முப்பது வருடகால ஆயுதப் போராட்டம் 2009இல் முடிவுக்கு வந்த பின்னர் எமது இராஜதந்திர போராட்டம் தொடர்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பரந்தனில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் இன்றைய தினம் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தமிழ் மக்கள் இந்த நாட்டில் சம அந்தஸ்த்துடன் வாழ்வதற்கான 30 வருடகால ஆயுதப் போராட்டம் 2009 இல் முடிவுக்கு வந்த பின்னரில் இருந்து எமது இராஜதந்திர போராட்டம் தொடர்கிறது.
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் ,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட வேறு பல அரசியல் தலைவா்களும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றார்கள், நடைப்பெற்ற ஊழல் விவகாரங்களும் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஒற்றையாட்சி தொடருமா அல்லது தமிழீழம் மலருமா என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருகின்றார்.
இந்த தேர்தலில் தான் கணிசமான ஆசனங்களை பெற்றுவிட்டால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய விடயத்தை இல்லாமல் செய்துவிடலாம் என்று மகிந்த நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு பல காரணங்களின் நிமித்தம் இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் பெறுவதாக கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு செய்வதற்கு விருப்பம் இருந்தாலும், மந்தகதியில் செய்து வருகின்றார்கள்.
காரணம் என்னவென்றால் முன்னைய அரசின் ஜனாதிபதி மகிந்த சிங்கள மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு யுத்தவெற்றியை பெற்றுத்தந்த இராணுவ வீரர்களுக்கு இந்த அரசு துரோகம் செய்யபோகின்றார்கள் எனத் தெரிவித்து வருகின்றார்.
இதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாங்கள் எதிர்க் கட்சியில்தான் இருக்கின்றோம், எதிர்க் கட்சியில்தான் இருப்போம், நாங்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு அரசியல் தீர்வு ஏற்படும் வரையில் நாங்கள் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கமாட்டோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.