வள்ளிமலையை வெறுமனே ஒரு மலை என்ற அளவில் மட்டுமே நம்மால் கடந்து சென்றுவிட முடியாது. யுகாந்தரங்களுக்கு முன்பாக, அழகன் முருகனைக் கரம் பற்றுவதற்காக வள்ளிக் குறமகள் தோன்றி விளையாடிய மலை. புராதனச் சிறப்புகள் கொண்ட வள்ளிமலை, தமிழர்களுக்கான ஆன்மிக பொக்கிஷம் என்றே சொல்லலாம். அடர்த்தியான வனம், அரியவகை மூலிகைகள், நீர் வற்றாத சுனைகள், அழகிய சிற்பங்கள் என எங்கு நோக்கினாலும் அழகும் அதன் பின்னே ஒரு வரலாற்றுச் சம்பவமும் பின்னிப்பிணைந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
மலையடிவாரத்தில் இருக்கும் வள்ளிக்கோயிலை அடைந்தோம். ஒரு சுற்று மட்டுமே கொண்ட சிறிய சந்நிதி என்றாலும், அழகுடன் காட்சி அளிக்கிறது ஆலயம். திருமாலின் இரு புதல்விகளான அமுதவல்லியும், சுந்தரவல்லியும் முருகப்பெருமானை மணமுடிக்கத் தவமிருந்தனர். அமுதவல்லியின் கடுமையான தவத்தின் பயனாக அவள் இந்திரனின் மகளாக அவதரித்தார். சுந்தரவள்ளியோ பூவுலகில் வள்ளிக்கிழங்குத் தோட்டத்தில் அவதரித்தார்.
குழந்தையைக் கண்டெடுத்த இந்தப் பகுதியின் வனராஜன் நம்பிராஜன், வள்ளிக்கிழங்குத் தோட்டத்தில் கண்டெடுத்ததால், வள்ளி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்த மலைப்பகுதியில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அழகுப் பெண்ணாக, சுதந்திரமான வன அரசியாக வாழ்ந்து வந்த வள்ளிக்குறமகள், தினைப்புனம் காத்து வேடுவ மக்களுக்கு மட்டுமின்றி, வனவிலங்களுக்கும் தோழியாகத் திகழ்ந்தார். தற்போது சரவணப்பொய்கை எதிரே இருக்கும் வள்ளி சந்நிதி இருக்கும் இடத்தில்தான் முன்னர், வள்ளிப்பிராட்டி திருமாலை வணங்கி வழிபாட்டு வந்தார் எனப்படுகிறது. அதனால்தான் இந்தச் சந்நிதியில் வைணவ சம்பிரதாயப்படி பெருமாள் பாதம் பதித்த சடாரி பக்தர்களின் தலைகளில் வைக்கப்படுகிறது. நின்ற கோலத்தில் வலக் கரம் அபயம் காட்ட, இடக் கரத்தை பறவைகளை விரட்டப் பயன்படும் கவணை ஏந்தியும் காட்சி தருகிறார்.
வண்ணத்தமிழ் கொஞ்சும் எங்கள் வடிவேல் முருகனுக்கு வானகம் வழங்கிய தந்த கொடை தெய்வானை என்றால், கானகம் தந்த பரிசு வள்ளிப்பிராட்டி அல்லவா? வணங்கும் எல்லோருக்கும் வளமான வாழ்வருளும் தமிழ்க்குறமகளுக்கு தலைதாழ்ந்து வணக்கம் செலுத்தினோம். நல்லோர் உறவும், நலம் கொண்ட வாழ்வும் அருள மனமாரத் துதித்தோம்.
‘வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி
மலை காத்த நல்ல மணவாளா, முத்துக்குமரா’
என்று வணங்கி சந்நிதியை விட்டு வெளியே வந்தோம். மலைமீது ஏறும் படிக்கட்டுப்பாதை தொடங்குவதற்கு முன்னரே இடப் புறமாக அருணகிரிநாதர் திருமடம் காணப்படுகிறது. இங்கு 300 சாதுக்கள் தங்கி இருந்து வருகின்றனராம்.நாம் சென்ற அன்று காலையில் அவர்களுக்கு கம்பங்கூழ் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியபடி பசியாறும் காட்சியைக் கண்டோம்.
