ஒரு அமெரிக்க அதிபரோ அவரது மனைவியோ வெள்ளை மாளிகையின் அறைகளை அலங்கரிக்க அருங்காட்சியகங்களில் ஓவியங்களை கடனாகக் கேட்பது பொதுவான விஷயம்.
ஆனால், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப். அப்படி ஒரு ஓவியத்தைக் கடன் கேட்டபோது நியூயார்க் அருங்காட்சியகம் சொன்ன பதில் திரும்பிப் பார்க்க வைப்பதுடன், அந்த ஓவியத்தை அந்த அருங்காட்சியகம் எவ்வளவு மதிக்கிறது என்பதைக் காட்டியது.
நியூயார்க்கின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் உள்ள ‘வான் கோஹ்’ என்னும் ஓவியரின் ‘பனி படர்ந்த நிலம்’ ஒன்றைக் காட்டும் ஓவியத்தை கடனாக தரும்படி கோரிக்கை விடுத்திருந்தார் டிரம்ப்.
இந்தக் கோரிக்கையை அந்த அருங்காட்சியகம் நிராகரித்துவிட்டதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியில் வான் கோஹ் வரைந்த ‘பனி படர்ந்த நிலம்’ ஓவியத்தை கொண்டு வெள்ளைமாளிகையை அலங்கரிக்க முடியாமல் போனதற்கு அருங்காட்சியகம் மன்னிப்பு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் குகென்ஹெய்ம் அருங்காட்சியகம் வேண்டுமானால் ”இத்தாலிய ஓவியர் மௌரிசியோ கேட்டலன் செய்த 18 கேரட் தங்கத்தாலான கழிவறையை வெள்ளை மாளிகைக்கு தரத் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை இது குறித்து கருத்து தெரிவிக்க வில்லை.