலியிடம் போனில் அன்பாகப் பேசியுள்ளார். அப்போது, ‘நாம் இருவரும் எடுத்த போட்டோக்கள் அன்பரசுவிடம் இருப்பதாகக் கூறியதோடு நீயும் வந்தால் போட்டோவை வாங்கிவிடலாம்’ என்று காதலியிடம் அசோக்குமார் கூறியுள்ளார். அதை நம்பிய அந்தப் பெண், அசோக்குமார் சொன்ன இடத்துக்கு வந்துள்ளார். அப்போது, அன்பரசு, காரில் அங்கு வந்துள்ளார். மூன்று பேரும் காரில் அம்பத்தூரிலிருந்து குன்றத்தூருக்குச் சென்றுள்ளனர். திருமுடிவாக்கம் அருகில் உள்ள வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்டச்சாலையில் ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது போட்டோக்களைத் தரும்படி அந்த இளம்பெண் கேட்டுள்ளார்.

அதை காதில் வாங்கிக் கொள்ளாத இருவரும் அந்த இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளனர். காருக்குள், அந்த இளம்பெண்ணின் கை, கால்களைக் கட்டியதோடு எல்லை மீறியுள்ளனர். அதை தங்களுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணின் அபயக்குரல் எங்களுக்குக் கேட்டதும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். இந்தத் தகவலை மாப்பிள்ளை வீட்டினர் கேள்விப்பட்டதால் இளம்பெண்ணின் திருமணத்திலும் சிக்கல் எழுந்துள்ளது.

கால்டாக்ஸி டிரைவர்களான அசோக்குமார், அன்பரசு ஆகியோரின் செல்போன்களில் ஆபாச வீடியோக்கள், படங்கள் இருந்தன. இதையடுத்து இருவரையும் பெண் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினோம். அப்போது, வீடியோ குறித்த தகவலை கேட்ட பெண் நீதிபதி, அசோக்குமார், அன்பரசுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இருவரின் பின்னணி குறித்து விசாரித்துவருகிறோம்” என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “காதலனை நம்பி வந்த இளம்பெண்ணின் எதிர்காலத்தை நண்பருடன் சேர்ந்து நாசமாக்கியுள்ளார் காதலன். சரியான நேரத்தில் ரோந்து போலீஸார் அங்கு சென்றதால் அந்த இளம்பெண் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளார். இல்லையெனில், கஞ்சா போதையில் இருந்த குற்றவாளிகள் இருவரும் அந்தப் பெண்ணை கொலை செய்திருக்ககூட வாய்ப்புள்ளது. துணிச்சலாக செயல்பட்ட ஏட்டு சபரியை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகள் வெகுமதி கொடுத்து பாராட்டியுள்ளனர்” என்றார்.

சென்னையில் நள்ளிரவு நேரத்தில் இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.