பாடசாலை சாரதி வினோதனின் லீலைகள்!! கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை!

இந்தியாவின் தமிழநாட்டின் கடலூரில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வேன் டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளது, பெற்றோரை நிம்மதி பெருமூச்சு அடையவைத்துள்ளது.

கடலூர் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரைச் சந்தித்த ஒரு பெற்றோர் புகார் மனு ஒன்றைக் கொடுத்து, “எப்படியாவது இந்தக் கொடூரனை பிடிங்க சார்” என்று கண்கலங்கி தழுதழுத்தனர்.

அந்த மனுவில் இருந்தது என்ன? “அவன் கடலூர் தனியார் கல்லூரி ஒன்றின் வேன் ஓட்டுநர். தினமும் மாணவிகளைப் பொறுப்பாக அழைத்துப்போய் அழைத்துவந்து விடுவான். அதற்கு மாத வாடகையும் கொடுத்துவிடுவோம். தினமும் வேனில் செல்லும்போது மாணவிகளிடம் பழகி அதை படிப்படியாகத் தவறான நோக்கத்துக்குப் பயன்படுத்தி வந்துள்ளான். இது அப்போது எங்களுக்குத் தெரியவில்லை.

ஏற்கெனவே கல்லூரியில் படித்த ஓர் இஸ்லாமிய பெண்ணை ஆசைக்காட்டி காதலிக்கிறேன் என்று சொல்லி அழைத்துபோய் பாலியல் வல்லுறவு செய்துள்ளான். அதனால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டாள். அதன்பிறகு ஒரு மாணவியைக் காதலித்து ஏமாற்றி சென்னைக்கு அழைத்து சென்று குடிவைத்துள்ளான்.

எங்கள் வீட்டில் தங்கிப்படித்து வந்த உறவினர் வீட்டு பெண்ணையும் ஏமாற்றி இழுத்துச் சென்றதுடன், வீட்டிலிருந்த ஏராளமான நகைகள் பணம், கார் வரை எடுத்துக்கொண்டு போய்விட்டான்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த கடலூர் எஸ்.பி முதுநகர் காவல் நிலைய ஆய்வாளரான ஆண்டவரை அழைத்து, “இந்தப் புகாரை ரகசியமாக விசாரியுங்கள். பல பெண்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்பதால் அவன் எங்கிருந்தாலும் பிடித்து வாருங்கள். சைபர் க்ரைம் உதவி வேண்டும் என்றாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கிரீன் சிக்னல் கொடுத்தார்.

காணாமல்போன மாணவிகளின் போட்டோ, மொபைல் எண் ஆகியவற்றை வைத்துக்கொண்டு எஸ்.ஐ பழனிவேல் தலைமையிலான தனிப்படையினர் சென்னைக்கு விரைந்தனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவியும் வேன் ஓட்டுநர் வினோத்தும் கடலூரில் நடத்திய வாகன சோதனையின்போது சிக்கிக்கொண்டார்கள்.

மாணவியை நீதிமன்றம் மூலமாக பெற்றோர்களிடம் ஒப்படைத்த போலீஸார் வினோத்தைச் சிறையில் அடைத்தனர். இதற்கு எதிராக தொடரப்பட்ட ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுகுறித்து காவல் துறையினர், “பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ரமேஷ், கல்லூரி வேன் ஓட்டுநரான வினோத் கல்லூரிக்கு வேனில் போகும் மாணவிகளிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி நல்லவனாக நடித்து அக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியைக் கடத்தி போய் திருமணம் செய்துகொண்டு சென்னையில் விட்டுவிட்டான். அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதுபோன்று பல பெண்களை ஏமாற்றியுள்ளான்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் வீட்டு பெண் சுஷ்மா காணவில்லை என்று 17ஆம் தேதி புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வினோத்தின் செல்போன் டவர் சிக்னலை ஆய்வு செய்தபோது, புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதியில் இருப்பதாகக் காட்டியது.

அடுத்தநாள் சென்னை ராயபுரம் பகுதியைக் காட்டியது. முதலில் ஒரு வீட்டுக்குச் சென்றோம், அங்கிருந்த பெண் ஒருவர் அப்படி யாரும் இங்கில்லை என்று கூறிவிட்டார். ஆனால், அதே பகுதியில்தான் செல்போன் சிக்னல் காட்டியது. மீண்டும் அந்த பெண்ணிடம் கண்டிப்புடன் விசாரித்தபோது, அவர் அழுதுகொண்டு மூன்றாவது மாடிக்கு அழைத்துபோய் வினோத், சுஷ்மா என்ற மாணவியுடன் இருப்பதைக் காட்டினார். போலீஸைக் கண்டதும் வினோத் தப்பித்துவிட்டான். இரவுநேரம் என்பதால் விரட்டிப் பிடிக்க முடியாமல், தங்க இடம்கொடுத்த அந்த பெண்ணையும் அவரது மகனையும் அழைத்துவந்து விசாரித்தோம்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தனக்கும் வழக்கறிஞர் ஒருவருக்கும் தொடர்புள்ளதாகத் தெரிவித்தார். அவரும் திருமணமானவர் என்பதால் எங்கள் வாழ்க்கை ரகசியமாக இருந்து வந்தது. நாங்கள் தனிமையில் இருப்பதை ஒரு நாள் வீடியோ எடுத்துவிட்டு என்னை மிரட்டத் தொடங்கினான் வினோத். இதனால் வினோத் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வேறு வழியின்றி இருவரையும் என் வீட்டு மூன்றாவது மாடியில் தங்க வைத்தேன் என்று உண்மையை ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து வினோத், சுஷ்மாவுடன் காரில் சிதம்பரம் செல்லும் வழியில் வாகன பரிசோதனையில் பிடிபட்டான்” என்றார். மாணவிகளுடன் பழகும்போது வீடியோ வைத்துக்கொண்டு வினோத் மிரட்டுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்கள், ஆண் நண்பர்களிடம் கவனமாகப் பழக வேண்டும் என்றும், செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஆண்கள் தொந்தரவு கொடுக்கும் நிலையில் அதை பற்றி பெற்றோரிடமோ காவல் துறையிடமோ புகார் அளிக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.