கரூரில் சாலைமறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!

கரூர் காவல்துறையைக் கண்டித்து, தனது ஆதரவாளர்களோடு சாலைமறியல் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் வரும் 29-ம் தேதி டி.டி.வி.தினகரனை அழைத்து வந்து எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை நடத்த இருக்கிறார் செந்தில்பாலாஜி. ஆனால்,கரூர் நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் அந்தப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டன. இதனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி செந்தில்பாலாஜி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ‘வரும் 27, 28, 29 ஆகிய மூன்று நாள்களுக்குப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை நகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் காவல்துறைக்கு கொடுத்திருக்கிறார் செந்தில்பாலாஜி. இருந்தும், செந்தில்பாலாஜி நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படவே, நகராட்சி கமிஷனர் மற்றும் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு வரும் 31-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

 இதற்கிடையில், கரூர் மாவட்டம் முழுக்க இந்த நிகழ்ச்சி பற்றி சுவர் விளம்பரம் செய்து வருகிறது செந்தில்பாலாஜி தரப்பு. அப்படி வெங்கமேடு ரயில்வே மேம்பாலத்தில் சுவர் விளம்பரம் செய்துகொண்டிருந்த பெயின்டர்களைக் கரூர் நகர டி.எஸ்.பி-யும் கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளரும், ‘நீதிமன்ற அனுமதி இல்லாமல் விளம்பரம் செய்யக் கூடாது’ என்று சொல்லியபடி, பெயின்டர்களை அடித்து வேனில் ஏற்றியதாக, செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதைக் கண்டித்து கரூர் செங்கமேடு பகுதியில் தன் ஆதரவாளர்களோடு செந்தில்பாலாஜி சாலை மறியலில் ஈடுபட்டார். அதோடு, அங்கு வந்த போலீஸாரோடு வாக்குவாதமும் செய்தார். “ஜெயலலிதா பிறந்தநாள் விழாவுக்காக, முதல்வர் தரப்பும் விளம்பரம் பண்ணி இருக்காங்க. அவங்க விளம்பரம் செய்ய அனுமதி வாங்கி இருக்காங்களா. அப்படின்னா, அனுமதியைக் காமிங்க’ என்று கூறி போலீஸாருடன் அவர் வாக்குவாதம் செய்தார்.

அதன் பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “எல்லா ஊர்களிலும் நிகழ்ச்சி நடத்தும் கட்சிகள் சுவர் விளம்பரம் செய்வது வாடிக்கைதான். அதுபோல்தான் நாங்களும் செய்றோம். நீதிமன்றம் அனுமதி அளித்தும், இவர்கள் துரோகி அரசுக்கு பணிந்து பொதுக்கூட்டத்தை நடக்கவிடாமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது. நீதிமன்ற உத்தரவோடு கண்டிப்பாக நிகழ்ச்சியைப் பிரமாண்டமாக நடத்துவோம்” என்றார். அனுமதி இல்லாமல் சாலை மறியல் செய்ததற்காக, செந்தில்பாலாஜி உள்ளிட்ட தினகரன் ஆதரவாளர்கள் 48 பேரை கரூர் காவல்துறையினர் கைது செய்தனர்.