எழுத்தாளர் சுஜாதா, “எதிர்காலத்தில் தண்ணீர் பாட்டிலில் விற்கப்படும்” என எழுபதுகளில் வாரப் பத்திரிகை ஒன்றில் எழுதியபோது, ‘இது நடைமுறையில் சாத்தியமாக வாய்ப்பே இல்லை’ என்றுதான் தமிழகத்தில் பல வாசகர்களும் நினைத்தனர். ஆனால் அது நிஜமானது. இதேபோல, கற்றதும் பெற்றதும் தொடரில், தொழில்நுட்பம் குறித்து அவர் அப்போது எழுதிய பல விஷயங்களும் தற்போது நிஜமாகியிருக்கின்றன. உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ், காலின்ஸ் ஹெமிங்வே என்பவருடன் இணைந்து 1999-ம் ஆண்டு எழுதிய புத்தகத்தின் பெயர் “Business @ the Speed of Thought”. டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பம் சார்ந்து வியாபாரத்தில் என்ன மாற்றங்கள் எல்லாம் ஏற்படக்கூடும் என இந்தப்புத்தக்கத்தில் பில் கேட்ஸ் எழுதியிருந்தார். சுமார் 20 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 15 முக்கியமான விஷயங்கள், தற்போது டெக் உலகத்தில் நடைமுறையில் இருக்கின்றன. அவை என்னவென்று பார்ப்போமா!
15. ஆன்லைன் மூலம் வேலை :
கேட்ஸ் சொன்னது : வேலை தேடுவோர் அவர்களின் விருப்பம், தேவைகள் மற்றும் சிறப்புத்தகுதிகள் பற்றி ஆன்லைனில் குறிப்பிட்டு, அதற்கேற்ற வேலை வாய்ப்பைத் தேடிக்கண்டறியும் வாய்ப்பிருக்கிறது.
நிஜத்தில் நடந்தது : நெளக்ரி, மான்ஸ்டர், லிங்கெட்இன் போன்ற ஆன்லைன் தளங்களில் தங்களின் தேவைக்கேற்ப ஃபில்டர் செய்து, வேலைவாய்ப்பைக் கண்டறியும் நிலை தற்போது சாத்தியமாகியிருக்கிறது.
14. சோஷியல் மீடியா :
கேட்ஸ் சொன்னது : உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே தனிப்பட்ட செய்திகளை அனுப்பிக்கொள்ளவும், சாட் செய்துகொள்ளவும், ஒரு நிகழ்வுக்காகத் திட்டமிடவும் எதிர்காலத்தில் முடியும்.
நிஜத்தில் நடந்தது : ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் இவை அத்தனையும் சாத்தியமாகியிருக்கின்றன.
13. தானியங்கி விளம்பரச் சலுகைகள் :
கேட்ஸ் சொன்னது : ஒரு பயணத்துக்காக டிக்கெட் புக் செய்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதை அறிந்துகொண்டு, அதற்கேற்ப, பயணம் செல்லும் இடத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் விலை குறைவான பொருள்களைப்பற்றிய விளம்பரங்களை மென்பொருள் காண்பிக்கும்.
நிஜத்தில் நடந்தது : பயனாளரின் இடம் மற்றும் விருப்பத்தை அறிந்துகொண்டு, கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கில் அதற்கேற்ப விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன. உதாரணமாக, திருவல்லிக்கேணியில் இருக்கும் ஒரு நபர் ‘ஹோட்டல்’ எனத்தேடினால், அவரின் இடத்தை அறிந்துகொண்டு திருவல்லிக்கேணி பகுதியைச்சுற்றியுள்ள ஹோட்டல்களையும், அவற்றில் கிடைக்கும் பொருள்களின் விலைப்பட்டியலையும், கூகுள் தனது ரிசல்ட்டில் காண்பிக்கும்.
12. ஸ்மார்ட் விளம்பரங்கள் :
கேட்ஸ் சொன்னது : அனைவரும் பயன்படுத்தும் டிவைஸ்களானது ஸ்மார்ட்டாக விளம்பரம் செய்யும் தன்மையைக் கொண்டிருக்கும். அவை உங்களது வாங்கும் பழக்கத்தை அறிந்துகொண்டு, அதற்கேற்ற விளம்பரங்களை டிஸ்ப்ளே செய்யும்.
நிஜத்தில் நடந்தது : மொபைல், கணினி… இவ்வளவு ஏன்… மொபைலில் டைப் செய்யும் கீபோர்டு உள்ளிட்ட பல இடங்களில் விளம்பரங்கள் வரத்தொடங்கிவிட்டன. பிரவுசர் வழியாக ஃபிளிப்கார்ட் தளத்தில் ஒரு பொருளைத் தேடினால், அதை அறிந்துகொண்டு, ஃபேஸ்புக்கில் பயனாளர்களுக்கு அப்பொருள் குறித்த விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன.
