கடந்த 10 வருட காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை 10 டிரில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும், அதில் அரச சொத்துக்களாக ஒரு டிரில்லியன் ரூபாவையே காட்ட முடியுமாக இருக்கின்றது என தெரியவந்திருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி,
“அபிவிருத்தி, அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், அரச சொத்துக்கள் அல்லது மக்கள் நலன் பேணலுக்காக எஞ்சிய 09 டிரில்லியன் ரூபாவை செலவு செய்தமைக்காக எவ்வித ஆவணமும் நிதி அமைச்சிடம் இல்லை.
அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருமானத்தை இல்லாமல் செய்து கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன் போது விளக்கினார்.
கடந்த 50, 60 வருட காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு நேரடியாகக் கிடைக்கப்பெற்ற வருமானங்கள் அரசாங்கத்தினதும் அமைச்சரவையினதும் எவ்வித அனுமதியுமின்றி கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அரசாங்கத்துடன் தொடர்புபட்டிருந்த மற்றும் தொடர்புபட்டிருக்கும் சிலரின் வியாபாரத்திற்கு நன்மை அளிக்கும் வகையில் மிகவும் சூட்சுமமான முறையில் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீள் ஏற்றுமதி மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் அரசியல் அதிகாரத் தரப்புடன் உள்ள தொடர்பு காரணமாக இடம்பெறும் அநீதிகள் தொடர்பிலும் தமக்கு தெரிய வந்துள்ளது.
இந்த நிலைமைக்கு மத்தியில் நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டுவருவது சவாலானது என்ற போதும் தன்னால் முடிந்த அனைத்தையும் இதற்காக மேற்கொள்ளவுள்ளேன.
இந்த ஊழல் மோசடிகளை நாட்டுக்கு வெளிப்படுத்தும்போது அவற்றை மறைப்பதற்காக மேல்தட்டு கூட்டணிகள் உருவாகின்றது.
இவற்றுக்கு மாற்றீடாக நாட்டை நேசிக்கும் கூட்டணிகள் ஒன்று சேர்ந்து நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் உத்தியோகபூர்வமற்ற முறையில் தூய்மையான கூட்டணி உருவாக வேண்டும்.
இந்த ஊழல் மோசடிக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களை பலவீனப்படுத்த இடமளிக்காது அவர்களைப் பலப்படுத்தி நாட்டுக்காக தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவது ஊடக நிறுவனங்களின் பொறுப்பாகும்.
மத்திய வங்கி பிணைமுறை விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கேற்ப சட்ட நடவடிக்கைகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதன் போது ஏற்படும் மோசமான நிலைமையைத் தவிர்ப்பதற்கு அனைத்து அர்ப்பணிப்பையும் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊழல் மோசடிகள் குறித்து ஜனாதிபதி அண்மைய நாட்களாக கடுமையான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், ஜனாதிபதியின் இன்றைய அறிவிப்பால் கொழும்பு அரசியல் இறுக்கமடைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.