நல்லாட்சி தேசிய அரசாங்கம் அரசியலில் கடும் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கின்ற நிலையில் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் மேலோங்கியிருக்கிறது.
குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் முறுகல் நிலையானது தொடர்ந்து வலுவடைந்து வருகின்ற நிலையில் தேசிய அரசாங்கத்தின் இருப்பானது சந்தேகத்துக்கிடமாகவே நீடித்து வருகின்றது.
தற்போதைய நிலைமையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள சூழலில் இரண்டு கட்சிகளுக்குமிடையிலான போட்டி கடுமையாக ஆரம்பித்திருக்கிறது.
இரண்டு பிரதான கட்சிகளும் தேர்தல் வாக்குகளை இலக்குவைத்து ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்துக்கொண்டிருக்கின்றன. அதாவது வாக்குகளுக்காக எந்த எல்லை வரைக்கும் செல்லலாம் என்ற எழுதப்படாத அரசியல் நியாயத்தின் அடிப்படையில் இரண்டு கட்சிகளும் தற்போது கடும் விமர்சனங்களுடன் பிரசாரப்பணிகளை முன்னெடுத்துள்ளன.
இம்முறைத் தேர்தலில் மும்முனைக்களப்போட்டி நிலவுவதால் பிரசாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக்கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் பிரதானமாக இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளன.
அந்தவகையிலேயே தேர்தல் மிக தீவிரமாக இம்முறை சூடுபிடித்திருக்கிறது. மூன்று கட்சிகளும் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்தவண்ணம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன.
அதுமட்டுமன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைய சில வாரங்களாக ஆற்றிவருகின்ற உரைகளும் அரசியல் களத்திலும் தேர்தல் களத்தில் கடும் முக்கியத்துவத்தைப் பெற்று வருகின்றன.
அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் பங்கேற்கின்ற அனைத்து பிரசாரக்கூட்டங்களிலும் ஊழலுக்கு எதிராக கடுமையான சொற்பிரயோகங்களை பிரயோகித்து வருகின்றார். குறிப்பாக அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளில் 50 வீதமானோர் ஊழல்வாதிகள் எனவும் மக்களின் பணத்தை திருடுகின்றவர்கள் எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
அதுமட்டுமன்றி ஊழல்வாதிகள் தம்மிடமிருந்து எந்தவகையிலும் தப்பமுடியாது என்றும் ஊழல்வாதிகள் அனைவருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறிவருகின்றார். அந்தவகையில் இவ்வாறான ஜனாதிபதியின் உரைகள் ஐக்கிய தேசியக்கட்சியிடத்தில் விசனங்களை ஏற்படுத்தினாலும் ஜனாதிபதியை விமர்சிக்கவேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்களிடத்தில் தெரிவித்திருக்கின்றார்.
ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த நிலையில் அது கடும் சர்ச்சையை தோற்றுவித்தது.ஜனாதிபதி அமைச்சரவையிலிருந்து வெளிநடப்பு செய்யும் அளவிற்கு நிலைமை மோசமடைந்திருந்தது.
அதன்பின்னரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது கட்சியின் உறுப்பினர்களிடத்தில் எக்காரணம் கொண்டும் ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கியிருந்தார். அந்த ஆலோசனையின் பிரகாரம் தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பி.க்கள் எவரும் ஜனாதிபதியை விமர்சிப்பது இல்லை என்றே தெரிகின்றது.
ஆனால் ஜனாதிபதி ஐக்கிய தேசியக்கட்சியையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றார். எக்காரணம் கொண்டும் ஊழல்வாதிகளை தப்பிவிடமாட்டேன் என்றும் ஜனாதிபதி அடிக்கடி கூறிவருகின்றார். இந்தநிலையில் தேர்தல் சூழலில் இரண்டு கட்சிகளுக்குமிடையில் கடும் முரண்பாடுகள் அதிகரித்துள்ளமை தெளிவாகின்றது.