11. லைவ் ஸ்போர்ட்ஸ் மற்றும் விவாதத் தளங்கள் :
கேட்ஸ் சொன்னது : விளையாட்டுப் போட்டிகளை டிவியில் பார்க்கும்போதே, லைவ்வாக அதைப்பற்றி விவாதிக்கவும், எந்த அணி வெற்றிபெறும் என வாக்களிக்கும் வகையிலும் எதிர்காலத்தில் சில சேவைகள் உருவாகும்.
நிஜத்தில் நடந்தது : சமீபத்தில் நடந்துமுடிந்த ஐ.பி.எல் தொடரின்போது, அனைத்துப் போட்டிகளும் ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பப்பட்டன. அப்போது ஒவ்வொரு அணியின் வெற்றி வாய்ப்பைப்பற்றியும் ஃபேஸ்புக்கிலேயே லைவ்வாக வாக்கெடுப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.
10. ஆன்லைனிலேயே வீட்டைக் கண்காணிக்கலாம் :
கேட்ஸ் சொன்னது : வீடியோ மூலம் இருந்த இடத்திலிருந்தே உங்கள் வீட்டை கண்காணிக்க முடியும். நீங்கள் இல்லாதபோது யாராவது உங்கள் வீட்டுக்கு வந்து திரும்பியதைக்கூட, வீடியோ பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.
நிஜத்தில் நடந்தது : 2014-ம் ஆண்டு டிராப்கேம் (Dropcam) என்ற ஹோம் சர்வைலன்ஸ் கேமரா தயாரிக்கும் நிறுவனத்தை, 555 மில்லியன் டாலருக்கு கூகுள் வாங்கியது. இந்நிறுவனம் தயாரித்த டோர்பெல் கேமரா இணையத்தில் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் வாசலுக்கு யார் வந்துபோனாலும் வீடியோவில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
9. விருப்பமே முதன்மை :
கேட்ஸ் சொன்னது : இருப்பிடத்தைவிட, விருப்பத்துக்கு ஏற்ற வகையில் ஆன்லைன் தளங்கள் செயல்படும்.
நிஜத்தில் நடந்தது : செய்தித் தளங்கள் மட்டுமில்லாமல், Quora உள்ளிட்ட ஆன்லைன் விவாதத்தளங்களும் விருப்பத்துக்கேற்ற வகையில் தான் தங்களது தளங்களை வடிவமைத்து, செயல்பட்டுவருகின்றன.
8. ஸ்மார்ட்போன் :
கேட்ஸ் சொன்னது : மக்கள் தங்களுடன் சின்ன டிவைஸ்களை சுமந்து செல்வார்கள். இவை மூலம் செய்திகள், புக் செய்த டிக்கெட் விவரங்கள், வர்த்தகச்சந்தை நிலவரங்கள் போன்ற விவரங்களை அறிந்துகொள்வார்கள். எந்தச்செயலையும் எங்கிருந்தும் செய்துமுடிக்க இந்த டிவைஸ்கள் உதவும்.
நிஜத்தில் நடந்தது : இணையத்தின் உதவியுடன் கையடக்க ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மூலம் மேலே சொன்ன செயல்கள் அனைத்தையும் செய்யக்கூடிய அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
7. ஆன்லைன் விவாதங்கள் :
கேட்ஸ் சொன்னது : உள்ளூர் அரசியல், பாதுகாப்பு போன்ற தங்களைப் பாதிக்கும் அத்தனை விஷயங்கள் குறித்தும், மக்கள் இணையத்தில் விவாதிப்பார்கள்.
நிஜத்தில் நடந்தது : ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில், மக்களிடையே நடந்த விவாதங்களால் தான், வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் தொடங்கி… மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு வரை அத்தனை விஷயங்களுக்கும் அடிப்படையாக இருந்தன.
6. தொலைக்காட்சியில் இணையதள விவரங்கள் :
கேட்ஸ் சொன்னது : தொலைக்காட்சி ஒளிபரப்பின்போது நீங்கள் பார்க்கும் பொருளைப்பற்றிய இணையதளங்களின் முகவரிகளும், கன்டென்ட்களுக்கான லிங்குகளும் ஒளிபரப்பப்படும்.
நிஜத்தில் நடந்தது : தொலைக்காட்சியில் ஏறக்குறைய அனைத்து விளம்பரங்களும், தங்களுடைய இணையதள முகவரி தந்து விசிட் அடிக்கவும், ட்விட்டர் பக்கத்தில் பின் தொடரவும், ஃபேஸ்புக்கில் லைக் இடவும் சொல்கின்றன.
