நாங்கள் 2 கோடி லஞ்சம் பெற்றோம் என்பதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரங்களுடன் நிரூபிக்க இயலுமா? இதனை நான் ஒரு பகிரங்க சவாலாக முன்வைக்கிறேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சவால் விடுத்துள்ளார்.
நேற்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு கையை தூக்குவதற்காக தன்னை தவிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவருடைய அந்த குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக அவர் கூறும் பொய். சிவசக்தி ஆனந்தனுடைய குற்றச்சாட்டில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 2 கோடி லஞ்சம் பெற்றார்கள் என கூறியுள்ளார்.
நான் ஒரு பகிரங்க சவாலை முன்வைக்கிறேன். சிவஞானம் சிறீதரன் 2 கோடி ரூபாய் அரசாங்கத்திடம் லஞ்சம் பெற்றார். என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க இயலுமா?
சிவசக்தி ஆனந்தன் கூறுவதைப் போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2கோடி ரூபாய் லஞ்சம் பெற்று தங்கள் தனிப்பட்ட வங்கி கணக்கில் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சட்டை பைகளில் வைத்திருக்கிறார்கள். என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க இயலுமா? இதனை நான் பகிரங்க சவாலாக முன்வைக்கிறேன்.
முடிந்தால் சிவசக்தி ஆனந்தனுக்கு நெஞ்சில் துணிச்சல் இருந்தால் இந்த சவாலை பகிரங்கமாக தோற்கடித்து காட்டவேண்டும். நான் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி ஊடாகவே நாடாளுமன்ற அரசியலுக்குள் வந்தாக கூறுகிறார்.
2009ம் ஆண்டு நான் தமிழரசு கட்சியில் அங்கத்துவம் பெற்றிருக்கிறேன். 2010ம் அண்டு தேர்தலில் போட்டியிடுகிறேன். இவ்வாறிருக்க நான் எப்படி ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியில் போட்டியிட முடியும்?
2010ம் ஆண்டு ஈ.பி. ஆர்.எல்.எவ் கட்சிக்கு 2 நாடாளுமன்ற வேட்பாளர் ஆசனங்கள் கொடுக்கப்பட்டது. அந்த 2 ஆசனங்களில் ஒன்று சுரேஸ் பிறேமச்சந்திரன் எடுத்துக் கொண்டார். மற்றய ஆசனம் ஐங்கரநேசன் எடுத்துக் கொண்டார். மூன்றாவதாக எனக்கு ஆசனம் கொடுக்கப்பட்டது எப்படி?
இதனையும் சிவசக்தி ஆனந்தன் ஆதாரங்களுடன் நிரூபித்து காட்டட்டும் பார்க்கலாம். மேலும் நாங்கள் சில நல்லெண்ண சமிக்ஞைகளை எதிர்பார்த்தே வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கினோம். இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்திலும் நல்லெண்ண சமிக்ஞைகளை எதிர்பார்த்து வரவு செலவு திட்டத்தை ஆதரித்தோம்.
இவ்வாறு நாங்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னர் எங்களிடம் இருந்த தனிப்பட்ட உணர்வுகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு கட்சிக்காகவும், மக்களுக்காகவுமே வரவு செலவு திட்டத்தை ஆதரித்தோம்.
ஆனால் அதற்கு லஞ்சம் வாங்கினார்கள் என அப்பட்டமான பொய்யை கூறும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உண்மைகளை ஆதாரங்களுடன் பேச தவறியிருக்கிறார்.
இதன் உண்மை வெளிப்படும்போது அதன் விளைவை அவர் தாங்கி கொள்வாரா என்பது மிகப்பெரிய கேள்வி. மேலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தமிழ் மக்களின் மீது நேசம் கொண்டவர்கள் அல்ல. அவர்களுடைய கடந்தகாலம் அதற்கு சிறந்த சாட்சியாக உள்ளது.
தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ஜெயத்தின் தந்தையை கொலை செய்து மலக்குழியில் போட்டது? புலிகளின் மூத்த போராளி அமுதனின் தங்கையை நிர்வாணமாக்கி முதுகில் புலி என எழுதி முகாம்களுக்கு அலையவிட்டது யார்? முத்த போராளி போர்க்கண்ணனின் பெற்றோரை பிச்சை எடுக்க வைத்தது யார்? இந்த கேள்விகளுக்கான பதில் மக்களுக்கு தெரியும். மக்கள் அதனை மறந்தவர்கள் அல்ல.
இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். சிவசக்தி ஆனந்தன் பீரிஸ் உடன் இணைந்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவை நாடி நீதியை பெறலாம் என்றார்.