அங்கிருந்த அருணகிரிநாதரின் திருவுருவச் சிலையினை தரிசித்து வெளியே வந்து மலைமீது செல்லும் படிகளில் ஏறினோம். மலையைச் சுற்றிலும் பல இடங்களில் பனை மரங்கள் வளர்ந்து காணப்பட்டன. இவையெல்லாம் மண்வெட்டிச் சித்தர் என்ற ஒரு சித்தபுருஷரால் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டவை என்று நம்முடன் கூட வந்த, ‘அகத்தியர் பசுமைக்குடில்’ அமைப்பைச் சேர்ந்த சரவணன் கூறினார். அவரே மலை முழுக்க இருந்த பல அபூர்வ மரங்களையும், மூலிகைகளையும் இனம் கண்டு நமக்கு தெரிவித்தவாறு வந்தார்.
மலைப்படிகள் ஏற, ஏற மூச்சு இரைத்தது, காலும், இடுப்பும் சோர்ந்து வலியும் கூட, வலியைப் போக்கும் விதமாக மனமும், உதடும் ‘முருகா, முருகா’ என்று தன்னிச்சையாகவே ஜபிக்கத் தொடங்கியது. நெட்டுக்குத்தாக ஓங்கி உயர்ந்து காணப்பட்ட அந்த மலை, நமக்கு மலைப்பையும் வியப்பையும் தர, தொடர்ந்து நடந்தோம். ஆலயங்கள் எல்லாம் எளிதாக அமைந்து இருந்தால் இறைவன் பற்றிய சிந்தனையே வராது போகும் என்பதால்தான், இப்படிப்பட்ட மலைப் பகுதிகளில் கோயில்களை அமைத்துச் சென்றனர் நம் முன்னோர்கள். சிரமம் தெரியாதிருக்க நம் மனம் இறைவனை தியானிக்க, மலை ஏறத் தொடங்கினோம். ஒவ்வொரு அடியும் ஒவ்வொன்றாக நம் கர்மவினைகளை தொலைப்பது போல் நம்மால் உணர முடிந்தது.
மலையேறும் வழியெங்கும் அற்புதமான மரங்களும், சுனைகளும் அமைந்துள்ளன. சில்லென்ற காற்று வீசிக்கொண்டே இருக்க களைப்பையும் மறந்து இயற்கையை அதன் ஒப்பற்ற அழகை தரிசித்தோம். அழகு முருகன் கோயில் கொண்டிருப்பதால்தான் மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி நிலம் என்று அழைக்கப்படுகிறது போலும்! குறிஞ்சி நிலத்தின் உயிர்த்துடிப்புள்ள பிரதேசமாக வள்ளிமலை இன்றும் அற்புத எழிலுடன் காட்சி தருகிறது. வள்ளிமலை ஒழுங்கற்ற அமைப்பைக் கொண்டது என்பதால், படிக்கட்டுகளில் மட்டும்தான் ஏறிச் செல்ல முடியுமே தவிர, வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் பாதை அமைக்க முடியவில்லை.