ஆனால் ஒருசிலர் இது தேர்தல் காலம் என்பதால் இரண்டு தரப்பினரும் வேண்டுமென்றே நடித்துக்கொண்டிருக்கின்றனர் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
எனினும் தேர்தல் காலத்தில் இரண்டு கட்சிகளுக்குமிடையில் இவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அவை இந்தளவுதூரம் செல்லுமா என்பது சிந்திக்கவேண்டிய விடயமாக உள்ளது. காரணம் அந்தளவிற்கு இரண்டு கட்சிகளுக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்து செல்கின்றன.
இங்கு இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையில் அதிகரித்து செல்கின்ற முரண்பாடுகளும் நெருக்கடிகளும் தமிழ் மக்களுக்கான தேசிய பிரச்சினை தீர்வுக்கான சந்தர்ப்பத்தை குறைத்துக்கொண்டு செல்வதாகவே கருதப்படுகின்றது.
பாம்பும் கீரிப்பிள்ளையும் போன்று சண்டைப்பிடித்துக்கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் கடந்த 2015ஆம் ஆண்டு ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியதே தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களுக்கு தீர்வு காண்பதற்காகவாகும்.
அதாவது புரையோடிப்போயிருக்கும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணுதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றி அமைத்தல், புதிய தேர்தல் முறைமையை கொண்டுவருதல் ஆகிய மூன்று முக்கிய விடயங்களுக்காகவே தேசிய அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் அவ்வாறு முக்கிய நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தேசிய அரசாங்கமானது இன்று அந்த நோக்கங்களிலிருந்து விலகி செல்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. அந்த நோக்கங்களிலிருந்து இரண்டு கட்சிகளும் விலகி செல்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுவதற்கு அவர்களுக்கிடையில் அதிகரித்து வருகின்ற நெருக்கடிகளும் முரண்பாடுகளுமே காரணமாக அமைந்திருக்கின்றன.
மிக முக்கியமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடியவாறான தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற சந்தேகம் மீண்டும் மக்கள் மத்தியில் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.
2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் புரையோடிப்போயிருக்கும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் மேலோங்கியது.
ஆரம்பகட்டத்தில் அதற்கான நகர்வுகளும் நம்பிக்கைக்குரிய முறையில் எடுக்கப்பட்டன. ஆனால் காலம் செல்லச்செல்ல நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டுமா என்ற சந்தேகமே ஏற்பட ஆரம்பித்துவிட்டது.
நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்திருந்தால் தமிழ் மக்களுக்கு ஏற்றவாறான தீர்வுத்திட்டத்தை பெற முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தொடர்ச்சியாக கூறிவருகின்றார். அவரின் அந்த நம்பிக்கை மீது மக்களும் பாரிய நம்பிக்கை வைத்திருந்தனர். அதுமட்டுமன்றி தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இந்த தீர்வுத்திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக பெரும்பாலான விடயங்களில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றது.
குறிப்பாக ஏனைய எதிர்க்கட்சிகளினால் கடுமையாக விமர்சிக்கும் வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பானது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றது. அவ்வாறு ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் எங்கே தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இந்தத் தீர்வு விவகாரத்தில் ஏமற்றப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகின்றது.
தற்போதைய இந்த இரண்டு கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை பார்க்கும் போது அது இரண்டு கட்சிகளுக்குமிடையில் பாரிய பகையை உருவாக்கிவிடும் சூழல் காணப்படுகின்றது. அவ்வாறு இரண்டு கட்சிகளுக்குமிடையில் பகை உருவாகுமிடத்து அது தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தையே கடுமையாக பாதிப்பதாக அமையும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தீர்வுத்திட்ட விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு காணப்பட்டது. அதுமட்டுமன்றி நீண்டகாலத்திற்குப் பின்னர் இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்ததால் அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பம் அருகில் வந்ததாகவே உணரப்பட்டது.
இந்த அரிய சந்தர்ப்பத்தில் தீர்வு காணாவிடின் அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பம் மிகவும் தொலைவிலேயே இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் அந்த அருமையான சந்தர்ப்பத்திலும் தற்போது பயன்பெறாத சூழல் உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.
இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையில் முரண்பாடுகளும் நெருக்கடிகளும் குறைவாக இருந்த சந்தர்ப்பத்தில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மேலோங்கி காணப்பட்டது. ஆனால் தற்போது இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையில் முரண்பாடுகள் மேலோங்கி வருகின்ற நிலையில் தீர்வுத்திட்டம் என்பது கானல்நீராகிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.
ஆனால் இந்த நிலைமை நீடித்து செல்லுமாயின் அதாவது இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையிலான முரண்பாடுகள் தொடர்ந்து அதிகரிக்குமாயின் தீர்வுக்கான சந்தர்ப்பமானது குறைவடைந்து செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இரண்டு பிரதான கட்சிகளும் இந்த நிலைமையை உணர்ந்துகொள்ளவேண்டும். ஆட்சி ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை தீர்வுத்திட்டம் தொடர்பில் உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டிருந்தபோதும் அது மக்களின் அரசியல் அபிலாஷைகளை பிரதிபலிக்கின்றதா என்ற சந்தேகம் பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்டு வருகின்றது. அதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சில விடயங்கள் இருப்பதாகவே கூறப்பட்டது.
ஆனால் இரண்டு கட்சிகளும் இணைந்து இருக்கின்ற சூழலிலேயே இந்த இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டது. அப்படி இருந்தபோதிலும் இரண்டு கட்சிகளும் இந்த இடைக்கால அறிக்கையில் கடுமையாக முரண்பட்டுகொண்டன.
இந்நிலையில் தற்போது இந்த பிரதான இரண்டு கட்சிகளுக்குமிடையில் முரண்பாடு அதிகரித்து செல்கின்ற நிலையில் எங்கே இந்த தீர்வுத்திட்ட விவகாரத்தில் தற்போது இருக்கின்ற இணக்கப்பாடானது எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடுமா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
குறிப்பாக தீர்வுத் திட்டம் சாத்தியமாக இருந்த சந்தர்ப்பத்திலும் கூட இரண்டு கட்சிகளும் முழுமையாக இணக்கப்பாட்டிற்கு வராத நிலையில் தற்போது இரண்டு கட்சிகளுக்குமிடையில் பாரிய முரண்பாடு அதிகரித்துள்ள நிலையில் எதிர்கால நடவடிக்கைகள் கேள்விக்குறியாகவே அமைந்திருக்கின்றன.
எவ்வாறெனினும் இந்த ஆட்சிக்காலத்திற்குள்ளே தீர்வை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்பதில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மிகவும் உறுதியாக இருக்கின்றார். அதற்காகவே பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அவர் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றார்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் நம்பிக்கை எந்தளவு தூரம் சாத்தியமாகும் என்பது தற்போது சந்தேகத்திற்கிடமாகிறது. காரணம் வரலாற்றைப் போலவே பிரதான கட்சிகள் தற்போது தமது கைவரிசையை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளன.
அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
“” நாம் தீர்வுகள் வழங்கும் நகர்வுகளை ஆரம்பித்து முன்னெடுத்து சென்றுகொண்டுள்ளோம். அரசியல் அமைப்பு விவகாரத்தில் நாம் ஆரம்பித்த சில விடயங்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பின் மூலமாக சகல மக்களுக்கும் தீர்வுகளை பெற்றுத்தரும் முயற்சிகளை நான் முன்னெடுத்து வருகின்றேன்.
அவை பூர்த்திசெய்யப்பட வேண்டும். இது இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனநாயக ரீதியாக செயற்படும் முதல் சந்தர்ப்பம் என நான் கருதுகிறேன். விரைவில் நான் அரசியல் தீர்வை பெற்றுத் தருவேன் என்று பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார்.
ஆனால் பிரதமர் என்னதான் இவ்வாறு கூறினாலும் அரசியல் கள நிலைமைகள் அதற்கேற்ற வகையில் உருவாக்கப்படுகின்றதா என்பதே கேள்வியாகும். தற்போதைய இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளையும் நெருக்கடிகளையும் பார்க்கும்போது அரசியல் தீர்வு என்பது மீண்டும் மறக்கடிக்கப்படும் ஒரு விடயமாகவே இருந்து வருவதையே காண முடிகின்றது. அப்படியானால் புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்த நம்பிக்கை?
ரொபட் அன்டனி