5. விலை ஒப்பீட்டுத் தளங்கள் :
கேட்ஸ் சொன்னது : ஒரு பொருளின் விலையை ஒப்பிடும் சேவைகள் எதிர்காலத்தில் மேம்பட்டிருக்கும். இதனால், பல்வேறு இணையதளங்களிலும் விற்கப்படும் விலையைத் தெரிந்துகொள்ளவும், விலை மலிவான பொருளை சிரமமின்றித் தேர்ந்தெடுக்கவும் அப்போது வசதி ஏற்பட்டிருக்கும்.
நிஜத்தில் நடந்தது : கூகுள், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் குறிப்பிட்ட மொபைல் போன் மாடலைத் தேடினாலே, அதன் பல்வேறு விலை மற்றும் விற்பனையாளர் குறித்த விவரங்கள் கொட்டிவிடுகின்றன.
4. பிஸினஸ் கம்யூனிட்டி சாப்ட்வேர் :
கேட்ஸ் சொன்னது : நிறுவனங்கள் சில வேலைகளை மட்டும் இணையத்தின் வழியாக அவுட்சோர்ஸ் செய்வார்கள். ஒரு வேலையை அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனமும், அதைப்பெறும் நிறுவனமும் நேரடியாக சந்திக்கக்கூட தேவையிருக்காது.
நிஜத்தில் நடந்தது : இந்தியாவில் இந்த சேவை இன்னும் அதிக அளவில் பிரபலம் ஆகவில்லை என்றாலும்கூட, மேலை நாடுகளில் சில தளங்களில் ஆன்லைன் மூலமாகவே வேலைகளை அவுட்சோர்ஸ் செய்கிறார்கள்.
3. புராஜெக்ட் மேனேஜ்மென்ட் சாப்ட்வேர் :
கேட்ஸ் சொன்னது : புராஜெக்ட் மேனேஜர்கள் தங்களது புதிய புராஜெக்ட் பற்றி ஆன்லைனிலேயே டீமுக்கு விளக்குவார்கள். யார் எந்த வேலையை, எப்போதுக்குள் முடிக்கவேண்டும் போன்ற விவரங்களை இந்த சாப்ட்வேர் மூலமே திட்டமிட முடியும்.
நிஜத்தில் நடந்தது : பல கார்ப்பரேட் நிறுவனங்களில் புராஜ்கெட் மேனேஜ்மென்ட் சாப்ட்வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அசானா (Asana) போன்ற ஆன்லைன் தளங்களும் இதுபோன்ற செயல்களைச் செய்கின்றன.
2. பர்சனல் அசிஸ்டன்ட்ஸ் மற்றும் பொருள்களின் இணையம் :
கேட்ஸ் சொன்னது : இணையம் சார்ந்து செயல்படும் தனிப்பட்ட அசிஸ்டன்ட்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். அவை உங்கள் டிவைஸ்களை இணையத்தில் கனெக்ட் செய்து, தகவல்களைத் தானாகவே sync செய்யும். இமெயில் அல்லது நோடிஃபிகேஷன்களை உங்களுக்காக டிவைஸே செக் செய்து, உங்களுக்குத் தேவையான தகவலைத்தரும். கடைக்குச் செல்லும்போது என்ன ரெசிப்பி செய்ய விருப்பம் எனச்சொன்னால் போதும். உங்கள் பர்சனல் அசிஸ்டன்ட் தேவையான பொருள்களைத் தானாகவே பட்டியலிடும்.
நிஜத்தில் நடந்தது : ஆப்பிள் சிரி, கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் நெள’, அமேசான் நிறுவனத்தின் எக்கோ போன்ற வாய்ஸ் அசிஸ்டன்ட்ஸ் இந்த வேலையைச் செய்யத்தொடங்கிவிட்டன.
1. இணையவழி பரிவர்த்தனைகள் :
கேட்ஸ் சொன்னது : எதிர்காலத்தில் பில்களுக்குப் பணம் செலுத்த, வர்த்தகத்தைக் கவனித்துக்கொள்ள, மருத்துவர்களுடன் ஆலோசிக்க என அத்தனை விஷயங்களையும் இணையத்தின் வழியாக மக்கள் செய்வார்கள்.
நிஜத்தில் நடந்தது : ஒரேயொரு நாள் இணையம் தடைபட்டாலும், மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் பாதிக்கப்படும். அந்த அளவுக்கு இணையத்தின் மூலமாகப் பல்வேறு பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன.
தொழில்நுட்ப உலகம் சார்ந்து பில் கேட்ஸ் அன்று சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நிஜமாகியிருக்கின்றன. ஒருவேளை அவர் இலுமினாட்டியா இருப்பாரோ பாஸ்!