வள்ளிமலை மீது ஏறும் படிக்கட்டுப் பாதையில் அமைந்திருக்கும் எட்டுக் கால் மண்டபம் இன்னும் பழைமை மாறாமல் காட்சி தருகிறது. ‘படிக்கட்டுகளும், சுற்றியுள்ள சந்நிதிகளும் புனரமைப்பு செய்யப்பட்டு அழகாகக் காட்சி தரும்போது, இந்த மண்டபம் மட்டும் பழைமை மாறாமல் காட்சி தருவது ஏனோ?” என்ற கேள்வி எழுப்பிய சிந்தனையுடன் அந்த மண்டபத்தின் திண்ணையில் உட்காரச் சென்றோம். அங்கிருந்த சாது ஒருவர், எங்களைத் தடுத்து நிறுத்தி ‘இது ஒரு மகான் நித்திரை செய்யும் இடம், இங்கே அமர வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். ஆம், இந்த மலைப்பாதையில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றபோது, இந்த மண்டபத்தையும் புனரமைப்பு செய்வதற்காக ஒரு பாறையை அகற்றும்போது, உள்ளிருந்து நறுமண வாசனை சூழ்ந்ததாகவும், அதனுள்ளே பார்க்கையில் அமர்ந்த நிலையில் ஒரு சித்தர் தியான நிலையில் இருந்ததாகவும், அதனால் அந்தப் பாறையை அப்படியே மூடிவிட்டனர் என்றும் கூறினார். அதனாலேயே இந்த மண்டபத்தை மட்டும் புனரமைப்பு செய்யாமல் விட்டுவிட்டார்கள் என்று கூறினார். நாம் அந்த இடத்தைத் தொட்டு வணங்கி விட்டு கிளம்பினோம்.
மலைப்பாதையில் இன்னும் சற்று தொலைவு சென்றதும் நமக்கு இடப் புறமாக, ‘குகை சித்தர் சமாதி’ என்று ஒரு சந்நிதி ஒன்று தென்பட்டது. அங்கு குனிந்து குகையினுள் உற்றுநோக்க எவரோ ஒரு சித்தரின் சமாதி சிவலிங்கத்திருமேனி அமைப்போடு காணப்பட்டது. குகை சித்தரை வழிபட்ட நாம், குகையின் அழகான வடிவமைப்பை எண்ணி வியந்தபடியே மேலே ஏறத் தொடங்கினோம்.
சற்றுத் தொலைவு சென்றதும் எதிர்ப்பட்ட நான்கு கால் மண்டபம், முருகன் கோயில் சமீபத்தில் வந்துவிட்டதை நமக்குத் தெரிவித்தது. வேகமாக அந்த மண்டபத்தை நெருங்கினோம். மண்டபத்தில் இருந்தே, ‘வள்ளிக்குறமகளை மணந்த எங்கள் வடிவேல் முருகனை’ மனதாரத் துதித்து ஆலயத்தினுள்ளே செல்கிறோம். எந்த வித கட்டட வேலையும் இல்லாமல், இயற்கையான சூழலில் சங்கு போன்ற வடிவத்தில் அமைந்திருக்கிறது முருகக் கடவுளின் திருக்கோயில். கோபுரம் மட்டுமே பின்னர் எழுப்பப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
கொடிமரம், பலிபீடம், மயில் வாகனம் கடந்து முருகக் கடவுளின் சந்நிதிக்குள் சென்றோம். சந்நிதி இருள் சூழ்ந்த குகை போல் காட்சி அளித்தது. இருளுக்கு நம் கண்கள் பழக்கப்பட்டு, காட்சிகள் நம் கண்களுக்குத் தெரிந்தபோது நாம் தரிசித்த தெய்வத் திருவடிவங்கள் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தின. ஆம், முதலில் நாம் வள்ளியை தரிசித்தோம். பின்னர் விநாயகப் பெருமானையும் தரிசித்துவிட்டு, முருகப் பெருமானை தரிசிக்கச் சென்றோம். மூவரும் புடைப்புச் சிற்பமாகவே காட்சி தருகின்றனர் என்பது மிகவும் சிறப்பான அம்சம். முருகப் பெருமானின் சந்நிதிக்கு இடப் புறத்தில் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் உள்ளனர்.
நாம் முருகப்பெருமானை தரிசித்து வழிபட்ட நிலையில், உடன் வந்த அன்பர், நம்மிடம் விநாயகப்பெருமானின் திருவடிகளுக்குக் கீழே பார்க்கும்படிக் கூறினார். அங்கே யானைகள் அணிவகுத்துச் செல்வது போன்ற காட்சி செதுக்கப்பட்டிருந்தது. அதற்கான காரணம் தெரியாமல், உடன் வந்த அன்பரிடம் கேட்டோம். அவர் கூறிய விஷயம் விநாயகப் பெருமான் நிகழ்த்திய ஓர் அருளாடலை நமக்குத் தெரிவித்தது.