`ஈவிரக்கம் இருக்கிறதா முதலமைச்சருக்கு?’ – ஸ்டாலின்

முதலமைச்சரின் இதயத்தில் ஈவிரக்கம் இருந்தால் ஏழை எளிய, நடுத்த மக்களை பாதிக்கும் பேருந்துக்கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பேருந்துக்கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் இன்று (27.1.2018) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், “ஆகஸ்ட் 15 என்று சொன்னால், சுதந்திர தினத்தைக் குறிக்கும் தினமாக அமைந்திருக்கிறது. ஜனவரி 26 இந்த நாட்டின் குடியரசு தினத்தை குறிப்பதாக அமைந்திருக்கிறது. அதேபோல, ஜனவரி 19 என்று சொன்னால் இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு மிகப்பெரிய இடியைச் சுமத்திய நாளாக இருக்கிறது என்பதை எண்ணி, அந்த வேதனையை வெளிப்படுத்த இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம். 100 ரூபாய் கூலி பெற்று தங்களுடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்கள், அதில் 50 சதவிகிதத்தை, 50 ரூபாயைப் பேருந்துக் கட்டணமாகச் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். பூ விற்பனை செய்து வாழ்க்கை நடத்தும் ஏழை, எளிய தாய்மார்கள், பேருந்துக் கட்டணமாக 50 முதல் 100 ரூபாய் வரை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் என அனைவரும் பேருந்துக் கட்டண உயர்வால் பல கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

பேருந்துப் பயணக் கட்டணம் ஏறக்குறைய 66 சதவிகிதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றி சிந்திக்காமல், யாரிடத்திலும் ஆலோசனை பெறாமல், முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் இரவோடு இரவாகத் திடீரென ஒரே நாளில் 3,600 கோடி ரூபாய் அளவுக்கு பேருந்துப் பயணக் கட்டணத்தை உயர்த்தி, மக்கள் மீது மிகப்பெரிய சுமையை ஏற்றியுள்ளார்களே என்பதை நாம் வேதனையோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கனத்த இதயத்தோடு நாங்கள் இதை அறிவிக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார். உங்களுக்கு இதயம் ஒன்று இருக்கிறதா. இதயம் என ஒன்று இருந்தால்தானே கனத்த இதயத்தோடு அறிவிக்க முடியும். இதயம் என்பதுதான் உங்களுக்கு இல்லையே. அதனால்தான், ஈவு இரக்கமில்லாமல் ரூ.3,600 கோடியளவுக்கு பஸ் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறீர்கள்.

எனவே, இந்தப் போராட்டம் இன்றோடு முடியப்போவதில்லை. இன்று மாலை வரை காத்திருப்போம், நாளை வரையிலும் பொறுத்திருப்போம், கனத்த இதயத்தோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணக் கட்டண உயர்வை அறிவித்தாரே, உண்மையிலேயே உங்கள் இதயத்தில் ஈரம், இரக்கம் என்று ஏதாவது ஒன்று இருக்குமென்றால், உடனடியாகப் பஸ் கட்டண உயர்வை நீங்கள் திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால், நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அதையும் செய்வதற்கு உங்களுக்கு மனம் வரவில்லை என்றால், இன்று அனுமதி பெற்று, காவல்துறை அனுமதி அளித்துள்ள இடங்களில் முறையாக இந்தப் போராட்டங்களை நாங்கள் நடத்துகிறோம், பேருந்துப் பயணக் கட்டணத்தைத் திரும்பப்பெற நீங்கள் தயாராக இல்லை என்று நீங்கள் சொல்வீர்களானால், நாளை மறுநாள் முதல் தி.மு.க சார்பில் நாடு முழுவதும் அனுமதி இல்லாத போராட்டம் நடைபெறும்.

ஜல்லிக்கட்டுக்காக மெரினா புரட்சி நடைபெற்றதே, உங்களால் அடக்க முடிந்ததா. 1965-ல் மொழிப் போராட்டம் நடந்ததே, அதை யாராலும் தடுக்க முடிந்ததா. எனவே, மொழிப் போராட்டத்தைப்போல, மெரினா புரட்சிபோல, பேருந்துப் பயணக் கட்டணத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு மிகப்பெரிய போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெறப்போகிறது. அதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும், தயாராக இருங்கள்’’ என்றார்.